கிழக்கு மாகாண சபையின் செயற்பாட்டில் நம்பிக்கை இழந்து விட்டதால் அரசியலில்
திடீர் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் கிழக்கு மாகாண அரசியலில்
நிலவுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
தெரிவித்தார்.
ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தில் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான
அடிக்கல் நாட்டும் வைபவம் வித்தியாலய அதிபர் எச்.எம்.எஸ்.சஹாப்தீன்
தலைமையில் இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்
போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து
உரையாற்றுகையில்,
நாட்டின் நாலா பாகங்களிலும் உள்ள மாகாணசபைகள் மிகசிறப்பாக இயங்கி வருகின்ற
அதேவேளை கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னப்பட்ட
மக்களைக் கொண்ட பகுதியில் பல்வேறு எதிர்ப்புக்களுடன் உறுவாக்கப்பட்ட
கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் அனைத்தும் நம்பிக்கை இழந்து விட்டது.
இச் சபையினூடாக எந்தவித வேலைத்திட்டங்களும் நடைபெறுவதில்லை நடக்கும் என்ற
நம்பிக்கையும் இழந்து வருகின்றது.
இதனால் கிழக்கு மாகாண அரசியலில் திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடிய
சாத்திக்கூறுகள் நிலவுகின்றன கிழக்கு மாகாண சபையில் ஏற்படும் மாற்றம் தேசிய
அரசியலையும் பாதிக்கலாம் இதற்கான முஸ்தீபுகள் அவசரமாக நடந்து வருவதை உணர
முடிகின்றது.
எதிர்காலத்தில் எமது சமூகம் அபிவிருத்திப் பணிகளைப்பற்றி பேசுகின்ற
முஸ்லிம் அரசியலாக இருக்கமுடியாது இதனால் அபிவிருத்திகளையும் உரிமைகளையும்
சேர்த்துப் பேச முடியாத நிலை ஏற்படும்.
அரசாங்கத்திடம் இருந்து அபிவிருத்திப் பணிகளைப் பெற்றுக் கொண்டு இந்த
சமூகத்திற்காக எமது நெஞ்சை நிமிர்த்தி உரிமைகளைக் கேட்க முடியாத
சந்தர்ப்பம் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள்
தென்படுகின்றன.
நாங்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்து அரசியலில் களமிறங்கியவர்கள்
அரசின் மீது நம்பிக்கை கொண்ட எம்மில் அரசு கவனம் செலுத்தியிருந்தால்
கிழக்கு மாகாண சபையின் செயற்பாட்டில் எமக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.
முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட கிழக்கு மாகாண சபை ஊடாக தமிழ்,
முஸ்லீம், சிங்கள இனத்தைச் சேர்ந்த மூவின மக்களுக்கும் எந்தவிதமான பயனும்
இல்லாத சூழ்நிலை காணப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபை ஊடாக எதுவுமே சாத்தியப்படாது என்ற நிலமையே இன்று
மேலோங்கி இருக்கின்றது. கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது பல்வேறு
நெருக்கடியான சூழ்நிலைகள் நிலவிய போதும் நாங்கள் அரசாங்கத்திற்கு அருதிப்
பெரும்பான்மை வாக்கினை அளித்து அரசாங்கத்தின் கௌரவத்தினைப்
பாதுகாத்திருக்கின்றோம் ஆனால் அரசாங்கத்தையும் எங்களையும் நம்பி வாக்களித்த
மக்கள் கிழக்கு மாகாண சபை ஊடாக ஏதேனும் காரியங்கள் நடக்கின்றனவா என்று
கேட்கின்ற நிலமை எம்மை கடுமையாக பாதித்திருக்கின்றது.
ஆதலால் கிழக்கு மாகாணத்தின் செயற்பாடுகள் இவ்வாரே தொடருமாக இருந்தால் மிக
விரைவில் திடீர் அரசியல் மாற்றம் நிகழ்வது நிச்சயம் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment