Wednesday, April 17

5 வருடங்களுக்கு ஒரு முறையே ஹஜ் யாத்திரை




ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மாத்திரமே ஹஜ் யாத்திரையினை ஒருவர் மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனையை சவூதி அரேபிய அரசாங்கம் விதித்துள்ளது. 

இதற்கமைய ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையே ஹஜ் யாத்திரையினை ஒருவர் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிரூபம் சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சினால் முஸ்லிம் சமய கலாசார விவகார திணைக்களத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

"எனினும் இந்த நிபந்தனை இலங்கைக்கு மாத்திரமல்ல. சகல நாடுகளும் இந்த நிபந்தனைக்குள் உள்ளடங்கும்" என முஸ்லிம் சமய கலாசார விவகார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.சாமில் (நளீமி) தெரிவித்தார்.

நிபந்தனைக்கு அமைய ஹஜ் யாத்திரை மேற்கொண்ட ஒருவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஹஜ்ஜுக்கான விசா வழங்கப்படமாட்டது என அவர் குறிப்பிட்டார்.

"எவ்வாறாயினும் ஹஜ் முகவர்கள் மற்றும் பெண்ணொருவருடன் ஆண் துணைக்காக செல்பவர் உள்ளிட சில பிரிவினருக்கு மாத்திரம் விசேட அடிப்படையில் ஐந்து வருடங்களுக்கு பல முறை ஹஜ் விசா வழங்க முடியும் எனவும் சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சினால் அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது" என சாமில் (நளீமி) மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 2013ஆம் ஆண்டு ஹஜ் கடமையினை நிறைவேற்ற சுமார் 6,000 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். எனினும் 2,800 பேர் மாத்திரம் ஹஜ் கடமையினை இலங்கையிலிருந்து மேற்கொள்வதற்கான கோட்டாவினை சவூதி அரேபிய அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment