Saturday, June 8

5 ஆயிரம் பௌத்த பிக்குகளுடன் கொழும்பில் பாரிய ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு

மாகாணசபைகளை ஒழிக்க வலியுறுத்தி 5 ஆயிரம் பிக்குகளையும், 20 ஆயிரம் சிங்கள உணர்வாளர்களையும் ஒன்று திரட்டி கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்தும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய இறங்கியுள்ளது. 
இதற்காக, மாகாணசபைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 37 சிங்கள, பௌத்த அமைப்புகள் ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையில் ஒன்றிணைந்துள்ளன. 
ஹெக்டர் கொப்பேகடுவ நினைவு மண்டபத்தில், அத்துரலிய ரத்தினதேரர், மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கூட்டத்திலேயே மாகாணசபைகளுக்கு எதிரான தேசிய ஒற்றுமை என்ற பெயரில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
மாகாணசபைகளுக்கு எதிரான கருத்துகளை மக்களிடம் பரப்புவதும், மாகாணசபைகளை இல்லாதொழிக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதுமே இதன் நோக்கம் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. 
5 ஆயிரம் பிக்குகளையும், 20 ஆயிரம் சிங்கள உணர்வாளர்களையும், ஒன்றுதிரட்டி கொழும்பில் பேரணி ஒன்றை நடத்துவதன் மூலம், சிவில் சமூகம் மாகாணசபைகளை ஒழிப்பதில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்ற பலமான செய்தியை அரசியல்வாதிகளிடம் எடுத்துச் செல்வதே இந்த அமைப்பின் முதல் இலக்கு என்று அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment