Sunday, May 19

இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு - அகில இலங்கை பஸ் நிறுவன சங்கம்.




பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை பஸ் நிறுவன சங்கம் தெரிவித்துள்ளது.

10 வீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியங்ஜித் தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணத்திற்கான தேசிய கொள்ளைக்கு அமைய 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி 20 வீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகவும் அதற்கு பின்னர் இதுவரை பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன இந்த பணிப் பகிஷ்கரிப்பை குழப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அஞ்ஜன பிரியங்ஜித் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதற்கு அனைத்து பஸ் ஊழியர்களும் தமக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளதாக அகில இலங்கை பஸ் நிறுவன சங்கத்தின் பிரதம செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பணிப்பகிஷ்கரிப்பில் தமது சங்கம் பங்கேற்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு குறித்து தமது சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துரையாடியதை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெசாக் காலப் பகுதியில் மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கும் வகையில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தாம் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முடியுமானால் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்னவிடம், அஞ்ஜன பிரியங்ஜித் சவால் விடுத்துள்ளார்.

பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதனை யாராலும் நிறுத்தமுடியாது எனவும், அவ்வாறு நிறுத்தப்படும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் தம்வசம் உள்ளதாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்படும் பயணிகள் தொடர்பில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரே பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கை பஸ் நிறுவன சங்கத்தின் பிரதம செயலாளர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இவ்வாறான பணிப்பகிஷ்கரிப்புக்கள் காரணமாக பயணிகளை ஒருபோதும் நிர்க்கதி நிலைக்குள்ளாக்க தான் இடமளிக்கப்போவதில்லை என தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் பட்சத்தில் பயணிகளுக்கு சிறந்த பஸ் சேவைகளை வழங்க தான் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முறையற்ற ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு சட்டவிதிகள் மீறப்படும் பட்சத்தில் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படும் என தனியார் போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment