கலாநிதி
பதியுத்தீன் மஹ்மூதினால் ஆரம்பிக்கப்பட்டு பின்வந்த தலைவர்களால்
போஷிக்கப்பட்டு வந்த வானொலி முஸ்லிம் சேவை செல்லும் பாதையை நோக்கினால் கவலை
தருகிறது.
முஸ்லிம் சேவை தேசிய சேவையின் ஒரு
பிரிவாகவே செயற்பட்டது. தேசிய சேவை போன்ற எதுவித விளம்பர ஒலிபரப்புகளும்
இன்றி அரச பணத்தில் இயங்கியது. வானொலி தேசிய சேவை, வர்த்தக சேவை என்று
இரண்டாக இருந்தன. வர்த்தக விளம்பரங்கள் வர்த்தக சேவையிலே இடம்பெறும். தேசிய
சேவையில் விளம்பரங்கள் இல்லை. அறிவிப்பாளர்கள் கூட இந்த இரு சேவைகளிலும்
வெவ்வேறு தனித்துவங்களுடன் செயற்பட்டனர்.
இதன்படி தேசிய சேவை அறிவிப்பாளர்களாக
செயற்படும்போது ஒரு தனித்துவத்தை பின்பற்றினார்கள். அதை ஒரு கௌரவமாக
மதித்து கௌரவத்துடன் செயல்பட்டனர். இங்கு வர்த்தக விளம்பரம் போன்ற
வேகங்களோ, தமிழ் கொலைகளோ வேற்று மொழி கலப்புகளோ இருக்கவில்லை சிறந்த தனித்
தமிழாக சிறந்த உச்சரிப்பாக இருந்தது. எப்.எம். அலைவரிசைகள் போன்று ஆங்கிலம்
நிறைந்த இலக்கணம் பிழையான உச்சரிப்பும் பிழையான தமிழாக இருக்கவில்லை.
இதே கௌரவம் முஸ்லிம் சேவைகளிலும் காப்பாற்றப்பட்டு வந்தது. விளம்பரங்கள்
எதுவும் இல்லை. இதைவிட சுய விளம்பரங்கள் தற்புகழ்சிகள் சுயநலத்துக்கு
மற்றவர்களைப் புகழ்தல், தனிப்பட்ட விருந்து அழைப்புகள், முதுகு சொறிதல்
இருக்கவில்லை. அங்கு தரமான நிகழ்ச்சிகள் நிறைந்திருந்தன. நேரம்
வீணாக்கப்படவில்லை. இதனால் இலங்கை மக்கள் மட்டுமல்ல வெளிநாட்டு
முஸ்லிம்களும் இதனைக் கேட்டு பயன்பெற்றனர். அதனை புகழ்ந்தனர்.
ஆனால், இன்றைய நிலை கவலையைத் தருகிறது. முஸ்லிம் சேவை ஒரு வர்த்தக
சேவையாகவே மாற்றப்பட்டு வருகிறது. பதினைந்து நிமிடங்கள் நிகழ்ச்சியென்றால்
பதினைந்து விளம்பரங்கள். இதனால் சிறு பயான்கள் கூட தொழில்
நிகழ்ச்சியாகவிட்டன. அதான் வானொலியில் ஒலிபரப்பப்படுகின்றது என்று
மகிழ்கின்றோம். அதற்குக் கூட அனுசரணையாளர்கள் விளம்பரங்கள்
தேவைப்படுகின்றன. எமது வர்த்தகர்களின் பணத்தை கட்டித்தான் அதனை ஒலிபரப்பிக்
கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், ஏதோ இலவசமாகச் செய்வதாக அவர்களை தினம்தோரும்
புகழ்ந்து உச்சியில் வைத்து விடுகிறார்கள் எமது அதிகாரிகள்.
இப்போது எமது நாட்டில் சிறந்த பயான்களைச்
செய்யக்கூடிய இளம் உலமாக்கள் உருவாகியுள்ளனர். கலைஞர்கள் உள்ளனர். இவர்கள்
இலவசமாக இவற்றை செய்வார்கள். இப்படி இருக்கும்போது அரைத்த மாவை அரைப்பது
போன்று ஒரே நிகழ்ச்சியை மீண்டும் மறு ஒலிபரப்பு செய்கிறார்கள்.
அஸ்மாவுல் ஹுஸ்னாவை அல்லாஹ்வின்
திருப்பொயர்களை ஒலிபரப்புவது சிறந்தது. நன்மைக்குரியது. ஆனால், நேரம்
எஞ்சும் போதெல்லாம் அதனை தருகிறார்கள். இந்த நிகழ்ச்சி வாரம் பல முறை
ஒலிபரப்பப்படுகிறது. இங்கு நிகழ்ச்சிப் பஞ்சம் நன்கு தெரிகிறது. இதை ஒரு
உதாரணத்திற்காகவே கூறினேன். இதுபோன்ற மறு ஒலிபரப்புக்கள் பல. இந்த
நேரத்தில் புதிய நிகழ்ச்சிகளை ஒலிபரப்பலாமே.
எந்த ஊரிலாவது பணம் தருகிறார்கள் என்றால்
அந்த ஊரின் குத்பாப் பேருரையை ஒலிபரப்புகிறார்கள். அவை தரமா என்பது
பிரச்சினையில்லை. அதிகாரிகளின் கொடுப்பனவுகளை கொடுத்தால் போதும் என
நினைக்கின்றார்கள். இதை விடுத்து தரமான, பயனுள்ள, குத்பாக்களை ஒலிபரப்பிப்
பாருங்கள். அது மட்டுமா, அந்த ஊர் பிரமுகர்களை புகழ்வதும், கூட்டுத்தாபனத்
தலைவர், ஆலோசகர்களை புகழ்வதுமே வேலையாகிவிட்டது. புகழுக்குரியவன் அல்லாஹ்
என்கிறோம். ஆனால் எவரையோ புகழ்ந்து தள்ளுகிறோம். இவை சுய நலத்திற்காகவே.
முஸ்லிம் நிகழ்ச்சிக்கான அனுசரணை
விளம்பரக் கட்டணத்தை கூட்டுத்தாபனம் பன்மடங்காக அதிகரித்துவிட்டது. எவ்வளவு
அதிகரித்தாலும் போட்டி போட்டுக்கொண்டு முஸ்லிம்கள் பணம் கொடுக்கிறார்கள்.
ஆனால் ஏனைய சேவைகளையும் இதைப் பெற்றுக் கொண்டு தரமாக செய்தாலும்
பரவாயில்லை. தொடர் நாடகம் போன்று பயான்களை தொடர வைத்து விடுகின்றனர். என்ன
அநியாயம்.
தயவு செய்து தற்புகழ்ச்சிகளை நிறுத்திக்
கொள்ளுங்கள். அதிகாரிகளின் நன்மைக்காக அளவு மீறிப் புகழாதீர்கள் உங்கள்
சொந்த இலாபத்துக்காக செய்கிறீன்ர்கள் என்பது மக்களுக்கு நன்கு
விளங்குகிறது.
எப்.எம். நோய் முஸ்லிம் சேவைக்கும் வந்து
விட்டது. எப்.எம். நிகழ்ச்சி அறிவிப்பாளர்களும் தொலைபேசி தொடர்பு மூலம்
வீடுகளில் இருப்போரை தொடர்புகொண்டு சொந்த விடயங்களை பேசி நிகழ்ச்சிகளை
நடத்துகின்றன. வீட்டில் இருக்கும் பெண்களிடம் தனியாகவா இருக்கிறீர்கள்.
உங்கள் கணவர் உங்களுடன் அன்பாக இருக்கிறாரா என்றெல்லாம் கேட்கிறார்கள்.
அசிங்கமான கேள்விகளும் வருகின்றன.
முஸ்லிம் சேவை கௌரவமான சேவை. இதனை
எப்.எம். ஆக்கிவிடாதீர்கள். தொலைபேசி நிகழ்ச்சிகள் அதற்கு அவசியமில்லை.
அதன்மூலம் ஊர் பாவங்களைக் கொண்டு வந்து புகுத்தாதீர்கள். ஊர்கள் பற்றி
விளக்க வேறு நிகழ்ச்சிகள் நடத்தலாம். இதன் மூலமாக சேவையின் தரத்தைக்
குறைத்து விடாதீர்கள். இனியாவது நிறுத்தி விடுங்கள். இதனை வர்த்தக
நிகழ்ச்சியாக இப்போதே மாற்றி விட்டீர்கள். அனைத்துக்குமே விளம்பரங்கள்
அனுசரணையாளர்கள். எங்கு போய் முடியுமோ தெரியாது.
இதற்கு அதிகாரிகள் பொறுப்புச் சொல்ல
வேண்டும். பணிப்பாளர் மட்டுமல்ல அடிக்கடி முஸ்லிம் சேவைகளில்
உச்சரிக்கப்படும் ஆலோசகரான நீதிபதியும் பொறுப்புச் சொல்ல வேண்டும்.
புதிய புதிய நிகழ்ச்சிகளை ஒலிபரப்புங்கள்.
இளம், திறமை மிக உலமாக்கள் இதற்கு இலவசமாக உதவக் காத்திருக்கின்றனர்.
தரமான காலத்திற்கு பயன்தரக்கூடிய குத்பாக்களை ஒலிபரப்புங்கள். பதிவுசெய்து
தெரிவுசெய்து பிந்தியாவது ஒலிபரப்புங்கள். மறு ஒலிபரப்பை குறைத்துக்
கொள்ளுங்கள். நேரம் எஞ்சும்போது அந்த நேரத்தில் மக்களுக்கு விளங்கும்
மொழியிலான நிகழ்ச்சிகளை ஒலிபரப்புங்கள். ஏனைய இனத்தவர்கள் மத்தியில் வாழும்
நாம் விடும் பிழைகள் இருக்கின்றன. இவற்றை கலந்துரையாடல், நாடகம், பயான்
மூலம் விளங்க வையுங்கள்.
No comments:
Post a Comment