Sunday, June 17

இலங்கை தொடர்பில் இரண்டு அறிக்கைகளை சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நாவிடம் ஒப்படைப்பு! கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்!



இலங்கை தொடர்பில் இரண்டு அறிக்கைகளை சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை அமர்வுகளில் ஒரு அறிக்கையும், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளில் மற்றுமொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் இல்லாதொழிக்கத் தவறியுள்ளதாகவும் இதனால் அடக்குமுறைகள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால மீளாய்வில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.


தேசிய மனித உரிமைப பேரவையின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை நீடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மாற்றுக் கருத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் எதிரிகள் கால வரையறையின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலவந்தமான கடத்தல்கள், காணாமல் போதல்கள், சித்திரவதைச் சம்பவங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாமை இலங்கையில் தொடர்ந்தும் நீடித்தால், அரசாங்கம் அதனைத் தடுத்த நிறுத்தத் தவறினால் ஐக்கிய நாடுகள் அமைப்பு காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
இரண்டாம் இணைப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 20வது அமர்வு நாளை ஆரம்பம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 20வது அமர்வு நாளை தொடக்கம் வரும் ஜுலை 6ம் நாள் வரை இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதி தூதுவர் மனிசா குணசேகர தலைமை தாங்குவார்.
இதில் மனித உரிமைகள் அபிவிருத்தி, மீள்குடியமர்வு, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை இலங்கை சமர்ப்பிக்கவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் இலங்கையின் சார்பில் பங்கேற்கும் குழுவில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சவீந்திர பெர்னான்டோ, மனிதஉரிமைகள் தொடர்பான அமைச்சு ஆலோசகர் நிசான் முத்துக்கிருஸ்ணா ஆகியோருடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
இலங்கையில் இருந்து செல்லும் குழுவின் இணைப்பாளராக நிசான் முத்துக்கிருஸ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் இலங்கையில் இருந்து அமைச்சர்கள் எவரும் பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment