பவுத்தர்களுக்கு புனிதமான
தலமாகக் கருதப்படும் தலதா மாளிகைக்கு முன்னால் அண்மையில் பிக்கு ஒருவர் தீ
மூட்டித் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் போபித்த இந்திரரத்தின
தேரர். கொழும்புக்கு தென் கிழக்கே இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள
காகவத்தையில் உள்ள விகாரையில் வாழ்பவர். அகவை 30 மட்டுமே.
பவுத்தமத அடிப்படைவாதியான
இவர் பல பவுத்த கடும் போக்கு அமைப்புகளில் இருந்திருக்கிறார். சாகும் போது
இந்திரரத்தின தேரர் சிங்கள இறாவய (சிங்களவரின் குரல்) என்ற அமைப்பில்
இருந்தார்.
அதற்கு முன்னர் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியில்
இருந்திருக்கிறார். மசூதிகள் தாக்கப்பட்ட போது, முஸ்லிம்களது கடைகள்
எரிக்கப்பட்ட போது இந்திரரத்தின தேரர் அதில் பங்கு பற்றி இருக்கிறார்.
இந்திரரத்தின தேரரின் உடல்
கொழும்பில் எரிக்கப்பட வேண்டும் என்று கோரி தீவிர பவுத்த தேரர்கள் குரல்
எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தீக்குளித்த தேரரது இலட்சியத்தைப்
பரப்ப நாடு முழுதும் மாடுகள் இறைச்சிக்குக் கொல்லப்படுவதை எதிர்த்து குரல்
எழுப்பப் போவதாகச் சூளுரைத்துள்ளார்கள்.
வெசக் கொண்டாட்டத்தின்
போது மாடுகள் இறைச்சிக்குக் கொல்லப்படுவததை எதிர்த்தே பவுத்த தேரர்
தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார் எனச் சொல்லப்படுகிறது. ஒரு தேரர்
ஒருவர் இந்தப் பாணியில் தற்கொலை செய்து கொண்டது வரலாற்றில் இதுவே முதல்
தடமை என்கிறார்கள்.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 109
திபத்திய பவுத்த தேரர்கள் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்கள்.
சீனாவின் மேலாதிக்கத்தை எதிர்த்து இவர்கள் தீக்குளித்தார்கள். ஆனால்
இந்தத் தீக்குளிப்பை திபத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா ஆதரிக்கவில்லை.
வியட்நாம் மீது அமெரிக்கா போர் மேற்கொண்டிருந்த காலத்தில் அதனை எதிர்த்துப் பல பவுத்த பிக்குகள் தீக்குளித்து இறந்தார்கள்.
இந்திரரத்தின தேரர் ஒரு
காடையர் என்றும் மத்திய கிழக்கில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப்
பலபேரிடம் பல கோடிகளை விழுங்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் இவருக்கு
எதிரக வீசப்படுகின்றன. இதன் உண்மை பொய் தெரியவில்லை. அவர் ஒரு பவுத்த மத
அடிப்படைவாதி என்பது மட்டும் உண்மை.
பெரும்பான்மை சிங்கள
பவுத்தர்கள் இறைச்சி, மீன் சாப்பிடுகிறார்கள். பவுத்த தேரர்களும் இறைச்சி,
மீன் சாப்பிடுகிறார்கள். இறைச்சி தவிர்த்து மீன் சாப்பிடுகிற பவுத்தர்கள்
தங்களை மரக்கறி உண்பவர்கள் என்றே சொல்கிறார்கள். சிறுபான்மையினரே
மாட்டிறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். மாடுகள் புனிதமானவை என்பதே
அதற்கான காரணமாகும்.
பவுத்தம் கொல்லாமையை
வற்புறுத்தினாலும் தேரர்கள் இறைச்சி சாப்பிடுவதை தடுக்கவில்லை. ஆனால் ஒரு
நிபந்தனை. பவுத்த தேரர்கள் மட்டும் சாப்பிடுவதற்கு ஆடு, மாடுகளைக்
கொல்லக் கூடாது. மற்றவர்களுக்காக கொல்லப்பட்ட ஆடு, மாடுகளின் இறைச்சியை
மட்டுமே அவர்கள் சாப்பிடலாம்.
