Wednesday, June 5

பலஸ்தீன் மாநாட்டுக்கு சென்ற ரவூப் ஹக்கீம் உடனடியாக நாடுதிரும்புகிறார்

hakeemபலஸ்தீனத்தில் நடைபெறும் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக அவசரமாக நாடு திரும்புவதாக முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பான 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் பற்றி கலந்துரையாடப்படவுள்ளதால், அதில் பங்குபற்றுவது மிகவும் அவசியமென தீர்மானித்துள்ளதாலேயே அமைச்சர் இன்று உடனடியாக நாடுதிரும்புகிறார்.
நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அதிகாரப் பகிர்வு பற்றியும் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவிக்கவுள்ளார்.
அத்துடன், நாளை பிற்பகல் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள வடமாகாணத்தில் வசித்து, இடம்பெயர்ந்த மக்கள் அங்கு வாக்களிப்பதற்கு வகைசெய்யும் வாக்காளர்கள் பதிவு (விஷேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மீதும் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றவுள்ளார்.

No comments:

Post a Comment