பலவந்தமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் தமது சொந்த வீட்டைவிட்டு
விரட்டி தம்மை நடுத்தெருவில் விட்டுள்ளதாக புல்மோட்டை ஜின்னாபுரம் மக்கள்
தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாம் இப்பிரதேசத்தில் 1988ஆம் ஆண்டு முதல் வசித்து வருகின்றோம். நாட்டில்
ஏற்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து இடம்பெயர்ந்து சென்று மீண்டும் 2006,
2007 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மீள் குடியேறினோம்.
இதன் பின்னரே எமது குடியிருப்புகளுக்கு அண்மையில் கடற்படையினரின் முகாம்
2010 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் எமது குடியிருப்புக்
காணிகள் தமக்குத் தேவையென கூறி எம்மை மிரட்டி பல அட்டூழியங்களை மேற்கொண்டு
பலவந்தமாக அதிகாரத்தை பயன்படுத்தி விரட்டியுள்ளனர்.
இக்கிராமத்தில் 22 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக
இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் நுழையும் கடற்படையினர் வேலிகளை அறுத்து
எமது உடைமைகளுக்கு சேதங்களை ஏற்படுத்தி விட்டு செல்வதனால் நாம் இரவு
நேரங்களில் வேறு இடங்களில் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதனை சாதகமாக பயன்படுத்திய அவர்கள் நாங்கள் அங்கு இல்லாத வேளை, எமது
குடியிருப்புகளை ஆக்கிரமித்து அதனை அவர்களின் பூரண கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் எமது வீடுகளுக்குள் நாங்கள் தற்போது செல்லமுடியாத
நிலையேற்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸிலும் இதற்கு பொறுப்பான
அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் முறையிட்டும் எவ்வித பயனும்
கிடைக்கவில்லை.
இதேவேளை, எவ்வித உதவியும் இன்றி எங்களது சொந்த வீடுவாசல்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களாக நடுத்தெருவில் நிற்கின்றோம் என்றனர்.
No comments:
Post a Comment