பவுத்த தேரர்கள் பிச்சை
எடுத்தே ஒரு நாளில் இருமுறை பகலில் உண்ண வேண்டும். புத்தரே வீடு வீடாகப்
பிச்சை எடுத்துச் சாப்பிட்டார். அப்படிப் பிச்சை கேட்கும் போது
வீட்டுக்காரர் சமைத்த சாப்பாட்டத்தைத்தான் சாப்பிட வேண்டும். “நான்
இறைச்சிக் கறி சாப்பிடுவதில்லை, மரக்கறி உணவு போடுங்கள்” என்றால் பட்டினி
இருக்க வேண்டி நேரிடும். அதனால் பவுத்த தேரர்கள் இல்லறத்தார் கொடுத்ததை
உண்டார்கள்.
புத்தர் ஒரு
யதார்த்தவாதி. தென்துருவம் – வடதுருவம் என்ற இரு துருவத்துக்கும் இடையில்
உள்ள நடுவழியை அவர் கைக்கொண்டார். புத்தர் வாழ்ந்த காலத்தில் வைதீக மதம்
யாகத்தில் ஆடு, மாடு, குதிரை போன்றவை பலிகொடுக்கப்பட்டன. பின் வெந்த
அவற்றின் இறைச்சியைச் சாப்பிட்டார்கள். இது வைதீக மதம் கொல்லுதலில்
விருப்பத்தைக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது. சமணம் கொல்லாமையில்
விருப்பத்தைக் கொண்டிருந்தது. இதனால் பல் விளக்காமல் ஊத்த வாயர்களாகத்
திரிந்தார்கள். ஆனால் புத்தரின் அஹிம்சை முற்றிலும் நடுநிலைப் பாதையைக்
கொண்டதாய் இருந்தது.
புத்தரே மாமிச உணவு உண்டு வந்தார். அவர் கடைசியாகச்
சாப்பிட்டது பன்றிக் கறியாகும். இந்த உண்மையைச் சொல்வதில் பிற்காலத்திய
பவுத்தர்கள் மிகவும் கூச்சப்பட்டார்கள். மாமிச உணவு உண்பதில் புத்தர்
நீக்குப்போக்காக இருந்த காரணத்தால் தான் தனது மார்க்கத்துக்கு
சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் அவரால் ஈர்க்க முடிந்தது.
வெசக் நாள்கள் மட்டும் மாடுகளைக் கொல்லக் கூடாது
என்றால் மற்ற நாள்களில் மாடுகளைக் கொல்லலாமா? என்ற கேள்வி எழுகிறது.
மேலும் மாட்டைக் கொல்லக் கூடாது என்றால் ஆடு, பன்றி, கோழியைக் கொல்லலாமா?
ஆடு, மாடுகளை முஸ்லிம்கள் மட்டும் கொல்லுகிறார்கள் என்றில்லை. சிங்களவர்களும் கொல்லுகிறார்கள். அவர்களில் சிலர் பவுத்தர்களாகவும் இருக்கக் கூடும். தமிழர்களும் கொல்லுகிறார்கள். சைவ உணவகங்களில் சைவப் சாப்பாடே வழங்கப்படுகிறது. ஆனால் சிங்களவர்களுக்குச் சொந்தமான கடைகளில் இறைச்சி, மீன் வழங்கப்படுகிறது.
மாடுகளைக் கொல்லலாமா? இல்லையா? இவற்றுக்கான பதிலைத் தேடுமுன் பவுத்த மதத்தின் அடிப்படை கோட்பாடுகள் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஆடு, மாடுகளை முஸ்லிம்கள் மட்டும் கொல்லுகிறார்கள் என்றில்லை. சிங்களவர்களும் கொல்லுகிறார்கள். அவர்களில் சிலர் பவுத்தர்களாகவும் இருக்கக் கூடும். தமிழர்களும் கொல்லுகிறார்கள். சைவ உணவகங்களில் சைவப் சாப்பாடே வழங்கப்படுகிறது. ஆனால் சிங்களவர்களுக்குச் சொந்தமான கடைகளில் இறைச்சி, மீன் வழங்கப்படுகிறது.
மாடுகளைக் கொல்லலாமா? இல்லையா? இவற்றுக்கான பதிலைத் தேடுமுன் பவுத்த மதத்தின் அடிப்படை கோட்பாடுகள் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
சமய தத்துவங்கள் வேறு. சமய நடைமுறைகள் வேறு. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். இதனை நாம் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும்.
