ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்கான திட்டத்தை கத்தர்
ஆட்சியாளர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அரபு உச்சிமாநாட்டில்
முன்வைத்துள்ளார். அரபு லீக் உச்சிமாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் நடத்திய
உரையில் அவர் இத்திட்டத்தை முன்மொழிந்தார்.
அவர் தனது உரையில் கூறியது: சுற்றுப்புறங்கள் அருள்பாலிக்கப்பட்டதாக
திருக்குர்ஆன் கூறும் பைத்துல் முக்கத்தஸின் தூய்மையை களங்கப்படுத்தும்
இஸ்ரேலின் நடவடிக்கையை அரபு உலகம் பார்த்துக்கொண்டு இருக்க கூடாது.
ஃபலஸ்தீனின் பாதுகாப்புக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை அரபு லீக்
திரட்டவேண்டும். அதில் 2.5 மில்லியன் டாலரை கத்தர் அளிக்கும்.
ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்த எகிப்தின்
தலைமையில் கெய்ரோவில் வைத்து மினி அரபு உச்சிமாநாடு நடத்தப்படவேண்டும்.
இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க ஃபத்ஹ்-ஹமாஸ் ஐக்கியத்தை
வலுப்படுத்தவேண்டும். இரு பிரிவு பிரதிநிதிகளையும் மினி உச்சிமாநாட்டில்
பங்கேற்க செய்யவேண்டும்.
கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக கொண்ட சுதந்திர ஃபலஸ்தீன் உருவாக்குவதற்கு
முன்னோடியாக, ஆரம்பக்கட்ட நடவடிக்கை என்ற நிலையில் இடைக்கால சுதந்திர அரசை
உருவாக்கவேண்டும். மேற்கு கரை, காஸ்ஸா உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திர
தேர்தல் நடத்தவேண்டும். சுதந்திரமான நபர்களை உட்படுத்தி தற்காலிக அரசு
உருவாக்கப்படவேண்டும்.
இந்த நடைமுறையை சீர்குலைக்கவோ, தாமதப்படுத்தவோ முயற்சிப்பவர்கள்
அல்லாஹ்வோடும், வரலாறு மற்றும் தாய் நாட்டுக்கும் பதில் அளிக்கவேண்டும்
என்று கத்தர் அமீர் எச்சரிக்கை விடுத்தார்.
சிரியா விவகாரத்திலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்வைத்தார் கத்தர்
ஆட்சியாளர்.இரத்தக்களறியை முடிவுக்கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்த கத்தர் அமீர், சிரியா மக்களின்
விருப்பங்களை நிறைவுச் செய்யும் வகையில் இடைக்கால அரசை உருவாக்கவேண்டும்
என்று அறிவுறுத்தினார். சிரியாவில் அமைதியான முறையில் அதிகாரம்
ஒப்படைக்கப்படுவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று அவர் கோரிக்கை
விடுத்தார்.
No comments:
Post a Comment