Tuesday, March 19

போர்க்குற்றம் குறித்து இலங்கைதான் விசாரிக்க வேண்டும் - அமெரிக்க தீர்மானத்தில் திடீர் மாற்றம்!

போர்க்குற்றம் குறித்து இலங்கைதான் விசாரிக்க வேண்டும் - அமெரிக்க தீர்மானத்தில் திடீர் மாற்றம்!



இலங்கைக்கு எதிரான இறுதியான தீர்மான வரைபை ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலில் அமெரிக்கா நேற்று மாலை சமர்ப்பித்துள்ளது.

ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் செம்பர்லைன் டோனஹே இந்த தீர்மான வரைபை பேரவையில் சமர்ப்பித்தார்.

அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்துக்கு 32 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

ஒஸ்ரியா, கனடா, குரோசியா, பெல்ஜியம், டென்மார்க், எஸ்தோனியா, பிரான்ஸ், பின்லாந்து, டென்மார்க், ஜோர்ஜியா, ஜேர்மனி, கிறீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து. இத்தாலி, லிச்ரென்ஸ்ரெய்ன், லித்வேனியா, மால்டா, மொன்ரினிக்ரோ, நோர்வே, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சுலோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெய்ன், சென்.கிட்ஸ் அன் நெவிஸ், சுவீடன், சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, வட அயர்லாந்து ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளன.

முன்னர் வெளியான தீர்மான வரைபுகளில் இருந்த கடுந்தொனி இறுதி வரைபில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா வெளியிட்ட இறுதி வரைபு தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது சிலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இத்தீர்மானம் தற்போது நான்காவது முறையாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு திருத்தங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

*இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதியில் இராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும்.

*போரின் போது தமிழர்கள் பலர் காணாமல் போனது கவலை அளிக்கிறது.

*போர்க்குற்றம் ‌தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.

*எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றும் திட்டம் இலங்கைக்கு இல்லை.

*இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி, நல்லிணக்கம் முழுமையாக செயல்படவில்லை.

*மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அந்த வரைவுத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி. எனப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த போதிலும், எல்.எல்.ஆர்.சி. திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment