Sunday, April 14

தற்கால பிரச்சினைகளை அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் அதாஉல்லா வாய் திறந்தார்..!



சம்மாந்துறை பிரதேச சபைக்கான புதிய நிருவாகக் கட்டிடம் 33 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதற்கான அடிக்கல்நடும் விழா சம்மாந்துறைப் பிரதேச சபை தவிசாளர் நௌசாட் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. அப்துல் மஜீட், மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் புத்திஜீவிகளும் கலந்து கொண்டார்கள். 
அதன் பின்னர்; நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா,
இன்று சம்மாந்துறைக்கு வரலாற்று முக்கியத்துவமான நாளாகும். நாடு முழுவதும் பல அபிவிருத்தித்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதில் ஓர் அம்சமாகவே இன்று சம்மாந்துறையின் பிரதேச சபை நிர்வாகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. உள்ளுராட்சித் துறையிலும் நிறைய அபிவிருத்தி வேலைகள் நாடு பூராகவும் எனது அமைச்சின் மூலம் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக புறநெகும வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் காணப்படும் சுமார் 100ற்கும் அதிகமான உள்ளுராட்சி சபைகள் திட்டமிட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. 
எமது நோக்கம் உள்ளுராட்சி சபைகளை எதிர்காலத்தில் வளமுள்ளதாக மாற்றியமைப்பதே. மக்களுக்கான பணிகள் இந்த உள்ளுராட்சி சபைகள் மூலமாகவே நடைபெறுகின்றது. உள்ளுராட்சி சபைகள் நிறைவான சேவைகளை வழங்குவதன் மூலமே மக்களை திருப்திப்படுத்த முடியும். அதனூடாகவே மக்களின் வாக்குகளையும் எதிர்பார்க்க முடியும். எதிர்காலத்தில் வட்டார முறையில் உள்ளுராட்சி தேர்தல்கள் நடைபெறப்போகின்றது. அதற்கான வேலைகளை எனது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள்தான் வட்டாரத்தின் தலைவர்கள். அவர்களுக்கு எல்லா அதிகாரங்களும் வழங்கப்படும். நாடு பூராக காணப்;படும் உள்ளுராட்சி சபைகளின் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. அவ்வாறான கட்டிடங்களை நாம் இனங்கண்டு புதிய கட்டிடம் நிர்மானிக்க நிதியுதவி வழங்கி வருகின்றோம்.
 இந்த அடிப்படையில் பொத்துவில், இறக்காமம், அட்டாளைச்சேனை போன்ற உள்ளுராட்சி சபைகளை நிர்மாணித்தும், நிர்மாணிக்க உதவி புரிந்தும் வருகின்றோம்.  இவ்வாரிருக்க தேர்தல் காலங்களில் ஏதோ ஒரு விடயத்தை கையில் எடுத்துக் கொண்டு பத்தி எரிகின்றது என்று சொல்லிக் கொண்டு உங்கள் வாக்குகளைப் பெற வேறு ஒரு கூட்டம் வரும். அவர்களுக்கு நீங்கள் வாக்களிப்பீர்கள். கட்டிடங்களையும் அபிவிருத்திகளையும் மேற்கொள்ள நாம் இருக்க வேண்டும். பாருங்கள் இந்த நிலவரத்தை. மக்கள் நிதானமாக சிந்திக்க வேண்டிய காலம் வந்திருக்கின்றது. நாங்கள் எந்த அபிவிருத்திகள் செய்தாலும் அதனை திட்டமிட்டு சரியாக மேற்கொள்கின்றோம். எதிலும் தூய்மையான எண்ணம் வேண்டும். எண்ணம்தான் வாழ்வு. கட்டிடங்கள் கட்டும் போது முறையாக திட்டமிட்டு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் பின் சந்ததி எம்மை திட்டும். அந்த சரியான வழியில்தான் சம்மாந்துறைப் பிரதேச சபைக் கட்டிடம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் சம்மாந்துறைக்கான இன்னும் பல அபிவிருத்திப் பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான முழு உதவியையும் தவிசாளர் நௌசாட் அவர்ளுடன் இணைந்து எதிர்காலத்தில் வழங்க தயாராகவிருக்கின்றேன். அதுமாத்திரமன்றி சம்மாந்துறை பிரதேச சபையை தரமுயர்த்தி நகர சபையாக அழகுபார்ப்பதற்கும் நான் எண்ணியிருக்கின்றேன். அந்த விடயமும் மிக விரைவில் நடைபெறும். 
