Saturday, May 18

யாழ்.பல்கலைக்கழத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறினார்கள்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் பலியானவர்களுக்கு நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது.


இதனால் அச்சமடைந்த விடுதிகளில் தங்கியிருந்த சிங்கள மாணவ மாணவிகள் விடுதிகளிலிருந்து நேற்று வெளியேறி தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.



இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னரே பலர் இவ்வாறு செல்லத் தொடங்கியதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


யாழ்.பல்கலைக்கழக சூழலில் இரவோடிரவாக பெருமளவான இராணுவம் குவிப்பு – பதற்றத்தில் மாணவர்கள்


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக சூழலில் நேற்றிரவு முதல் இரவோடிரவாக பெருமளவான சிறிலங்கா பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த முறை மாவீர் தினத்தை பல்கலைக்கழக மாணவர்கள் அனுசரித்தபோது ஏற்பட்ட தொடர் அடக்கு முறைகளினால் இந்த முறை மாணவர்கள் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வுகளிலும் ஈடுபட மாட்டார்கள் என அரசாங்கம் கருதியிருந்த நிலையில் நேற்று காலை அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.


இந்நிலையில் இதனைத் தொடர்ந்து நேற்றிரவு முதல் பெருமளவான இராணுவத்தினர் ஆயுதங்களுடன் பல்கலைக்கழக சூழலில் தீடிரென்று குவிக்கப்பட்டுள்ளனர்.


இதனால் அச்சமடைந்த பல மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர். குறிப்பாக சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.


இந்நிலையில் இன்று ஏதாவது அஞ்சலிகள் இடம்பெறலாம் என்று தெரிவித்தே இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


இதேவேளை பெருமளவான படை குவிப்பு காரணமாக பல்கலைக்கழக சூழலில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment