Saturday, November 19

சரத் பொன்சேக்காவை குற்றமற்றவராக கருதி விடுதலை செய்யுமாறு தீர்ப்பளித்த நீதிபதி


வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், குறித்த அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஆறு மாத கால சிறைத் தண்டனையை பொன்சேக்கா அனுபவிக்க நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளது.எனினும் இந்தத் தீர்ப்பிற்கு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் ஒரு நீதிபதி இனங்கவில்லை.முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா மீதான வெள்ளைக்கொடி விவகார வழக்கின் விசாரணைகள் தீபாலி விஜேசுந்தர, ஏ.இசெட்.ரசீன் மற்றும் டப்ளியூ.எம்.ரி.பி.வராவெவ ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றன.இந்த வழக்கிற்கான தீர்ப்பு அறிவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் மேல் நீதிமன்ற வளாகத்தை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துமாறு வாழைத்தோட்ட பொலிஸார் நேற்று நீதமன்றத்திடம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் நீதிமன்ற வளாகத்தில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா சிறைச்சாலை அதிகாரிகள் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இதன்போது அனோமா பொன்சேகா உள்ளிட்ட சரத் பொன்சேக்காவின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் பலர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

வெள்ளைக்கொடி ஏந்திவந்த விடுதலை புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அப்போதைய பிரிகேடியர் சவேந்திர சில்வாவிற்கு ஆலோசனை வழங்கியதாக சன்டேலீடர் பத்திரிகைக்கு சரத் பொன்சேக்கா தெரிவித்ததாக கூறப்படும் கருத்தொன்றை அடிப்படையாகக் கொண்ட முதலாவது குற்றச்சாட்டில் அவரை குற்றவாளியாக நீதிமன்றம் தீர்மானித்தது.

நீதிபதிகள் குழாமில் அங்கம் வகித்த நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் ஏ.செட்.ரசீன் ஆகியோர் சரத்பொன்சேக்காவிற்கு இந்த தண்டனையை விதித்து தீர்ப்பளித்தனர்.

எனினும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமில் மற்றைய நீதிபதியான டப்ளியூ.எம்.ரீ.பி.வராவெவ சரத் பொன்சேக்காவை குற்றமற்றவராக கருதி விடுதலை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார்.

சரத் பொன்சேக்கா குற்றவாளியாக காணப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்த போதிலும், நீதிபதிகளின் மாறான தீர்ப்பு குறித்து முழுமையாக அறிவிக்கப்படவில்லை என நியூஸ்பெஸ்டின் நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் கருத்து வெளியிட்ட சரத் பொன்சேக்கா, இதனை நியாயமான தீர்ப்பாக தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறினார்.

தாம் கட்டளையிட்ட இராணுவத்தினர் யுத்த வெற்றியின் போது யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை தாம் உறுதியாக நம்புவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அவர்கள் தனது கட்டளைகளுக்கு அமைய சர்வதேச சட்டங்களுக்கு, மதிப்பளித்து மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் யுத்தக் களத்தில் போராடியதாக பொன்சேக்கா தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளிடம் இருந்து தம்மை தொடர்ந்தும் பிரித்து வைப்பதுடன், இந்த அநீதியை இயற்கை நியதிகள் கூட ஏற்றுக் கொள்ளாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மக்களின் நீதியான சமூகத் தீர்ப்பு மாத்திரமே தம்மை பாதிக்கும் எனவும், தம்மை விடுதலை செய்யுமாறு தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு தலை வணங்குவதாகவும் பொன்சேக்கா நீதிமன்றத்தில் கூறினார்.

இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி பிரதம நீதியரசரினால் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 29ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பொன்சேக்காவிற்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பொன்சேக்கா தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி விவகாரத்தின் காரணமாக மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துதல், இனவாதத்தை தூண்டுதல் மற்றும் அமைதியின்மையைத் தோற்றுவித்தல் ஆகியவற்றிற்கு அவர் முயற்சித்ததாக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு எதிராக மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினர் வழங்கிய தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீடு செய்வதற்கு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டத்தரணி நலின் லந்துவஹெட்டி தெரிவித்தார்.

இதற்கமைய மேன்முறையீட்டு மனு எதிர்காலத்தில் உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய தற்போது இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையை சரத் பொன்சேக்கா அனுபவித்து வருகிறார்.

இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் சரத் பொன்சேக்காவை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்குத் தயாரான சந்தர்ப்பத்தில் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஆதரவாளர்கள் சரத் பொன்சேக்காவை சூழ்ந்துகொண்டனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பொன்சேக்காவை அழைத்துச் சென்றனர்.(சக்தி)

No comments:

Post a Comment