பள்ளிவாசல்களுக்கு கல் எறிந்தும் முஸ்லிம்களின் ஹலால் மற்றும் அபாயா பற்றி
மிக மோசமாக பேசியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முஸ்லிம்
மக்களை திசை திருப்புவதற்கு தீய சக்திகள் முயற்சி செய்கின்றன.
இவ்விடயத்தில் முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர்
சேகுதாவூத் கூறினார்.
ஏறாவூர் தாய் மண் அமைப்பின் ஏற்பாட்டில் ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில்
நடைபெற்ற விசேட வைபவமொன்றில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 02ஆவது முறையும் ஜனாதிபதி தேர்தலில்
வெற்றி பெற்று ஜனாதிபதியாக இருக்கின்றார். இந்நிலையில் வெளிநாட்டு
உள்நாட்டு சக்திகள் ஆட்சி மாற்றம் ஒன்றினை எதிர்பார்த்து ஜனாதிபதிக்கு
எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
18ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் இந்நாட்டில் ஒருவர்
எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடலாம் என்ற நிலைமை
மாற்றம் அடைந்த பின்பு இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும்
ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்குவார் என்ற நிச்சயத்தன்மை பொதிந்துள்ள
நிலையில் பல சக்திகள் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கான
வேலைத்திட்டத்தில் களமிறங்கியுள்ளன.
இதன் ஓர் அங்கமாகவே இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு
சதித்திட்டங்களை இச்சக்திகள் முன்னெடுத்து வருகின்றன. இதனால் நூறு வீத
முஸ்லிம்களையும் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிக்கச் செய்வதே இவர்களின்
குறிக்கோளாகவுள்ளது. இது விடயத்தில் முஸ்லிம்கள் நன்கு சிந்தித்து செயற்பட
வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்கள் ஐக்கிய
தேசியக்கட்சி ஆதரவாளர்கள் என இவர்கள் நினைத்துக் கொண்டுள்ள நிலையில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசுடன் இணைந்த பின்பு வடக்கு கிழக்கில்
வாழும் முஸ்லிம் மக்களின் ஆதரவு அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் தற்போதைய
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே கிடைக்கும் என்பதை கணக்குப் பார்த்து
செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஜனாதிபதியை மாற்றுகின்ற இச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் ஒரு
அங்கமாக முஸ்லிம் சமூகம் பேரினவாத சக்திகளினால் மேற்கொள்ளப்படுகின்ற பல
விதமான அடக்கு முறைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளனர்.
இதனை முஸ்லிம் சமூகம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். முஸ்லிம்களின்
பள்ளிவாசல் மீது கல்லெறிதல், ஹலால் விடயம் முஸ்லிம் பெண்களின் அபாயா போன்ற
விடயங்களை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு எதிராக முஸ்லிம்களை திசை திருப்பவே
இத்தகையவர்கள் சதி செய்கிறார்கள் எனவும் கூறினார். |
No comments:
Post a Comment