பவுத்த மதத்தின் அடிப்படை
கோட்பாடுகள் மிகவும் எளிதானவை. மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை
காட்ட வேண்டும் என்பது பவுத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும். புத்தர்
உயிர்கள் மூவகைப் பட்டதென்று சொன்னர். அவை மனிதர், விலங்குகள், தாவரங்கள்
என்பன. இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக்கூடாத என்றார். தீங்கு
விளைவித்தால் அது எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டப்பட வேண்டும் என்ற
கோட்பாட்டுக்கு தீங்கு விளைவித்ததாக முடியும்.
மேலும் உலகில் நான்கு
வாய்மைகள் உண்டு. அவற்றை அறிந்து அதில் இருந்து விடுபட அட்டாங்க
மார்க்கத்தை ஒருவன் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி அவன் அட்டாங்க
மார்க்கத்தை கடைப்பிடிப்பானேயானால் அவன் மறுபிறப்பை அறுத்து நிர்வாணம்
அல்லது வீடுபேறு அடைவான். இதுதான் பவுத்த மதத்தின் அத்திவாரம்.
நான்கு வாய்மைகள் எவை? அட்டாங்க மார்க்கம் எவையெவை? நான்கு வாய்மைகள் ஆவன:
(1) துன்பம்.
(2) துன்ப காரணம்.
(3) துன்ப நீக்கம்.
(4) துன்பம் நீக்கும் வழி.
பாலிமொழியில் இவை துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என அழைக்கப்படுகிறது.
அட்டாங்க மார்க்கம் எவையெவை?
(1) நற்காட்சி (ஸ்ம்மா திட்டி) - மேலே கூறப்பட்ட நான்கு வாய்மைகளை (சத்தியங்களை) நன்றாக ஆழ்ந்து சிந்தித்து அறிந்து கொள்வது.
(2)
நல்லொழுக்கம் (ஸம்மா ஸங்கப்போ) – தன்னலத்தை மறந்து எல்லா
உயிர்களிடத்திலும் அன்பாக இருத்தல். வாழ்க்கையின் நோக்கம் பிறவித்
துன்பத்தில் இருந்து விடுதலை அடைவதுதான் இலட்சியம் என்னும் எண்ணத்தோடு
எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பையும் நல்லெண்ணத்தையும் வளர்த்தல்,
சிற்றின்ப எண்ணங்களை ஒழித்தல்.
(3)
நல்வாய்மை (ஸம்மா வாசா) – பொய் சொல்லுதல், புறங்கூறுதல், கடுமொழி பேசுதல்,
அவதூறு கூறல், பயனில்லாப் பேச்சுக்களைப் பேசுதல் முதலியவற்றை நீக்கி
உண்மையே பேசுவது. பேசும்போது அன்பாகவும் இனிமையாகவும் பேசுதல்.
(4)
நற்செய்கை (ஸம்மா கம்மதோ) – கொலை செய்தல், களவு செய்தல், காமம் விளைத்தல்
முதலிய பாவமும் தீமையும் ஆன செயல்களைச் செய்யாமல் நற் செயல்களைச் செய்து
கொண்டு ஒழுக்கமாகவும் அமைதியாகவும் இருத்தல்.
(5)
நல்வாழ்க்கை (ஸம்மா ஆஜீவோ) – அடிமைகளை விற்பது, மாமிசத்துக்காகப்
பிராணிகளை விற்பது, மயக்கந்தருகிற கள், மதுபானம், அபினி முதலிய பொருள்களை
விற்பது, கொலைக்குக் காரணமான கத்தி, ஈட்டி, வாள், அம்பு முதலிய ஆயுதங்களை
விற்பது, சூதுவாது செய்வது. இவற்றை விலக்கி அகிம்சையை மேற்கொண்டு வாழ்தல்.
(6)
நன்முயற்சி (ஸம்மா வியாயாமோ) – தீய எண்ணங்களும் தீய செயல்களும் தன்னிடம்
உண்டாகாமல் தடுத்து நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் வளர்ப்பது
நன்முயற்சி எனப்படும். தீய எண்ணங்கள் மனத்தில் தோன்றினால் அவற்றை
முயற்சியோடு தடுத்து நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
(7)
நற்கடைப்பிடி (ஸம்மா ஸதி) – உடம்பின் நிலையாமையை ஆழ்ந்து சிந்தித்து
ஐம்பொறி ஐம்புலன் இவைகiளின் உண்மைத் தன்மையை உணர்தல். இவ்விதம் சிந்திப்பது
மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு உதவியாகும்.
