Monday, April 1

அமைச்சர் வாசுதேவவின் அமைச்சரவை பத்திரத்துக்கு பொது பல சேனா எதிர்ப்பு

Bodu Bala Senaநாட்டில் பொதுபலசேனா, இராவண பலய மற்றும் சிங்கள ராவய போன்ற  அமைப்புக்கள் உள்ளிட்ட தீவிரவாத குழுக்கள் மீது தடை விதிக்கக்கோரும் அமைச்சரவைப் பத்திரமொன்றை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சரவைக்கு விரைவில் சமர்ப்பிக்கவுள்தாக தெரிவித்தமை குறித்து பொது பல சேனா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

குருநாகலை, பன்னலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற அவ்வமைப்பின் மார்ச் மாதத்துக்கான இறுதி மக்கள் ஒன்று கூடலின் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அமைச்சரவை பத்திரம் தொடர்பான நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் பதற்றத்தைத் தோற்றுவிக்கும் மதம் சார்ந்த சம்பவங்களைக் கருத்திற்கொண்டு இத்தகைய குழுக்கள் மீதான தடையை அமுல்படுத்தும் விதத்தில் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கே குறித்த பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று பன்னலையில் உரையாற்றிய பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறான அமைச்சரவை பத்திரத்தை சமர்பிக்க முன்னர் அமைச்சர் வாசுதேவ மொழிகள் தொடர்பிலான உரிய கொள்கையொன்றினை வகுத்து அது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பித்து சிங்கள மொழிக்கு முன்னுரிமை பெற்றுத்தரவேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறான அமைச்சர்களை இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அங்கொடை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதிக்குமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment