அரசியலமைப்பு சட்டத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும்
காணி அதிகாரங்களை நீக்குவதற்கு ஒருபோதும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
அனுமதிக்காது என கிழக்கு மாகாண சபை பிரதி முதல்வர் எம்.எஸ்.சுபைர்
கூறினார்.
ஏறாவூர் அந் - நஹ்ல் இளைஞர் கழகம் நடத்திய கலாசார விழாவில் கெளரவ
அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வட மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளியானதன் பின்னர் மாகாண
சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைப்பதற்கு பெரும்பான்மை இன
அரசியல்வாதிகள் திட்டம் தீட்டி வருகின்றனர்.
சிறுபான்மை சமூகத்தின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக கொண்டு வரப்பட்ட
கிழக்கு மற்றும் வட மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைக்கின்ற விடயங்களில்
பெரும்பான்மை சமூகத்தவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு திரிவதை அவதானிக்க
முடிகின்றது.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ள இந்நிலையில் பெரும்பான்மை
இனத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள
13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி
அதிகாரங்களை நீக்கிய பின்னரே வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என
அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைப்பதற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் துணை போகாது.
இந்நிலையில், சில அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து வட மாகாண சபைத்
தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றப் போவதாகவும் கூறுகின்றனர். ஆனால்
வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீண்டும்
குடியமர்த்திய பின்னரே தேர்தலை நடத்தப்பட வேண்டும் என்பதில் எமது அகில
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி திடமாக உள்ளது. ஆனால் சில தமிழ்த்
தலைமைகள் வடபுல முஸ்லிம் மக்களை குடியமர்த்துகின்ற விடயத்தில் கடும் போக்கை
கடைப்பிடிப்பதை நினைத்து நாங்கள் கவலையடைகின்றோம்.
No comments:
Post a Comment