Thursday, June 21

அமைச்சர் சம்பிக்கவின் உருவப்பொம்மை எரித்து தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் பேச்சை விமர்சித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளியிட்டிருந்த கருத்துக்கு எதிராக இன்று வியாழக்கிழமை தமிழகத்தில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் உருவப்பொம்மையை எரித்துள்ளதுடன் இலங்கையின் தேசியக் கொடியையும் கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியதை அடுத்து அவர்களின் 15பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் சம்பிக்கவின் கருத்து இலங்கைத் தமிழ் மக்களை அச்சுறுவத்துவதாக அமைந்துள்ளது என்றும், அமைச்சரின் கருத்தைக் கண்டித்தும் சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

'அமைச்சர் சம்பிக்கவின் பேச்சுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசுடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும். அமைச்சர் சம்பிக்கவை கைது செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கோஷம் எழுப்பியுள்ளனர்.

அத்துடன், ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் உருவபொம்மையை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கையின் தேசியக் கொடியையும் கிழித்தெறிந்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களில் சுமார் 15பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. (நக்கீரன்)

No comments:

Post a Comment