இனத் தொடர்புச் சபையொன்றை அமைப்பது தொடர்பாக தாம் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுக்கு விதந்துரைக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹக்கீம் – நோர்வே தூதுவர்
கிறீடி லோச்சனிடம் தெரிவிப்பு-இனங்களுக்கிடையிலான
பலதரப்பட்ட விவகாரங்களை சுமூகமாக கையாள்வதற்காக இனத் தொடர்புச் சபையொன்றை
அமைப்பது தொடர்பாக தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு
விதந்துரைக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீடி
லோச்சன், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்
ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு புதன்கிழமை (8) பிற்பகல்
நீதியமைச்சில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை
குறித்து கலந்துரையாடப்பட்ட போது, இங்கு வாழும் சமூகத்தவர்கள் மத்தியில்
அண்மைக்காலமாக அடிக்கடி ஏற்பட்டவண்ணம் இருக்கும் முறுகல் நிலையை
நீக்குவதற்கு சாத்தியமான வழிவகைகள் பற்றி பேசப்பட்ட போதே இனரீதியான
துருவப்படுத்தலை இயன்றவரை குறைப்பதற்கும், இன விரிசல்களை இல்லாமல்
செய்வதற்கும் உதவும் விதத்திலான பொறிமுறையொன்றின் அவசியம் பற்றி
வலியுறுத்தப்பட்டது.
யுத்தம் முடிவடைந்து, நாட்டில் சமாதானம்
நிலவும் சூழ்நிலையில் இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தையும்
புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் பற்றி அமைச்சர்
ஹக்கீம் எடுத்துக் கூறினார்.
இவ்வுரையாடலின் போது நோர்வே கவுன்சிலர்
விபெகி பிப்பி ஜி சொயேகார்ட், அமைச்சரின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி
எம்.எச்.எம். சல்மான், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும்
சமூகமளித்திருந்தனர்.
No comments:
Post a Comment