இதை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு ஒரு முக்கியமான விடயத்திற்கு வருகின்றேன். என்னைப் போன்றவர்கள் இந்த காலகட்டத்தில் பேசவில்லை என்று நீங்கள் நினைத்திருக்கலாம். பத்திரிகைகளில்தான் நான் பேசவில்லை. இருந்தாலும் இந்த அதாஉல்லா பேச  வேண்டிய இடத்தில் பேசியும் சண்டை பிடிக்க வேண்டிய இடத்தில் சண்டை பிடித்தும் நிதானமாக பேச வேண்டிய இடத்தில் நிதானமாக பேசியும் உங்களுக்காக உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் என்ற செய்தியையும் உங்கள் முன் கூறுகின்றேன். 
எனது வாழ்வில் நான் அரசியலுக்காக பொய் கூறியது இல்லை. தேவையில்லாதவற்றை ஊடகங்களில் பேசி பத்திரிகைகளுக்கு செய்தி வேண்டுமென்பதற்காக செய்தி கொடுத்து மக்களை சூடாக்கி அதில் அரசியல் செய்பவன் நான் அல்ல. சமூகத்திற்கு உண்மையான தலைவர்கள் சமூகத்திற்காக உள்ளொன்று புறமொன்று பேசி குழப்பத்தை ஏற்படுத்தவும்மாட்டார்கள். 
அதனடிப்படையில் தேவையான விடயங்களை மிகவும் அமைதியாக செய்து வருகின்றேன். அதுதான் தலைமைத்துவப் பண்பு. அவர்கள்தான் தலைவர்கள், நேரத்திற்கு நேரம், காலத்திற்கு காலம் வாக்குகளைப் பெறுவதற்காக மக்கள் மத்தியில் நான்தான் தலைவர் என்று அடையாளப்படுத்துவதற்காக பேசக்கூடாதவற்றைப் பேசி பின்னர் அதனை பகிரங்கமாக வாபஸ் பெற்றுக் கொள்வதும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முகம் கொடுக்க இயலாமல் தடுமாறுவதும்  வரலாற்றில் நமக்கு கற்ற விடயங்கள் நிறையவே உள்ளது. தலைவர்கள் என்பவர்கள் சமூகம் பிழையாக நடந்தாலும் சமூகத்தினை வழிநடாத்த வேண்டியவர்கள். சமூகத்தின் உணர்வுகளை அடக்க வேண்டியவர்கள் சமூகத்திற்கு நன்மை தீமைகளை எடுத்துக் கூற வேண்டியவர்கள் அதற்காகத்தான் சமூகம் எங்களை வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியிருக்கின்றார்கள். இல்லாவிட்டால் சமூகம் முடிவெடுப்பதாயின் சமூகம் எம்மை பாராளுமன்றம் அனுப்பத் தேவையில்லை. ஆகவே எந்தெந்த இடத்தில் இருக்கமாக பிடிக்க வேண்டுமோ எந்த இடத்தில் மெதுவாக பிடிக்க வேண்டுமோ அங்கெல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப நடந்து மக்களை சரியாக வழிநடத்துபவர்கள்தான் உண்மையான தலைவர்கள். 
அந்த வகையில் சரியான விடயத்தை பிழையான சந்தர்ப்பத்தில் செய்தால் அது பிழைத்து விடும். பிழையானவற்றை சரியான நேரத்தில் செய்தால் கூட அது சரியாகிவிடும். காலத்திற்கு காலம் ஒவ்வொன்று வரும் அதனை முறையாக எதிர்கொள்ள வேண்டும். அதற்கு முறையான தீர்வுகளைப் பற்றி உண்மைக்கு உண்மையாக சிந்தித்தால் அது சரியாகிவிடும். அதனை வைத்து அரசியல் இலாபம் தேட முனைந்தால் தீர்வு கிட்டாது. ஏனென்றால் அங்கு இஹ்லாசான எண்ணம் இல்லை. எதிலும் இஹ்லாசாக நடக்க வேண்டும். 
நாம் கிழக்கிலிருந்து வீரம் பேசி ஊடகங்களில் அறிக்கை விடுவது சிறிய விடயம். ஆனால் கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்களையும் அங்கு அமைந்திருக்கின்ற பள்ளிவாயல்கள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். அதனை எண்ணித்தான் அறிக்கைளையும் விட  வேண்டும். சற்று சிந்தித்துப் பாருங்கள். இவைகளையெல்லாம் கருத்திற் கொண்டுதான் பத்திரிகைகளில் அறிக்கை விட வேண்டும். எனக்கு அறிக்கை விடத் தெரியாமலில்லை. கிழக்கிற்கு வெளியில் ஏற்படும் பாதிப்புக்களையும் சிறுபான்மையாக வாழும் எமது மக்களைப் பற்றியும் யோசித்து விட்டுத்தான் நான் சூடான அறிக்கைகளை விடுவதில்லை. இழந்தால் இலகுவில் பெற முடியாது. இழக்க முன் சிந்திக்க வேண்டும். 
