Saturday, March 9

ஜெனீவாவில் முஸ்லிம் ஆதரவைப் பெறுவதற்கு கோதாபய இயக்கும் "ஊடக நாடகம்"!


பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் மற்றும் அவ்வமைப்பின் நெறியாளர் டிலன்த விதானகே ஆகியோரை ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு நிறைவுபெறும்வரை தடுப்புக் காவலில் வைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபே ராஜபக்‌ஷ, சிரேஷ்ட உதவிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயகவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர்கள் கைதுசெய்யப்பட்டாலும், எந்த விதமான குறைபாடுகளும் இல்லாதவகையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் பகுதியில் தங்க வைக்குமாறும் கூறியுள்ளார்.
பொதுபலசேனா அமைப்பின் செயல்பாடுகள் நாட்டிற்குள் அரசுக்கு மிகுந்த பலத்தை அளித்தாலும் ஜெனீவா மாநாட்டில் முஸ்லீம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள அது முட்டுக் கட்டையாக உள்ளது.

எனவே, அவ்வமைப்பிற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பதாக காட்சிப்படுத்தும் வகையில் விரைவில் செயல்படுமாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பாதுகாப்பு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹலால் பிரச்சினையை முன்னிறுத்தி முஸ்லீம் ஒருவரின் மூலம் முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்டு செயல்பட்டால் அது சிங்கள - முஸ்லீம் பிரச்சினையைத் தோற்றுவிக்கும்.
எனவே பௌத்த பிக்கு ஒருவரின் மூலமே பொதுபலசேனாவுக்கு எதிரான முறைப்பாட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் உதவிப் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை "ஆஸ்சர்ய லமா லொவே ஒபய் மமய்" (அதிசயமான குழந்தை உலகத்தில் நீங்களும் நானும்) அமைப்பின் தேசிய நிகழ்ச்சி இயக்குநர் ஹனடியே சமித தேரர் என்பவர் மஹரகமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
பொதுபலசேனா இயக்கத்தின் மூலம் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் அவ்வியக்கத்தின் இளைஞர் செயற்பாட்டாளர் ஒருவர் தன்னிடம் வாங்கியிருந்த 1.2மில்லியன் ரூபாவைத் திருப்பித் தராமல் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மஹரகமை பொலிஸாரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, இளைஞரின் வாக்குமூலத்தை மேற்கோள்காட்டி பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் நெறியாளர் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்யவுள்ளனர்.
இவையனைத்தும் உதவிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவின் இயக்கத்திலேயே நடைபெற்றுகிறது.
ஜனாதிபதிக்கு சர்வதேச மட்டத்தில் பொதுபலசேனா அமைப்புக் குறித்துத் தொடர்ச்சியாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பொதுபலசேனா அமைப்புடன் அரசுக்கு எவ்விதத் தொடர்புகளும் இல்லை என நிரூபிக்க வேண்டியுள்ளதாகவும், வருகிற நாட்களில் சில எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், எனினும் அது குறித்து குழப்பமடையத் தேவையில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் பொதுபலசேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த தேரருக்கு உறுதியளித்துள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் அவ்வமைப்பிற்கான தமது ஆதரவு எப்போதும்போலவே இருக்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளரின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரும் பொதுபல சேனாவில் களமிறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கான ஆதாரங்கள் மிக விரைவில் வெளியிடுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

No comments:

Post a Comment