(8)
நற்றியானம் (ஸம்மா ஸமாது) - மனதைச் சிதறவிடாமல் அடக்கிக் நல்ல எண்ணங்களை
நினைத்து மனத்தை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். இந்தச் சமாதிப் (மன
அடக்கம்) பழக்கம், புலன்களையும் மனத்தையும் அடக்கியாள உதவுகிறது. அஞ்ஞானம்,
ஆசை, பகை முதலிய தீய எண்ணங்கள் நீக்கி ஞானம் வளர உதவுகிறது.
பவுத்த மதத்தில் இல்லறம்
துறவறம் என இரண்டு அறங்களே உள்ளன. இல்லறத்தாராகிய சாவக நோன்பிகள்
மும்மணிகளை வணங்கி பஞ்சசீலங்களைக் கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும். ஆனால்
இல்லறத்தார் பிறவா நிலையாகிய நிருவாண மோட்சம் அடைய முடியாது. துறவறத்தில்
நின்றவர்கள் மும்மணிகளை வணங்கி மேலே கூறியவாறு பத்துவகைச் சீலங்களை
மேற்கொண்டு, நான்கு வாய்மைகளைக் கடைப் பிடித்து, அட்டாங்க மார்க்கத்தில்
ஒழுகி, ஞானம், யோகம் இவற்றை அனுட்டித்தால் பிறவா நிலையாகிய அல்லது
பேரின்பமாகிய நிருவாண மோட்சத்தை அடைவார்கள்.
பவுத்த சமயத்தவர்,
துறவறத்தாரும் இல்லறத்தாரும் புத்தம், தர்மம், சங்கம் என்னும் மும்மணிகளைச்
சரண் அடைய வேண்டும். இதற்குத் திரிசரணம் என்பது பெயர். இந்த திரிசரணத்தின்
பாலி மொழி வாசகம் இது.
புத்தம் சரணம் கச்சாமி (புத்தரிடம் அடைக்கலம் புகுகிறேன்)
தர்மம் சரணம் கச்சாமி (புத்தரின் போதனைகளிடம் அடைக்கலம் புகுகிறேன்)
சங்கம் சரணம் கச்சாமி (பவுத்த தேரர்களின் சங்கத்திடம் அடைக்கலம் புகுகிறேன்)
தர்மம் சரணம் கச்சாமி (புத்தரின் போதனைகளிடம் அடைக்கலம் புகுகிறேன்)
சங்கம் சரணம் கச்சாமி (பவுத்த தேரர்களின் சங்கத்திடம் அடைக்கலம் புகுகிறேன்)
இம் மும்மணிகளை மும்முறை வணங்க வேண்டும்.
இல்லறத்தில் இருப்பவர்
ஒருவர் பவுத்த சமயியாய் மாறுவதற்கு எந்தவித சடங்கும் இல்லை. ஆனால் பவுத்த
துறவியாக வருவதற்கு விதிமுறைகளும் சடங்குகளும் இருக்கின்றன.
புத்த சங்கத்தில் சேர
விரும்பும் ஒருவர் உலக பந்தங்களைத் துறந்து தலைமுடி, தாடி இவற்றை மழித்து
பவுத்த விகாரை ஒன்றில் இருக்கும் மூத்த தேரரை வணங்கி அவருக்கு விண்ணப்பிக்க
வேண்டும். அதன்பின் கீழே தரையில் அமர்ந்து கைகளைக் கட்டி சம்மணம் கொட்டி
உட்கார்ந்து கொண்டு மும்மணிகளை மூன்று முறை சொல்ல வேண்டும். பின்னர் மூத்த
தேரர் சொல்ல தசசீலங்களைச் சொல்லி அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவேன் என
சத்தியப் பிரமாணம் செய்தல் வேண்டும். இதனை உபசம்பத அல்லது உபநயனம் எனக்
கூறுவர்.
இருபது அகவை நிறைந்த
ஒருவருக்கே குறைந்தது பத்துத் தேரர்கள் முன்னிலையில் இந்த உபநயனம் நடாத்தி
வைக்கப்படும். இருபது வயதுக்குக் குறைந்தவர்கள் மாணாக்க தேரராக சேர்த்துக்
கொள்ளப்படுவர். சேரும்போது பாவம் எதுவும் செய்யாதவராகவும் நோயற்றவராகவும்
உடல் ஊனமற்றவராகவும் கடனாளியாவும் இருக்கக் கூடாது என்பது கேட்டறியப்படும்.