ஓர் அரசியல் தலைமை ஒரு நடவடிக்கையில் ஈடுபட முன் அதன் சாதக பாதகங்களை எண்ண வேண்டும். அதனை விடுத்து இவ்விடயத்தை வைத்து வாக்குகளை நாம் அதிகரிக்க வேண்டுமென்று எண்ணக்கூடாது. அது உயிருள்ளதாக அமையாது. மக்களுக்கு செய்யும் துரோகம் அது. எப்போதும் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். எல்லா  சேனாவையும் மீறிய சக்தி அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது. இதை நாம் மறந்து விடக் கூடாது. நாம் என்னதான் சிந்தித்தாலும் செய்தாலும் அல்லாஹ் நாடியது நடக்கும். இஸ்லாமியர்களான நமக்கு நூறு வீத நம்பிக்கை இருக்க வேண்டும். 
இந்த நாடு பல்லின சமூகங்கள் வாழும் நாடு. எல்லா சமூகத்திற்குள்ளும் பிரச்சினை இருக்கின்றது. முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. தமிழர்களுக்கும் தமிழர்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. சிங்களவர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் மத்தியில்தான் எல்லா சமூகங்களும் வாழ்ந்து கொண்டு வருகின்றோம். முஸ்லிம்களாகிய நாம் அனேகமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பழகி இருக்கின்றோம்;. பள்ளிவாயல்களில் தொழும்போது சுஜூதிலும், ருக்ஊவிலும் சஹிதாக்கப்பட்டிருக்கின்றோம். இதனைப் பார்க்கவும் உணர்ச்சி வேறொன்றிலும் வர முடியாது. ஏன் முஸ்லிம்களாகிய நாம் வயல்களில் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றோம். குடும்பம் குடும்பமாக கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றோம். புனித மக்கா பயணம் செல்லும் போது சஹீதாக்கப்பட்டிருக்கின்றோம். தாய் முன் தந்தையும் தந்தை முன் தாயையும் தாய் தந்தை முன் பிள்ளைகளையும் துண்டாடக் கண்டிருக்கின்றோம். எவ்வளவு அனுபவம் எமக்கிருக்கின்றது. இதனை எந்த பத்திரிகைகளும் அன்று எழுதவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் இதற்கு முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. பத்திரிகைகள் அதனை எல்லாம் மறைத்துதான் எழுதியது. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் இவற்றையெல்லாம் செய்தவர்களை பயங்கரவாதிகள் என்று கூட எழுதவில்லை போராளிகள் என்றே சொல்லப்பட்டது. இதுதான் நிலவரம் அவற்றை நாம் மறந்து விடக் கூடாது. 
முஸ்லிம் சமூகமான நாம் வரலாற்றில் எதிர் கொண்ட கசப்பான விடயங்கள் இவை. இன்று பல கோணங்களிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான பல விடயங்கள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இவைகளை ஒரு சாரார் தூண்டுகின்றனர். இதற்கு பின்னணியில் யாரும் இருப்பார்கள். பத்திரிகைகளும் இதனை குழப்புகின்றன. பத்திரிகையை பார்த்து மாத்திரம் நீங்கள் எதனையும் தீர்மானிக்கக் கூடாது. முஸ்லிம்கள் பத்திரிகை மாத்திரம் பார்த்து முடிவெடுத்து தீர்மானிக்கக் கூடியவர்களாக நாம் இருக்க முடியாது. 
ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு நோக்கத்தைக் கொண்டு செயற்படுகின்றது. சில பத்திரிகைகள் கூட்டி விடுகின்றன. அல்லது ஒரு சாராரை மற்ற சாராரிடம் இணைத்துக் கொள்ள எழுதுகின்றது. சில பத்திரிகைகள் நிதானமாகவும் செயற்படுகின்றன. அவர்களின் உள்ளத்தில் என்ன இருக்கின்றது என்று எமக்குத் தெரியாது. முஸ்லிம்கள் தனிக் காலாசாரத்தைக் கொண்டவர்கள்.  அவர்களுடைய பாதை தனித்துவமானது. முஸ்லிம்களின் உடை தனித்துவமானது உணவு  தனித்துவமானது என்பதனை இன்று எல்லா சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஏன் அண்மையில் சம்பந்தன் ஐயா கூட பாராளுமன்றத்தில் பேசி இருக்கின்றார். முஸ்லிம்கள் தனிக் கலாசாரத்தை கொண்டவர்கள் என்று. 
ஏற்கனவே கூறியது அதுவல்ல. இஸ்லாமியத் தமிழர்கள் என்று சொன்னார்கள். ஆனால் இன்று சொல்கிறார்கள். முஸ்லிம்கள் தனித்துவமானவர்கள் என்று. முஸ்லிம்களின் உணவு உடை என்பது தனித்துவமானது என அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். தற்காலப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவர்களும் பெரும்பான்மை இனத்தவர்களும் இப்போது இதனை ஏற்றுக் கொள்கின்றார்கள். அதற்கு அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்ய வேண்டும். 
ஒரு பிரச்சினை உருவாகித்தான் முஸ்லிம்களை பற்றி மற்றைய சமூகத்திற்கு தெளிவு வருகின்றது. கலகம் பிறந்துதான் நியாயம் பிறக்கும். இப்போது முஸ்லிம்கள் தனித்துவமானர்கள் என்ற விடை பிறந்திருக்கின்றது. இவைகளைப் பற்றி நாம் ஆழமாக சிந்திக்க  வேண்டும். வுpடிந்தவுடன் பத்திரிகையை மாத்திரம் பார்த்து விட்டு இதோ பார்த்தீர்களா அங்கு அப்படி இங்கு இப்படி என்று தீர்மானம் எடுக்க வேண்டாம். அதிலிருந்து நாம் விடுபட வேண்டும். வருகின்ற செய்திகள் அனைத்தும் உண்மை என்று நினைக்க வேண்டாம். அதன் உள்ளார்ந்தம் என்ன என்று உங்களுக்குத் தெரியாது. சம்பந்தனின் பேச்சினில் உள்ள உள்ளார்ந்தம் என்னவென்று எமக்குத் தெரியாது. ஏன் பெரும் கதைகள் சொல்லும் பொதுபலசேனாவின் கருத்துக்களும் அவர்களின் உள்ளார்ந்தமும் எமக்குத் தெரியாது. அதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்றும் எமக்குத் தெரியாது. நிச்சமாக தெரியும் விடயமொன்று அல்லாஹ்வை யாரும் ஏமாற்ற முடியாது. அவனை மீறி ஒன்றும் நடக்கவும் முடியாது. அவன் முடிவுதான் இறுதி முடிவு. 
எனவே மீண்டும்  சொல்கின்றேன் வீராப்பு அறிக்கைகளை விடுவது சிறு விடயம். அவைகளினால் ஏனைய இடங்களில் வாழும் சமூகத்திற்கு பாதிப்பாகிவிடக்கூடாது. இதில் நாம் கவனமாக செயற்பட வேண்டும். நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளைப்பற்றி அதாஉல்லா பத்திரிகைளில் அறிக்கை விடவில்லை என யாரும் சிந்திக்க வேண்டாம். அதாஉல்லா பேச வேண்டிய இடத்தில் பேசிக் கொண்டிருக்கின்றான். அவைகளை பேசிவிட்டு இப்படி பேசிவிட்டேன் என்று பத்திரிகைகளுக்கு கூறி அதில் அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. பத்திரிகை செய்திகளை அல்லாஹ்வாக நம்ப வேண்டாம். முதல் அல்லாஹ்வையும் இரண்டாவதாக முஸ்லிம் தலைவர்களாகிய எம்மையும் நம்புங்கள். 
இலங்கை வரலாற்றில் ஒரு பிரதிக் கல்வி அமைச்சராக இருந்து நமது தலைமை அவமதிக்கப்பட்டது என்பதற்காக நமது சமூகம் தலை குணிந்து விட்டது என்பதற்காக சமூகத்திற்காக முதன் முதலில் ராஜினாமா செய்தவன் என்றால் வரலாற்றுப் புத்தகத்தை புரட்டிப் பாருங்கள். அது நானாகத்தான் இருக்கின்றேன். என்னை மீண்டும் உரசிப்பார்க்க வேண்டியதில்லை. முஸ்லிம் சமூகத்திற்காக எதனை எங்கு செய்ய வேண்டுமோ அதனை அமைதியாக  அங்கெல்லாம் செய்து கொண்டிருக்கின்றேன். நாம் சமூகத்திற்காக எதனையாவது இழந்து எதனையாவது பெற வேண்டும் என்றிருந்தால் அதில் உண்மைக்கு உண்மையான நியாயம் இருந்தால் எதனையும் இழந்து நம் சமூகத்திற்கு நியாயத்தைப் பெற அதாஉல்லா தயாராக இருக்கின்றான். எனவே முஸ்லிம்கள் பொறுமை காக்க வேண்டும். அதுதான் எமது பிரதான ஆயுதம். பிரச்சினைகளை அனுகும் முறையில் நாங்கள் அனுகிக் கொண்டிருக்கின்றோம். நிச்சயம் தெளிவு பிறக்கும் எனவும் அமைச்சர் தனதுரையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment