Thursday, March 28

போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளிக் கிளம்பியுள்ளது: ஹக்கீம்

hakeemஅமைச்சரின் ஊடக செயலாளர்: முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நிந்தவூரில் வார இறுதியில் நடைபெற்ற ஒன்றுகூடலொன்றின் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமது தனித்துவத்தைப் பேணும் ஆடை அணிகளை முஸ்லிம்கள் அணிந்து வந்துள்ளனர். அவ்வாறு அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டுவது புதியதல்லவென்றும் தெரிவித்தார்.

இலங்கையின் பழமையான மத்ரஸாக்களில் ஒன்றாக விளங்கும் 1954 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, 350 க்கும் மேற்பட்ட உலமாக்களை உருவாக்கியுள்ள அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் 60 ஆவது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பில் இதன்போது ஆரம்பத்திலேயே கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு இன்றைய சூழ்நிலைபற்றி வினவப்பட்டபோது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லிம்களுக்கு எதிரான பேரினத் தீவிரவாதிகளின் வெறுப்பு நடவடிக்கைகளுக்கு சமூக, அரசியல், வர்த்தகப் பரிமாணம் என மூன்று பரிமாணங்கள் உள்ளன. காலம் காலமாக இவற்றின் மீது பேரினத் தீவிரவாதிகளின் கவனம் திரும்பியிருந்தது.
அவர்கள் அவ்வப்போது முஸ்லிம்களை சீண்டிப் பார்த்து நாங்கள் எந்த அளவுக்கு சகித்துக்கொள்கிறோம் அல்லது எங்களது பதில் நடவடிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்பதை பரீட்சித்து வந்துள்ளனர்.
போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் இப்பொழுது வெளிக்கிளம்பியுள்ளது. வெளியில் வந்த பூதத்தை மீண்டும் போத்தலுக்குள் அனுப்புவது இலேசான காரியமல்ல. ஆப்பிழுத்த குரங்கின் நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மத்தியில் வேறுபட்ட சிந்தனைக் கோட்பாடுகள் (Schools of Thoughts) காணப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.பலவீனமான மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பலமான அரசாங்கத்திற்கு உண்டென நான் முன்னரும் வலியுறுத்தியிருக்கிறேன்.
முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்திருப்பதாக அச்சமடைகின்றனர். அண்மையில் நான் பிறப்பு, இறப்பு பற்றிய தலைசிறந்த புள்ளிவிபர ஆய்வாளர் பேராசிரியர் ஜயந்த திஸாநாயக்கவை சந்திக்க நேர்ந்த பொழுது அவர், முஸ்லிம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். பொதுவாக சனத்தொகை விகிதாசாரத்தில் ஏற்ற இறக்கம் காணப்படுவது இயல்பானது என்றும், அது மாறும் தன்மை வாய்ந்தது என்றும் அதற்காக சிங்கள மக்கள் வீணாக அஞ்சவோ, அலட்டிக்கொள்ளவோ தேவையில்லை என்று என்னிடம் கூறினார்.
இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து ஏழு முஸ்லிம் நாடுகள் வாக்களித்திருக்கின்றன. அத்துடன், 52 நாடுகள் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகளின் அமைப்பு ஜனாதிபதிக்கு இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு முக்கியமான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளன என்றார்.
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி இஷாக், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி செயலாளர் மௌலவி யூ.எம். சஹீத், அதன் பொருளாளர் யூ.எல். வாஹித், மௌலவி ஹாஷிம் (மதனி), மன்னார் அனர்த்த முகாமை உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முஹம்மது றியாஸ் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இவ் ஒன்றுகூடலில் பங்குபற்றினர்.

No comments:

Post a Comment