Wednesday, April 3

குனூத் அன் நாசிலாவை நிறுத்த சொன்னது பொது பல சேனாவே - அசாத் சாலி


முஸ்லிம்களின் பிரச்சினை முடிந்துவிட்டது ஆகவே தொழுகையில் ஓதப்படும் குனூத் அந் நாஸிலாவை இனி தொடரத் தேவை இல்லையென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் முபாரக் மெளலவி அறிக்கை வெளியிட்டுள்ளார். எனினும் முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகள் முடியவில்லை.
தொடர்ந்து கொண்டே செல்கின்றன. ஆகவே இனிவரும் பிரச்சினைகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவே பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் கொழும்பு மாநகர அமைப்பின் பிரதி மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின்செயலாளருமான அசாத் சாலி தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அசாத் சாலி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கும் பொதுபலசேனா அமைப்புகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன்போது பொது பல சேனாவின் நடவடிக்கைகளை ஒரு மாத காலத்துக்கு நிறுத்திக் கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது. இதேவேளை, அவர்களுக்கு பயமாக உள்ள குனூத் நாஸிலா ஓதுவதை நிறுத்த வேண்டும் எனவும் பணிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே அ.இ.ஜ. உலமாவின் பொதுச் செயலாளர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இன்று அ.இ. ஜம்இய்யத்துல் உலமாவின் இமாம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தான்.
இவ்வளவு காலமும் நாம் ஜம்இய்யத்துல் உலமாவை பாதுகாத்து வந்தோம். இனி அதனை செய்ய மாட்டோம். நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு செல்கையில் குனூத் நாஸிலாவை நிறுத்தச் சொல்லியுள்ளது. ஆகவே இனிவரும் பிரச்சினைகளுக்கு ஜம்இய்யத்துல் உலமாதான் பதில் சொல்ல வேண்டும். நான் வேண்டுகிறேன், சகல பள்ளிவாசல்களிலும் குனூத் ஒதுவதை நிறுத்த வேண்டாம். தொடர்ந்து அதனைச் செய்யுங்கள்.

ஹலால் விடயத்துக்காக அமைக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இன்று மூன்றாக உடைந்துள்ளது. ஒருமித்த முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நாட்டில் ஜனநாயகம் இல்லை. அரசாங்க தீவிரவாதம் தான் நிலவுகிறது எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment