30 வருட யுத்தத்தால் சீரழிந்து சின்னா
பின்னமான இலங்கைத் திரு நாடு யுத்தம் நிறைவு பெற்ற நிலையில் இன்று மீண்டும்
அபிவிருத்திப் பாதையில் வீறு நடைபோட்டுக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாத
சில தேச விரோத சக்திகள்
நாட்டில் கலவரத்தைத் தோற்றுவித்து இந்நாட்டை மீண்டும்
அதல பாதாளத்துள் தள்ள பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத்
பதியுதீன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள அச்ச சூழ் நிலை குறித்து
அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு அவர்
கூறினார்.மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது -
இவர்கள் ‘பொது பல சேன’, ‘ சிங்கள ராவய’ என்று
பல பல பெயர்களில் இயங்கிக் கொண்டு ஒரே இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டு
தொடர்ச்சியாக முஸ்லிம்களின் உணர்வுகளை குத்திப் பார்க்கின்ற செயல்களைச்
செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நாட்டின் பெரும்பான்மையான சிங்கள பௌத்த
மக்கள் இச் சிறிய குழுக்களின் துவேசப் பேச்சுக்களை ஆதரிக்கவில்லை. அது
மட்டுமல்லாமல் அவர்கள் எப்போதும் பொறுமையைக் கடைப்பிடிக்கின்ற ஒரு சமூகமாக
வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.
அரசியல் பின்னணியுடன் 1983ம் ஆண்டு ஒரு பாரிய
இனக்கலவரம் ஏற்பட்ட போதும் அதன் பின்னர் அவர்கள் ஒரு பொறுமையான சமூகம்
என்று சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்ததை நாம் நன்றியுடன் நினைவு
கூர்கின்றோம்.
அம்பாறை அறந்தலாவையில் பௌத்த பிக்குகள்
கொல்லப்பட்ட போதும், கண்டி தலதா மாளிகை மீது தாக்குதல்
தொடுக்கப்பட்டபோதும், கெப்பிட்டி கொல்லாவையில் பஸ்ஸில் சென்றவர்கள்
கொல்லப்பட்ட போதெல்லாம் அவர்கள் காட்டிய பொறுமையை வரலாறு தம் பக்கங்களில்
பதிவு செய்திருக்கின்றது.
எனவேதான், இந்நாட்டு முஸ்லிம்களின் அதி உயர்
மார்க்க பீடமான ஜம்மியதுல் உலமாவை, இத்தேச விரோத சக்திகள் ஈவிரக்கமின்றி,
மிகக் குரூரமான முறையில் விமர்சனம் செய்தபோது, எம் இதயம் ரணகளமாகியும் நாம்
பொறுமை காத்தோம். நாம் இத்தேச விரோத சக்திகளுக்கெதிராக அள்ளி எறிகின்ற
வார்த்தைகள். பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைப் புண் படுத்திவிடக்
கூடாதே! என்பதில் அக்கறையாக இருந்தோம்.
ஹலால், விவகாரச் சூடு ஓரளவு தணிந்த நிலையில் இன்று புதிய புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் பெண்கள் அணிகின்ற ஆடை இன்று இவர்களது
கண்களை உறுத்துகின்றது. முஸ்லிம்களின் பொருளாதாரம் இவர்களின் இலக்காக
மாறியுள்ளது. முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனையே இவர்கள் இன்று
இழிவுபடுத்த தொடங்கியுள்ளார்கள்.
சிங்கள பௌத்த மக்களை உணர்ச்சி வசப்படுத்தி
முஸ்லிம்களுக்கெதிராக கிளர்ந்தெழச் செய்வதற்காக பச்சைப் பொய்களையும்
புழகுகளையும் கட்டவிழ்த்து விடுகின்றார்கள்.
‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணவு
வழங்குகின்றபொழுது மூன்று முறை துப்பவிட்டு வழங்கும்படி திருக்குர்ஆனில்
குறிப்பிடப்படுள்ளதாக ஒரு பச்சைப் பொய்யை நாக்கூசாமல்
கூறியிருக்கின்றார்கள். இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக
இப்பொழுது, ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
திடீரென முஸ்லிம்களின் மீது இவ்வெறுப்பு ஏற்படுவதற்கு முஸ்லிம்கள் செய்த குற்றமென்ன? என்று வினவ விரும்புகின்றோம்.
பல இழப்புக்களுக்கு மத்தியில் இந்நாடு
பிளவுபட்டுவிடக் கூடாது என்பதற்காக செயற்பட்டது குற்றமா? அல்லது
இந்நாட்டிற்கெதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவரப்பட்ட பொழுது நாட்டுக்காக
முஸ்லிம் நாடுகளின் ஆதரைவக் கோரியது குற்றமா? அல்லது முஸ்லிம் நாடுகள்
ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதராவாக வாக்களித்தது குற்றமா? அல்லது பல
நூற்றாண்டுகளாக சிங்கள சமூகத்துடன் அந்நியோந்யமாக வாழ்ந்தது போல்
தொடர்ந்தும் வாழவேண்டுமென்று ஆசைப்படுவது குற்றமா? அல்லது முப்பது
வருடங்கள் சீரழிந்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல
எத்தனிக்கின்ற ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தியது குற்றமா? என்று கேட்க
விரும்புகின்றோம்.
