ஜனாதிபதி
தலைமையில் காலிமுகத்திடலில் இன்று பிரமாண்டமான வைபவம்யுத்த வெற்றியின்
நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய
படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகின்றன.
யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம்
இன்று காலை 8.00 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும், தேசிய படை வீரர்கள்
நினைவு தின பிரதான வைபவம் இன்று மாலை 4.00 மணிக்கு பாராளுமன்ற முன்றலில்
அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன, சபாநாயகர்
சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித்
வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின்
பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி
லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத்
கொலம்பகே, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, பொலிஸ் மா
அதிபர் என்.கே. இளங்ககோன், சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம்
ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதுதவிர அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்,
மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள்,
தூதுவர்கள், தூதரக பாதுகாப்பு அதிகாரிகள், மதத்தலைவர்கள், அரச மற்றும்
பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
காலி முகத்திடலில் நடைபெறவுள்ள வெற்றி
அணிவகுப்பு வைபவத்தில் இம்முறையும் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ்
மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் என்ற அடிப்படையில் 13645
வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவற்றில் 945 அதிகாரிகளும் 12700
வீரர்களும் அடங்குவர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் கட்டளைத்
தளபதி மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர். மார்க் தலைமையில் நடைபெறவுள்ள இந்த வெற்றி
அணிவகுப்பில் வடக்கு, கிழக்கு மற்றும் வன்னி படையணியினர் பங்கு
கொள்ளவுள்ளனர்.
அத்துடன் மனிதாபிமான நடவடிக்கையின் போது
களமுனையில் பயன்படுத்தப்பட்ட சகல கனரக ஆயுத தாங்கி வாகனங்கள், கவச
வாகனங்கள், சமிக்ஞை கருவிகள் போன்ற இராணுவத்தின் 100 வாகனங்களும், யுத்தக்
கப்பல்கள், தாக்குதல் கப்பல்கள், அதிவேக டோரா படகுகள் போன்ற கடற்படைக்குச்
சொந்தமான 55 கப்பல்களும் 28 தாக்குதல் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களும்
காலி முகத்திடல் கடல் மற்றும் வான் பரப்பில் சாகசங்களை காண்பிக்கவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வருகையைத் தொடர்ந்து பிரதான வைபவம் இன்று காலை ஆரம்பமாகவுள்ளது.
முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா
அதிபரினால் பிரதான மேடைக்கு அழைத்துச் செல்லப்படும் ஜனாதிபதி அவர்கள் மங்கள
வாத்தியங்களின் முழக்கத்திற்கு மத்தியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து
வெற்றி விழா அணிவகுப்பை வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு இராணுவ
மரியாதை வழங்கும் வகையில் இலங்கை இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவினரால் 21
மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும். அத்துடன் நாட்டிலிருந்து
பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து தாய் நாட்டை மீட்டெடுக்கும் மனிதாபிமான
நடவடிக்கையின் போது உயிர்நீத்த படை வீரர்களில் 6 முப்படை வீரர்களுக்கு
இராணுவத்தின் உயர் விருதான ‘பரம வீர விபூஷண’ விருது வழங்கப்படவுள்ளது.
உயிர்நீத்த படை வீரர்களின் குடும்ப உறவினர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த உயர் விருதுகளை வழங்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காலிமுகத்திடலிலிருந்து
ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்த உள்ளார். தொடர்ந்து
வெற்றி விழா அணிவகுப்பு நடைபெறும்.
இராணுவ அணிவகுப்பு
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின்
கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.பி. மார்க் தலைமையில் நடைபெறவுள்ள இராணுவ
அணிவகுப்பு பிரிகேடியர் எச்.ஜே. செனவிரட்ன இரண்டாவது கட்டளை அதிகாரியாக
செயற்படவுள்ளார்.
இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 550
அதிகாரிகளும் 6600 படைவீரர்களும் பங்கு கொள்ளவுள்ளதுடன், மனிதாபிமான
நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுத தாங்கி வாகனங்கள், கவச,
சமிஞ்ஞை, கண்ணிவெடி மீட்பு கருவிகள் பொருத்தப்பட்ட 100 வாகனங்கள்
அணிவகுத்து செல்லவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய
தெரிவித்தார்.
கடற்படை அணிவகுப்பு
கொமொடோர் கே.கே.ஜி. த சில்வா தலைமையில் நடைபெறவுள்ள கடற்படை அணிவகுப்பில் 170 அதிகாரிகளும், 2700 வீரர்களும் பங்குகொள்ளவுள்ளனர்.
அணிவகுப்புக்கு மேலதிகமாக கடற்படைக்குச்
சொந்தமான 55 கப்பல்கள், அதிவேக படகுகள் காலி முகத்திடல் கடலில் சாகசங்களை
காண்பிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல
வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
ஆழ்கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும்
‘சயுர’, ‘சாகர’, ‘சமுதுர’, ‘சக்தி’ ஆகிய பாரிய கப்பல்களும் ‘சுரணிமல’,
‘நந்தமித்ர’, ‘உதார’, ரண ‘ரிசி’, ‘ரணஜய’, ‘அபீத – 2’ ஆகிய கப்பல்களும், 12
அதிவேக டோரா படகுகள் உட்பட பெருந்தொகையான சிறிய ரக படகுகளும் கடலில்
அணிவகுத்து செல்லவுள்ளன.
