Wednesday, April 3

அச்சுறுத்தலினாலேயே பெஷன் பக் நிறுவனம் சமாதானத்துக்கு இணங்கியது : சிறிதுங்க

பெஷன் பக் ஆடை நிறுவனத்தின் மீதான அச்சுறுத்தலினாலேயே அந் நிறுவனம் தாக்குதல் விடயத்தை சமாதானமான முறையில் முடித்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் அந் நிறுவனத்தின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அச்சுறுத்தியுள்ளனர். அதனாலேயே  அந் நிறுவனத்தினர் அவ்வழக்கினை சமாதானமாக முடித்துக் கொள்வதற்கு இணங்கியுள்ளனர் என சிறிதுங்க ஜயசூரிய நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த நிறுவனத்தின் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட அமைச்சர் ஒருவர் ‘தாங்கள் தொடர்ந்தும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமா? அப்படியாயின் தாக்குதல் சம்பவத்தை சமாதானமான முறையில் முடித்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால்தான் தங்கள் நிறுவனத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து செல்ல முடியும் என அச்சுறுத்தியுள்ளார்.

முஸ்லிம்களுக்கெதிராக நாட்டில் தொடர்ந்தும் அராஜகம் மேற்கொள்ளப்படுகிறது. முஸ்லிம்களின் வணிகஸ்தலங்களில் கொள்வனவு செய்ய வேண்டாம் என பகிரங்கமாக அறிவித்தல் கொடுக்கப்படுவது மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் முஸ்லிம்கள் தூசிக்கப்படுகிறார்கள். முஸ்லிம் பெண்களின் ஆடைகளைக் களைய முயற்சிக்கிறார்கள்.

ஆயினும் இதற்கெதிகராக இன்று ஓர் ஆர்ப்பாட்டம் கூட செய்ய முடியாத நிலையிலேயே முஸ்லிம்கள் உள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் ஒரு முஸ்லிமா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் சமாதானம் இல்லை. முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்து ஆயுதம் தூக்க வேண்டிய நிலைக்கு அவர்களை தள்ளுகிறார்கள். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் போன்ற ஒன்றை மீண்டும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கெதிராக கட்டவிழ்க்க வழி செய்து கொண்டிருக்கிறார்கள்.
பெஷன் பக் நிறுவனத்துக்கு இலட்சக்கணக்கான நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டு அங்கு வேலை செய்யும் ஊழியர்களையும் கடுமையாகத் தாக்கி விட்டு இன்று அவர்களை அச்சுறுத்தி சமாதானத்திற்கு இணங்கச் செய்துள்ளார்கள்.

எனவே இதில் என்ன நியாயம் உள்ளது? ஆகவே இதற்கெதிராக நாம் அனைவரும் வீதிக்கு இறங்கி போராட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment