Thursday, June 28

முதலமைச்சர் பதவி தொடர்பிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படும்: முஸ்லிம் காங்கிரஸ்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் பதவியை தமது கட்சிக்கு வழங்கும் கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் சரியான இணக்கப்பாடு ஏற்படுத்த முடியாவிட்டால் தனித்து போட்டியிட நேரிடும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Wednesday, June 27

விருத்தசேதனம் (கத்னா) செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஜேர்மனிய நீதிமன்றம் இன்று தீர்ப்பு

மத  ரீதியாக  விருத்தசேதனம்(கத்னா) செய்வதை ஜேர்மனிய நீதிமன்றம் இன்று முதல் தடை செய்துள்ளது .இதையடுத்து அங்கு விருத்த சேதனம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்
இந்த தடையை முஸ்லீம் , யூத குழுக்கள் கடுமையாக கண்டித்துள்ளன
ஜெர்மனியின் கொலோன் நகரில் உள்ள நீதி பாதுகாப்பு அதிகாரசபை  நீதிமன்றம்  ,மத ரீதியான விருத்த சேதனத்தை இன்று  தடை செய்துள்ளதுடன் அது உடலுக்கு சேதம் விளைவிப்பதாகவும்  தெரிவித்துள்ளது

மர்ஹூம் அஷ்ரப்பின் மரணம் தொடர்பான ரிவிர பத்திரிகையின் விஷமக் கட்டுரைக்கு ஹக்கீம் கண்டனம்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் உடைய மர்ம மரணம் தொடர்பான துப்பு இன்னும் துலக்கப்படாத நிலையில், அது தொடர்பான புதிய கண்டுபிடிப்பொன்றை இம் மாதம் 24 ஆம் திகதி பிரசுரமான ‘ரிவிர’ என்ற சிங்களப் பத்திரிகையின் ஞாயிறு வெளியீடு அதன் 27 ஆம் பக்கத்தில் கட்டுரையாக பிரசுரித்துள்ளது.
பௌத்த சாசனத்திற்கு அரசர்கள் தானம் செய்த சொத்துக்களையும், நிலபுலன்களையும் நாசமாக்கிய ஒருவருக்கு சாபத்தின் காரணமாக கடவுள் வழங்கிய தண்டனையே அவரை ஆகாயத்தில் தீயினால் சுட்டுப் பொசுக்கியதாக தெரிவிக்கும் அந்தப் புதிய கண்டுபிடிப்பு முஸ்லிம்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அதனை வன்மையாக கண்டித்துள்ளார்.

வாக்காளர் பதிவுப் பட்டியல் இணையத்தில் இணைக்கப்படும்

வாக்காளர் பதிவுப் பட்டியலில் தமது பெயர் உள்ளதா என்பதை இணையத்தின் மூலமாக பரீட்சிப்பதற்கு ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின் இலங்கை வாக்காளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.

இலங்கை வாக்காளர் பதிவுப்பட்டியல் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இறுதியாக பூர்த்தியாக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பட்டியலை இணையத்தின் மூலம் பார்வையிட முடியும்.

தமது பெயர் வாக்காளர் பதிவுப் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையிலுள்ள, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இது மிக உதவிகரமான சேவையாக அமையும்.

2011 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவுப் பட்டியல் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தமது பெயர் இல்லாதவர்கள் அப்பட்டியலில் பெயர்களை இணைக்க விண்ணப்பிக்க முடியாது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். எவ்வாறெனினும், 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுக்கு அவர்கள் விண்ணப்பிக்க முடியும் என அவர் கூறினார்.

இலங்கை அரசுக்கு இரண்டு வார காலக்கெடு!- புதிய பௌத்த வழிபாட்டு நிலையத்தை அகற்ற புத்த பல சேனா எச்சரிக்கை

காலி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சமஸ்த லங்கா சிறி சுமேத சங்கமய என்ற புதிய பௌத்த வழிபாட்டு நிலையத்தை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகளின் அமைப்பு ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசத்தைக் கொடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இலங்கை அரசுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு கருத்து வெளியிட்ட பௌத்த கலாசார நிலையத்தின் பணிப்பாளர் வண.கிரம விமலஜோதி தேரர்,
இலங்கையின் பௌத்த விவகார அமைச்சு தனது கடமையைச் சரிவரச் செய்யத் தவறி விட்டது. பௌத்தத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை இலங்கை அரசாங்கத்தினுடையது.

தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது இனவாதத்தை தூண்டும்செயல்!- தேசிய பிக்குகள் முன்னணி


வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தை தூண்டும் செயல் எனவும், யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தேசிய பிக்குகள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
தெற்கிலுள்ள விகாரைகளைப் புனரமைப்பதற்கு, பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காத அரசு, வடக்கு, கிழக்கில் விகாரைகளை அமைத்து அதீத மதப்பற்றை வெளிப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது எனவும் அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.

Tuesday, June 26

தீர்வில் பங்கு கோரும் முஸ்லிம் தலைவர்கள், போராட்டத்திலும் பங்கு பெற வேண்டும்! மனோ கணேசன்


தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும்போது அதில் தமக்கும் பங்கு வேண்டும் என்றும், தாமும் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் என்றும் உரிமை கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தீர்வை தேடி தமிழ் கட்சிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்தும் போராட்டங்களிலும் பங்கு பெற வேண்டும். உண்மையில் தமிழ் பேசும் மக்களை அடக்கியாள நினைக்கும் மேலாதிக்கவாதத்திற்கு எதிராக போராட முஸ்லிம் மக்கள் தயாராக இருக்கின்றார்கள்.

உயர்தரப் பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும்


2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும் என  கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Monday, June 25

புதிய மற்றும் பழைய முறையில் இசெட் புள்ளிகளை மீள் கணிப்பிடுமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பு


புதிய மற்றும் பழைய முறையில் இசெட் புள்ளிகளை மீள் கணிப்பிடுமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்புகடந்த வருடம் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான இசெட் புள்ளிகளை புதிய மற்றும் பழைய திட்டத்தின் அடிப்படையில் வெவ்வேறாக கணிப்பிடுமாறு உயர் நீதிமன்றம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி கடந்த வருடம் இசெட் புள்ளி கணிக்கப்பட்ட முறையை இரத்து செய்யுமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் சிலர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்து இன்று (25) தீர்ப்பளித்துள்ள பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தலைமையிலான உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

காலியில் பௌத்த வழிபாட்டு நிலையம் மீது பிக்குகள் தாக்குதல்

 
 
காலியில் புதிதாக அமைக்கப்பட்ட பௌத்த மதப் பிரிவு ஒன்றின் மீது பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்றுமாலை காலியில் உள்ள வந்துரம்ப என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு புதிய பௌத்த மதப் பிரிவான சுமேத சங்கமயவின் சார்பில் ஏழு மாடிக் கட்டடம் ஒன்றில் பௌத்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மீது நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகளும், ஆயிரக்கணக்கான சிங்களவர்களும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
பௌத்த சித்தாந்தம் தவறானது என்று இந்த புதிய மதப் பிரிவினர் பரப்புரை செய்வதாக, தாக்குதல் நடத்தியோர் குற்றம்சாட்டியுள்ளனர். வந்துரம்ப நகரில் நேற்றுமாலை இடம்பெற்ற கூட்டம் ஒன்றையடுத்தே, இந்த புதிய மதப் பிரிவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பௌத்த நிலையம் மீது தாக்குதல் நடத்தியோரை, பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.