பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழங்குக் கொள்கலன்களில் 30,000 கருத்தடை ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதானது பாரதூரமான விடயமாகும். எனவே இதன் பின்னணியில் யார்? எந்த அமைப்பு உள்ளது என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென பொதுபலசேனா கோரிக்கை விடுத்துள்ளது.
இல்லாவிட்டால் சிங்கள இனத்தை அழிக்கும் சதித்திட்டம் வெற்றி பெற்று விடுமென்று அவ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பொதுபலசேனாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லிலந்த விதானகே மேலும் தெரிவிக்கையில்,
இக்கிழங்குக் கொள்கலன்களை பாகிஸ்தானியர் ஒருவரே இறக்குமதி செய்துள்ளார். அதற்குள்ளேயே 30000 கருத்தடை ஊசி மருந்துகள் கொண்டு வரப்பட்டமையை சுங்கத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறு கருத்தடை மருந்துகள் இங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம். சிங்கள இனத்தை அழிப்பதற்கும் இனப்பெருக்கத்தை குறைப்பதற்கும் மிகவும் சூட்சுமமாக சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை நாம் வெளியிட்டோம். ஆனால் அரசாங்கமோ அல்லது வேறு எவரும் கண்டுகொள்ளவில்லை. இன்று அது நிரூபணமாகியுள்ளது.
எனவே இந்தக் கருத்தடை மருந்து ஊசிகள் எந்த மருந்தகத்திற்காக கொண்டு வரப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள அமைப்பு எது? பாகிஸ்தானிய பிரஜை யாருக்காக இதனை கிழங்குக் கொள்கலன்களில் மறைத்துக் கொண்டு வந்தார். என்பது தொடர்பில் உளவுப் பிரிவினர் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி இச் சதியின் சூழ்ச்சிக்காரர்கள் யாரென்பதை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிங்கள இனம் அழிவதை தடுக்க முடியாது. வெறுமனே பாகிஸ்தான் பிரஜைக்கு தண்டப்பணம் அறவிட்டு விடுதலை செய்வதால் எதிர்காலங்களிலும் இவ் ஆபத்து தொடர்ந்த வண்ணமே இருக்குமென்றும் லிலந்த விதானகே தெரிவித்தார்.
No comments:
Post a Comment