Monday, May 6

மாவனல்லையில் மீண்டும் பொது பல சேனா, தொடரும் அட்டகாசம்



Bodu Bala Sena Mw
பொது பல சேனா என்ற இனவாத அமைப்பு இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாவனல்லை நகரில் பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டம் என்பவற்றை நடாத்த திட்டமிட்டு தோல்வி அடைந்தது. ஆனாலும் மறுபடியும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

 நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் பொழுது, மாவனல்லையில் மேற்படி அமைப்பிற்கு ஆதரவு குறைவாகவே காணப்படுகிறது என்றே கருத்துக்கள் நிலவுகின்றன.

மாவனல்லையில் பகிரங்கமாக ஒரு கூட்டத்தையோ, ஆர்ப்பாட்டத்தையோ நடாத்த முடியாத அளவிற்கு இந்த அமைப்பு பலவீனமானதாகவே காணப் படுகின்றது.

மாவனல்லையின் சிங்கள அரசியல் பிரமுகர்கள், தலைவர்களுக்கு மத்தியில் இந்த அமைப்பு குறித்து நல்ல அபிப்பிராயம் இல்லை. மாவனல்லையில் இந்த அமைப்பினர் பகிரங்கமாக கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடாத்த விடாமல் தடுத்ததில் முக்கிய பங்கு, மாவனல்லை பிரதேச சபைத் தலைவர் K.G. பியதிஸ்ஸ அவர்களை சாரும்.
சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் மாவனல்லை நகரில் முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று சிங்கள மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தல் விடுக்கப் பட்ட பொழுதும் அது பாரிய வெற்றியளிக்கவில்லை.
முஸ்லிம் கடைகளின் வியாபாரம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பாதிக்கப் படவில்லை.

பொது பல சேனாவின் முக்கிய தலைவர்கள் அமெரிக்கா சென்றதைத் தொடர்ந்து இந்த நாட்டில் இனவாத செயல்பாடுகள் குறைவடைந்து காணப் பட்டன.

இவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், மீண்டும் நாட்டில் இனவாதத்தை தூண்ட முயற்சிகள் செய்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு முன்னாள் பிரதிமேயர் அஸாத் சாலி கைது செய்யப்பட்டமை, ஹலால் தொடர்பான போராட்டம் இன்னுமும் முடியவில்லை என்று இவர்கள் வெளியிட்ட அறிக்கை என்பவற்றைக் குறிப்பிடலாம்.

தற்பொழுது கேகாலை நகரில் பொதுக் கூட்டம் ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்கின்றார்கள்.
எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை 2.00 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்திற்கு வெள்ளை ஆடை அணிந்து வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கான போஸ்டர்கள் மாவனல்லை நகர் முழுவதும் பகிரங்கமாக ஓட்டப் பட்டுள்ளன.
இது குறித்து கட்டாயம் கவனம் செலுத்துவதுடன், அவதானமாகவும், விழிப்புடனும் இருக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

உங்கள் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள் உங்கள் கைகளுக்கு கிடைக்கும் இரகசிய துண்டுப் பிரசுரங்கள் குறித்து எமக்கு உடனடியாக தெரிவித்தல் ஏனைய முஸ்லிம்களையும் விழிப்புணர்வூட்ட உதவியாக இருக்கும்.
சிங்கள புத்தாண்டு காலத்தில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம்
bbsmw1
bbsmw2

No comments:

Post a Comment