எனவே உண்மையான பவுத்த
மதத்தில் உலக பந்தங்களைத் துறந்து தலைமுடி, தாடி இவற்றை மழித்து துறவு
மேற்கொண்ட தேரர்கள் மந்திர தந்திரம், சோதிடம், மருத்துவம், வாணிகம்,
தொழிற்சங்கம் போன்றவற்றில் ஈடுபட முடியாது. அரசியலில் ஈடுபட இடமே இல்லை.
உயிர்களைக் கொல்லப் கூடாது என்ற கொள்கை பவுத்த மதத்துக்கு அது தோன்றிய காலம் தொட்டு இருந்து வருகிறது.
யாகங்களில் ஆடு மாடு
முதலியவற்றைக் கொல்வது பெரும்பாவம் என்பது பவுத்தமதக் கொள்கை. அதற்கு
நேர்மாறாக, யாகங்களில் ஆடு மாடு குதிரை முதலியவற்றைப் பலியிடவேண்டுமென்பது
பிராமண மதத்தின் கொள்கையாக இருந்து வந்தது. கடைசியாக வைதீக பிராமண மதம்
தனது கொள்கையை விட்டுக்கொடுத்து பவுத்த மதக் கொள்கையாகிய கொல்லாமையை
ஏற்றுக்கொண்டது. அன்றியும் பிராமணர் மாமிசம் உண்டுவந்ததையும் நிறுத்திச்
‘சைவ’ உணவை உண்ணும்படி செய்ததும் பவுத்த மதம்தான். வைதீக மதத்தார் மாமிசம்
உண்பதையும் யாகங்களில் உயிர்க்கொலை செய்வதையும் தடுத்து நிறுத்திய செய்த
பெருமை பவுத்த மதத்திற்கு மட்டும் அல்லாமல் ஆருகத மதத்திற்கும்
உரியதாகும்.
பவுத்தம் தேரர்கள் தற்கொலை செய்வதையோ, தற்கொலை செய்வதைத் தூண்டுவதையோ
தடுக்கிறது. அப்படியான குற்றத்துக்கு தேரர்கள் சங்கத்தில் இருந்து
வெளியேற்றப்பட்டார்கள். ஒருமுறை புத்தரிடம் இரண்டு காதலர்கள் தற்கொலை
செய்து கொண்டார்கள் என்ற செய்தி சொல்லப்பட்டது. அதற்குக் காரணம் அந்தக்
காதலர்கள் சாவுக்குப் பின்னரும் ஒன்றாக இருக்க விரும்பினார்கள் என்று
சொல்லப்பட்டது. ஆனால் புத்தரோ அவா, அறியாமை இரண்டின் காரணமாக அந்தக்
காதலர்கள் அப்படி நடந்து கொண்டார்கள் என்று சொன்னார்.
ஆனால் பிற்காலத்தில் எழுந்த புனை கதைகளில் தற்கொலை நியாயப்படுத்தப்பட்டுள்ளது. பவுத்த
யாதக கதைகளில் புத்தர் தனது முந்திய பிறப்பு ஒன்றில் முயலாக இருந்த போது
நாலு குட்டிகளோடு இரையின்றிப் பட்டினி கிடந்த ஒரு பெண்புலியின் பசியைத்
தீர்க்க தீயில் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக
சொல்லப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் இலங்கையில்
தமிழ் பவுத்தர்கள் இருந்தார்கள். அவர்கள் பவுத்தத்தில் காணப்படும் இரண்டு
பெரும் பிரிவுகளில் ஒன்றான மகாயான பவுத்ததைப் பின்பற்றினார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் வெல்கம் விகாரை இராசராச சோழனால்
இராசராச பெரும்பள்ளி என்று பெயர் மாற்றப்பட்டது. இங்கு பவுத்த பள்ளிக்குத்
தானம் அளித்தவர்களது பெயர்கள் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம்
இராசராச சோழன் (கிபி 985 – 1012) அவனது மகன் இராசேந்திர சோழன் ( கிபி 1012 -1044) காலமாகும். இன்னொன்று விக்கிரம சாலமேகன் பெரும்பள்ளி.
மகாயானம் என்ற ஒரு புதிய
பிரிவு கிபி ஆறாம் நூற்றாண்டளவில் தெனனிந்தியாவில் தோற்றம் பெற்றது.