ஜம்இய்யதுல் உலமா கப்பம் பெறுவதாக குற்றஞ் சாட்டுபவர்களிடம் கேட்க நாம் விரும்புவது
1. ஜம்இய்யதுல் உலமா பலவந்தமாக ‘ஹலால்’
சான்றிதழை வழங்கியதாகக் கூறினீர்கள். அவ்வாறு பலவந்தப்படுத்துவதற்கு
அவர்களிடம் இருந்த ‘பலமோ’ அல்லது ‘அதிகாரமோ’ என்னவென்று கூறமுடியாது.
எவ்வாறு அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டார்கள் என்று கூறமுடியுமா?
2. அவ்வாறு பலவந்தப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் பொலிஸில் முறையிடவில்லை என்று கூறமுடியமா?
3. ஆகக் குறைந்தது, இவ்வளவு போராட்டத்தை
நீங்கள் நடாத்தியும் ஏன் குறித்த வர்த்தகர்கள் (இரண்டொரு பேரைத் தவிர)
ஹலால் சான்றிதழை வாபஸ் பெறவில்லை என்று கூற முடியுமா?
4. ’ஹலால்’ சான்றிதழைப் பெறுகின்ற
வரத்தகர்களை விட்டுவிட்டு அவர்களுக்கு உதவி செய்யப்போன ஜம்இய்யதுல் உலமா
சபையை மிகவும் அசிங்கமான முறையில் தொடர்ச்சியாக விமர்;சிப்பது எந்தத்
தார்மீகத்தின் அடிப்படையில் என்று கூறமுடியுமா?
5. மறைந்த தலைவர் அஷ்ரப் இரண்டு ஆயுதக்
கொள்கலன்கள் கொண்டு வந்திருந்தால், அவர் மறைந்த 12 வருடங்களில் ஏன்
வாய்திறக்கவில்லை என்று கூறமுடியுமா?
6. அல்லது இப்பொழுதுதான் யாராவது அவ்வாறான ஒரு கட்டுக்கதையைக் கூறச் சொல்லியிருக்கின்றார்கள், என்றால் அதையாவது கூறமுடியுமா?
7. குர்ஆனில் மூன்று முறை துப்பச் சொல்லிருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது, எத்தனையாம் அத்தியாயம் வசனம் என்று கூறமுடியுமா?
8. அவ்வாறு கூறமுடியாவிட்டால் ‘மக்களை ஏமாற்றுவதற்காக பொய் கூறினோம்’ என்பதையாவது ஏற்றுக்கொள்வீர்களா?
9. இந்நாட்டில் ஒரு சிங்கள – முஸ்லிம்
கலவரத்தை ஏற்படுத்தி இந்நாட்டின் அபிவிருத்தியை மீண்டும் மழுங்கச் செய்வதன்
மூலம் நீங்கள் அடைய எத்தனிக்கின்ற லாபமென்ன? என்பதையாவது கூறுவீர்களா?
10. இந்நாடு யுத்தமொன்றைச் சந்திக்காமல்
இருந்திருந்தால் சிங்கப்பூரைவிட உயர்ந்த நிலையை அடைந்திருக்கும். ஆனால்
உங்களைப் போன்றவர்களின் இனவாத செயற்பாடு அதனை அன்று தடுத்ததன் காரணமாக,
இந்நாட்டில் கணிசமானோர் இன்னும் வறுமைக் கோட்டின் கீழ் வாடுகின்றார்கள்.
படித்தவர்கள் தொழிலின்றி அலைகின்றார்கள். அடிப்படை வசதிகள் இல்லாமல்
எத்தனையோ பேர் தவிக்கின்றார்கள். இந்நிலையில் சிங்களம்: (இந்நாட்டை
மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல ஜனாதிபதி முயற்ச்சிக்கும்
பொழுது இனவாதத்தைத் தூண்டி அதற்கு முட்டுக் கட்டை போட
எத்தனிக்கின்றீர்களே!) இந்நாட்டின் மீதும் இந்நாட்டு மக்களின் மீதும்
உங்களக்குப் பாசமே இல்லையோ?
தமிழ்: (இந்நாட்டை இனவாதத்தீக்குள் தள்ளி அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சிக்கின்றீர்களோ?)
தமிழ்: (இந்நாட்டை இனவாதத்தீக்குள் தள்ளி அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சிக்கின்றீர்களோ?)
11. இந்நாடு பாதிக்கப்படும் பொழுது,
இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான சிங்கள பௌத்த மக்கள் தானே முதலில்
பாதிக்கப்படப் போகின்றார்கள். சிங்கள பௌத்த மக்களுக்காக பாடுபடுகிறோம்
என்று கூறிக்கொண்டு அவர்களுக்கே எதிராகவும் செயற்பட நீங்கள் போடும் வேசம்
இல்லையா?
எனவே, வேசம் கலையுங்கள் முஸ்லிம்களை
நிம்மதியாக வாழவிடுங்கள். இந்நாட்டிற்கு திரும்பியிருக்கின்ற
அமைதிக்காற்றை, சகலரும் நிரந்தராமாக சுவாசிக்க அனுமதியுங்கள். வெளிநாட்டு
சக்திகளுக்கு துணைபோகும் கைங்கரியத்தை நிறுத்துங்கள் என்றும் அமைச்சர்
றிசாத் பதியுதீன் கேட்டுள்ளார்.
No comments:
Post a Comment