விமானப்படை அணிவகுப்பு
எயார் கொமடோர் எஸ்.கே. பதிரன தலைமையில்
நடைபெறவுள்ள விமானப் படை அணிவகுப்பில் 110 அதிகாரிகளும் 1527 விமானப்படை
வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர்
ஷிராஸ் ஜல்டீன் தெரிவித்தார்.
விமானப்படைக்குச் சொந்தமான 30 விமானங்கள்
மற்றும் ஹெலிகொப்டர்கள் கொழும்பு வான் பரப்பில் பறந்து செல்லவுள்ளதுடன்
சாகசங்களையும் காண்பிக்கவுள்ளன.
பேருவளைக்கும் பெந்தொட்டைக்கும் இடைப்பட்ட
வான் பரப்பிலிருந்து பறக்கவுள்ள விமானங்கள் கல்கிஸ்சை வான் பரப்பில்
ஒன்றிணைந்து காலி முகத்திடலை நோக்கி பறக்கவுள்ளன. ஒவ்வொன்றும் 20
செக்கன்கள் இடைவெளியில் காலி முகத்திடல் வான் பரப்பை நோக்கி வரவுள்ளது.
விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு மிக் –
27, இரண்டு எப் – 7, இரண்டு எம்.ஐ. – 17, மூன்று எம்.ஐ. – 24, மூன்று கபீர்
ஆகிய அதிவேக தாக்குதல் விமானங்களும் ஒரு பெல் – 212, மூன்று பெல் – 412,
ஹெலிகொப்டர்களும், மூன்று ஏ.என். – 32, ஒரு சி – 130, நான்கு வை – 12,
நான்கு பிரி – 6 ரக விமானங்களுமே பறந்து செல்லவுள்ளன.
பொலிஸ் அணிவகுப்பு
பொலிஸ் நலன்புரிக்கு பொறுப்பான பிரதிப்
பொலிஸ் மா அதிபர் கே.எச். ஜயவீர தலைமையில் நடைபெறவுள்ள அணிவகுப்பில் 70
அதிகாரிகளும், 1500 பொலிஸாரும் கலந்து கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
267 பேர் அடங்கிய பொலிஸ்
வாத்தியக்குழுக்களும் 25 குதிரைகளுடன் குதிரைப் படை வீரர்களும் பொலிஸ்
விசேட அதிரடிப் படையினரும் இதில் அணிவகுத்து செல்லவுள்ளனர்.
சிவில் பாதுகாப்புப் படை அணிவகுப்பு
சிவில் பாதுகாப்புப் படையின் 20 அதிகாரிகளும் 700 வீரர்களும் அணிவகுத்து செல்லவுள்ளனர்.
அங்கவீனமுற்ற படைவீரர்கள்
யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற படைவீரர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பரசூட் சாகசங்கள்
வெற்றி அணிவகுப்புடன் இணைந்ததாக காலி முகத்திடல் வான் பரப்பில் முப்படையினரின் பரசூட் சாகசங்களும் இடம்பெறவுள்ளன.
விமானப்படையின் குறூப் கெப்டன் அதுல
நாணயக்கார தலைமையில் நடைபெறவுள்ள இந்த பரசூட் சாகசங்களில் விமானப்படையின்
இரண்டு பெண் வீரங்கனை உட்பட முப்படைகளைச் சேர்ந்த படைவீரர்கள் இந்த
சாகசங்களில் பங்கு கொள்ளவுள்ளனர்.
விமானப்படையின் எம்.ஐ. 17 ஹெலிகொப்டர்
மூலம் சுமார் ஆறாயிரம் தொடக்கம் ஒன்பதாயிரம் அடி உயரத்திலிருந்து
பரசூட்களுடன் குதித்து சாகசங்களை காண்பிக்கவுள்ளனர்.
காலி முகத்திடலில் மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்கள் கண்டுகளிக்கலாம்.
தேசியக் கொடி, இராணுவ, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் கொடிகளை ஏந்திய வண்ணமே இந்த பரசூட் சாகசங்களை காண்பிக்கவுள்ளனர்.
பொதுமக்கள் பார்வையிட வசதி
வெற்றி அணிவகுப்பை பொதுமக்களும் நேரில் கண்டுகளிக்க தேவையான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
லேக்ஹவுஸ் சுற்றுவட்டப் பிரதேசம் ஊடாக
நுழையும் பொதுமக்கள் காலி முகத்திடலிலுள்ள முன்னாள் பிரதமர்
எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உருவச் சிலை வரையிலான பிரதேசம் வரை
சென்று அங்கிருந்து அணிவகுப்பை நேரில் கண்டுகளிக்கலாம்.-தினகரன்
No comments:
Post a Comment