பவுத்த சமயத்தைத் தழுவிய பிராமணர்களே இந்தப் புதிய பிரிவு தோன்றக் காரணமாக
இருந்தார்கள். இதன்படி மச்சபுராணம், பாகவதபுராணம் என்பற்றில் எடுத்துக்
காட்டப்பட்டுள்ளதை போல புத்தர் ஓர் அவதாரம் என்று ஒரு புதிய கொள்கை
உருவாக்கம் பெற்றது. அவருக்கு முற்பிறப்பு கற்பிக்கப்பட்டது. அற்புதங்கள்
கற்பிக்கப்பட்டன. மகாவம்சம் என்ற இதிகாசத்தில் புத்தர் இலங்கைக்கு வான்
வழியாக வந்தார் என்றும் உலகத்தை இருள் அடையச் செய்தார் என்றும் புளுகி
எழுதப்பட்டுள்ளது.
மகாயான பவுத்தத்தின்
தாக்கத்தினால் இலங்கையில் இருந்து வந்த பவுத்த சமயத்தின் மூல வடிவான
தேரவாதப் பிரிவின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது. இதனால் இலங்கையில்
மகாயானம் பரவிவிடும் என அஞ்சிய மாகாவிகாரையைச் சேர்ந்த தேரர்கள் தமது
மதத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினர். மகாவிகாரையில் பாளி
மொழியில் புத்தசமயம் போதிக்கப்பட்டது. அபயகிரி விகாரையில் தமிழ் மொழியில்
மகாயான பவுத்தம் போதிக்கப்பட்டது. இதனால் மகாவிகாரை தேரர்கள் தமக்கென
ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் வேறான ஒரு மொழியைத்
தோற்றுவிக்க முனைந்தார்கள். அதன் விளைவுதான் சிங்களம் என்ற ஒரு மொழி
தோன்றக் காரணமா அமைந்தது. தென்னிந்திய தேரவாத தேரர்களே சிங்கள
எழுத்துக்களை உருவாக்கினார்கள். இதன் காரணமாகவே சிங்கள எழுத்துக்கள்
தெலுங்கு எழுத்துக்களை ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. மேலும் தேரவாத
பவுத்தத்தை பாதுகாக்கவும் பவுத்த அரசர்களைப் புகழ்ந்து பாடவுமே தீபவம்ச,
மகாவம்ச என்ற இதிகாசங்களை மகாவிகார தேரர்கள் எழுதினார்கள்.
இன்றும் தேரவாத தேரர்கள்
தமிழர்கள் மீது பகைமை காட்டுவதற்கான காரணம் பவுத்த சமயத்தில் தேரவாதம் –
மகாயானம் இரண்டுக்கும் இடையில் எழுந்த மோதலே. மகாவிகாரை – அபயகிரி விகாரை
தேரர்கள் விகாரைகளுக்குத் தீ வைத்தும் அவற்றை அழித்தும் தங்களுக்குள் சண்டை
பிடித்தும் பகைமை பாராட்டினார்கள்.
இலங்கையில் காணப்படுவது
தேரவாக பவுத்தம் என்று சொல்லிக் கொண்டாலும் அதில் மகாயான பவுத்தத்தின்
தாக்கத்தைக் காணலாம். எடுத்துக் காட்டாக இந்துக் கடவுளர் பவுத்த
கோயில்களில் வழிபடப் படுகின்றனர். பவுத்தர்கள் இந்துக் கோயில்களில் வழிபாடு
செய்கின்றனர். கடந்த நூற்றாண்டு தொடக்கம் தேரவாத பவுத்தம் சிங்கள
பவுத்தமாகத் தோற்றம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
பவுத்தம் இறப்பு ஒரு
நிலைமாற்றம் (Transition) எனச் சொல்கிறது. இறந்தவர் மீண்டும் தனது
வினைக்கு ஏற்ப பிறவி எடுப்பார் என்கிறது. அதே சமயம் பவுத்தம் ஆன்மக்
கோட்பாட்டை மறுக்கிறது. மனிதன் இறந்தாலும் அவனது உள்ளுணர்வு
(conciousness) அழிவதில்லை. அது மீண்டும் பிறவி எடுக்கிறது. இப்படிச்
சொல்வதின் மூலம் புத்தர் வேதசமயத்தின் கர்மவினைக் கோட்பாட்டை ஏற்றுக்
கொண்டுள்ளது தெரிகிறது.
மேலும் கீனயான பவுத்தம் தற்கொலையை அனுமதிக்கிறது. போபத்த இந்திரரத்தின தேரரின் தற்கொலையை இந்தப் பின்னணியிலேயே பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment