5000 ரூபா நோட்டினை 500 ரூபா நோட்டு என நினைத்து மாற்றக் கொடுத்து ஏமாந்த செங்கல் வெட்டுத் தொழிலாளர் ஒருவர் மனம் வெதும்பி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் சீகிரியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சீகிரியா சியம்பளா வெவ என்ற கிராமத்தைச் சேர்ந்த டோவிட் கமகே பியசேன மற்றும் இவரது மனைவி பீ. ஜீ. ரம்யா குமாரி ஆகிய இருவரும் செங்கல் வெட்டும் தொழிலை மேற்கொண்டு வந்தனர்.
இவர்களுக்கு 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலையில் செங்கல் விற்பனை மூலம் கிடைக்கப் பெற்றிருந்த 13 ஆயிரத்து 500 ரூபா பணத்திலிருந்து 500 ரூபா நோட்டை தனது 12 வயது மகனிடம் கொடுத்து கமகே பியசேன அதனை அருகிலுள்ள கடையில் கொடுத்து சில்லறை மாற்றி, 200 ரூபாவை செங்கற்களை வண்டியில் ஏற்றுவதற்கு உதவியவருக்குக் கூலியாகக் கொடுத்து விட்டு, எஞ்சம் 300 ரூபாவும் கொண்டு வந்து தரும்படி கூறியுள்ளார்.
மகனும் தந்தை கூறியவாறு 500 ரூபாவை அவசரமாக மாற்றித் தருமாறு கூறியுள்ளார். இதனை அவதானித்த அங்கிருந்த நபரொருவர் "நான் மாற்றித் தருகிறேன்" எனக் கூறி 500 ரூபா நோட்டுக்களைச் சிறுவனிடம் கொடுத்தனுப்பியுள்ளார்.
சற்று நேரத்தின்பின் சமையற் கட்டிலிருந்து வெளியே வந்த சிறுவனின் தாய் ரம்யா குமாரி, மகன் கொண்டுவந்திருந்த எஞ்சிய 300 ரூபா பண நோட்டுக்களைப் பார்த்துப் பதறியடித்துக்கொண்டு கணவனிடம், சென்று காலையில் "5,000 ரூபா" நோட்டொன்றை தான் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
பார்வை சற்றுத் தெளிவில்லாத அவரது கணவனும் தனது தவறை உணர்ந்து மனைவியையும், மகனையும் குறித்த கடைக்கு அனுப்பினார். குறித்த நபரிடம் சென்று 5000 ரூபா நோட்டைத் தவறுதலாக 500 ரூபா நோட்டு என மகன் கூறிவிட்டான் எனவும் எஞ்சிய பணத்தைத் தருமாறும் கெஞ்சிக் கேட்டான்.
இது பாடுபட்டு பெற்ற பணம் எனவும், இரண்டு, 5000 நோட்டுக்களும் மூன்று 1000 நோட்டுக்களும், ஓர் 500 ரூபா நோட்டுமாக மொத்தமாக 13,500 ரூபா ரூபாவை தாம் பெற்றிருந்ததாகவும், தம்மிடம் தற்போது எஞ்சியிருப்பது ரூபா 8500 ரூபா மாத்திரமே என்று நோட்டுக்களைக் காட்டினார். அழுது மன்றாடிக் கேட்டுள்ளனர். எனினும் அதை அவர்கள் ஏற்கவில்லை.
இதனையடுத்து அன்றைய தினம் (கடந்த செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் டாவிட் கமகே பியசேன (58 வயது) கவலை மேலீட்டால் மனமுடைந்து கிருமிநாசினி அருந்தி தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டநிலையில் தம்புள்ள டென்சில் கொப்பேகடுவ வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார்.
No comments:
Post a Comment