Thursday, March 28

மொபிடெல் மன்னிப்புக் கோரியது

பொது பல சேனா அமைப்பின் பாடலை தமது வலையமைப்பின் மூலமாக தரவிறக்கம் செய்து குரலோசையாக பயன்படுத்துவோரிடமிருந்து அறவிடப்படும் பணத்தை அவ்வமைப்புக்கு வழங்கும் மொபிடெல் நிறுவனத்தின் செயற்திட்டம் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை தோற்றுவித்திருந்தது. இதனையடுத்து தமது நிறுவனத்தின் செயற்பாடு யாரினதும் உணர்வுகளைப் பாதிப்பதாக அமையுமாயின் அதற்காக தாம் மன்னிப்புக் கோருவதாக மொபிடெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தனது பேஸ் புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மொபிடெல், அதில் பொது பல சேனாவின் பெயரைக் குறிப்பிட்டிருக்கவில்லை.
 
நாம் ஒரு அமைப்பின் பாடலை குரலோசையாக வழங்குகிறோம் என்பதற்காக அவ்வமைப்பின் குறிக்கோள்களையும் செயற்பாடுகளையும் அங்கீகரிப்பதாக அமையாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
''எம்மால் வழங்கப்பட்ட குரலோசை ஒன்று தொடர்பில் கடந்த சில நாட்களாக  நாட்டு மக்கள் மத்தியிலும் எமது வாடிக்கையாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ள உணர்வு ரீதியான வெளிப்பாடுகள் தொடர்பில் நாம் எமது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
 
வழமைபோன்று குரலோசை ஒன்றின் மூலம் அறவிடப்படும் கட்டணமானது அந்த ஓசைக்குச் சொந்தமானவருக்கும் எமது நிறுவனத்திற்குமிடையிலான வருமான பங்கீட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். இது சகல குரலோசைகளுக்கும் பொதுவானதாகும். இதனடிப்படையில் நாம் ஒருபோதும் சம்பந்தப்பட்ட அமைப்புக்கு நிதி வழங்குனர்களாக செயற்படவில்லை.
 
இந்த நாட்டின் தேசிய தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் என்ற வகையில் இந்த நாட்டின் ஐக்கியத்துக்கும் இன நல்லுறவுக்கும் எம்மை அர்ப்பணிக்கக் கடமைப்பட்டுள்ளோம்'' எனவும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை பொது பல சேனா எனும் பெயரில் அமைந்த குறித்த குரலோசை தொடர்பான விபரங்களை மொபிடெல் நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து நேற்று முதல் நீக்கியுள்ளது. இருப்பினும் பொது பல சேனாவின் குரலோசையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதா இல்லையா என்பது பற்றி இதுவரை அந்நிறுவனம் அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாணந்துறையில் இடம்பெற்ற பொது பல சேனாவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவ்வமைப்பின் செயலாளர், மொபிடெல் மூலம் தமது குரலோசையை தரவிறக்கம் செய்யும்பட்சத்தில் அதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதி தமது அமைப்புக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment