கிழக்கு மாகாணத்தின் பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும் இன்று ஹர்த்தால்
அனுஷ்டிக்கப்படுகிறது. பாடசாலைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் தவிர்ந்த
அனைத்து தனியார் வர்த்தக நிலையங்களும் வங்கிகளும் மூடப்பட்டுள்ளன.
முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த பேரினாவதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும்
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் இன்றைய
தினம் ஹர்த்தால் அனுஷ்டித்து சாத்வீகமான முறையில் போராட்டம் நடத்துமாறு
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு வேண்டுகோள்விடுத்திருந்தது. இதற்கமைவாகவே
இன்று முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்றைய தினம் முஸ்லிம்கள் ஹர்த்தால் அனுஷ்டிக்கக் கூடாது என பாதுகாப்பு
தரப்பினரால் பல்வேறு அழுத்தங்களும் வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டிருந்த
நிலையிலேயே கிழக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் இடம்பெறுகின்றமை
குறிப்பிடத்தக்கது.
ஏறாவூரில்....
இன்று 25.03.2013 திங்கள் காலையில் இருந்து ஏறாவூர் நகர் முழுக் கடையடைப்பால் வெறிச்சோடியிருக்கின்றது.
ஹர்த்தால் கடையடைப்பை இன்று மேற்கொள்ள வேண்டாம் என நேற்றிரவு முதல்
அடிக்கடி பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளிலும் ஏனைய குறுஞ்செய்திச்
சேவைகளுக்கூடாகவும் தகவல்கள் கூறப்பட்டிருந்தபோதும் அவை புறக்கணிக்கப்பட்டு
முழுமையான ஹர்த்தால் இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
தவணைப் பரீட்சை காரணமாக பாடசாலைகள் வழமைபோன்று இயங்குகின்றன.



காத்தான்குடியில்...
காத்தான்குடி நகரில் வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுச் சந்தை அனைத்தும்
மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பாடசாலைகளும் அரச அலுவலகங்களும் வழமைபோன்று
இயங்குகின்றன. போக்குவரத்துக்கள் வழமைபோன்று இடம்பெறுகின்றன.
ஹர்த்தாலில் ஈடுபட வேண்டாம் என நேற்றிரவு காத்தான்குடி பள்ளிவாசல்
சம்மேளனமும் ஜம்இய்யதுல் உலமாவும் இணைந்து பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளின்
அறிவித்தல் விடுத்திருந்தன. அத்துடன் இன்றைய தினம் வர்த்தக நிலையங்களை மூட
வேண்டாம் என பொலிசாரும் இராணுவத்தினரும் இப் பிரேதச வர்த்தகர்கள் மற்றும்
முக்கியஸ்தர்களிடம் வேண்டுகோள்விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




கல்குடாவில்....
ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
கல்முனையில்....
கல்முனை நகர் ஹர்த்தால் காரணமாக வெறிச்சோடியிருக்கிறது. சகல தனியார்
வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளும் அரச அலுவலகங்களும்
வழமைபோல் இயங்குகின்றன. போக்குவரத்து வழமைபோன்று இடம்பெறுகின்றது.
இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் பல முஸ்லிம் பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாணத்தில்....
யாழ்ப்பாண நகரின் முஸ்லிம் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
திருமலை நகரில்....
திருகோணமலை நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வர்த்தக நிலையங்கள்
மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பாடசாலைகளும் அரச அலுவலங்களும் இயங்குகின்றன.
போக்குவரத்தும் வழமைபோன்று இடம்பெறுகின்றது. |
No comments:
Post a Comment