நேற்று கொழும்பில் நடைபெற்ற ஹலால் தொடர்பான விசேட தீர்மானங்களை
அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பெல்லன்வில
விமலரத்ன தேரரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க்
ரிஸ்வி முப்தி, வர்த்தக சம்மேளன தலைவர் ஆகியோர் அளித்த பதில்கள் வருமாறு:
கேள்வி: இலங்கையில் இருந்து ஹலால் இலச்சினை விலக்கப்பட்டால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் அல்லவா?
ரிஸ்வி முப்தி: இல்லை
முஸ்லிம்களால் ஹலால் எது ஹராம் எது என இனம் கண்டு கொள்ள இயலும். உற்பத்திப்
பொருட்களில் அடங்கியிருக்கும் மூலப்பொருட்களின் விபரங்கள்
பொறிக்கப்பட்டிருப்பதை வாசித்து ஹலாலை இனம் கண்டு கொள்ள முடியும்.
கேள்வி: ஹலால் விவகாரத்தை விசாரித்து
அறிக்கையொன்றினைப் பெற்று தீர்வு காணும் வகையில் ஜனாதிபதியினால் அமைச்சரவை
உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் உலமா சபைஇந்த அவசர
தீர்மானத்தை மேற்கொண்டது.?
ரிஸ்வி முப்தி: நாட்டில்
சிறிய குழுவொன்று ஹலால் பற்றி பேசிப் பேசி ஒரு பதற்ற நிலையைத்
தோற்றுவித்துள்ளது. மக்கள் பீதியில் உள்ளார்கள். எனவே நாட்டில் நிலவும்
நிலைமையை கருத்திற்கொண்டு இந்த அவசர தீர்மானத்தை எட்ட வேண்டியிருந்தது.
சமூக நலனே எமது இலக்கு. நாம் எமது அறிக்கையை அமைச்சரவை உபகுழுவிடம்
கையளிக்கவுள்ளோம்.
கேள்வி: பொது பலசேனா தொடர்ந்தும்
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிறதே ? அவர்கள் இதன் பிறகும் பல
எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடரவுள்ளனரே இது பற்றி என்ன கூறுவீர்கள்?
பெல்லன்வில விமலரத்ன தேரர்: மகா
சங்கத்தினர் என்ற வகையில் என்னால் அடுத்த இயக்கம் ஒன்றைப் பற்றி கருத்து
தெரிவிக்க முடியாது. எந்த சமயத்திலும் தீவிரவாத குழுக்கள் இருக்கின்றன.
என்றாலும் அவ்வாறான தீவிரவாத குழுக்கள் சமூகங்களிடையில் மோதல்களை
ஏற்படுத்தக் கூடாது. அனைத்து சமூகங்களும் சமயங்களும் இனங்களுக்கிடையில்
ஒற்றுமையையே வலியுறுத்துகின்றன. நாட்டில் மீண்டும் ஒரு கலியுகம் ஏற்பட ஒரு
போதும் இடமளிக்க முடியாது.
கேள்வி: உலமா சபை மகாநாயக்க தேரர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்ததைகள் நடத்தியுள்ளதா?
ரிஸ்வி முப்தி: உலமா சபை
மகா நாயக்கர்களைச் சந்திக்க கண்டிக்கு விஜயம் செய்தது. அப்போது அவர்களைச்
சந்திக்க முடியாமல் போனது. அவர்களின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடினோம்.
ஹலால் விவகாரத்தை பேச்சுவார்த்தைகள் மூலம் கையாண்டு தீர்வு பெற்றுக்
கொள்ளும்படி அவர்கள் தெரிவித்தார்கள். அதன்பின்பே நாங்கள் மகா
சங்கத்தினருடனும் இலங்கை வர்த்தக சம்மேளனத்துடனும் பேச்சுவார்த்தைகளை
நடத்தினோம்.
கேள்வி: மகா சங்கத்தினரும் இணைந்து
இந்த ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துகிறீர்கள். நீங்கள் எடுத்த தீர்மானத்தை
மகா நாயக்கரிடம் அறிவித்து விட்டீர்களா?
ரிஸ்வி முப்தி: இதன்
பின்புதான் அறிவிப்போம் . மகாநாயக்கர்களை நாம் விட்டுவிடவில்லை. இங்கு
அங்கீகாரம் பெற்ற நிக்காயாக்களின் மத குருமார்கள் வந்திருக்கிறார்கள்.
கேள்வி: ஹலால் இலச்சினை வாபஸ் வாங்கப்பட்ட இந்தத் தீர்மானம் எப்போதிலிருந்து அமுலுக்கு வரும்?
ரிஸ்வி முப்தி: உடனடியாக.
ஆனால் தற்போது ஹலால் இலச்சினை பொறிக்கப்பட்ட சந்தையிலுள்ள உற்பத்தி
பொருட்களும், உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்டுக்
கொண்டிருக்கும் ஹலால் இலச்சினை பொறிக்கப்பட்ட பொருட்களும் தீரும் வரை
சந்தைப்படுத்தலாம்.
கேள்வி: ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்தி பொருட்களுக்கு ஹலால் இலச்சினை செல்லுபடியாகுமா?
ரிஸ்வி முப்தி: ஆம் .
மத்திய கிழக்கு மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளுக்கும் ஹலால் உற்பத்தி
பொருட்களை ஹலால் இலச்சினையுடன் கோரும் நாடுகளுக்கு வழங்க முடியும்.
கேள்வி: ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் தேவைப்படும் போது உலமா சபை கட்டணம் அறவிடுமா?
ரிஸ்வி முப்தி: இல்லை, கட்டணம் அறவிடப்படமாட்டாது. கட்டணமின்றி இலவசமாகவே ஹலால் சான்றிதழ் வழங்கப்படும்.
கேள்வி: ஹலால் சான்றிதழ் பெற்றுக்
கொள்ளப்படுவதால் செலுத்தப்படும் கட்டணம் பொருட்களின் விலை நிர்ணயத்தில்
சேர்க்கப்படுவதால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என பொதுபலசேனா குற்றம்
சாட்டியிருந்தது. இந்நிலையில் ஹலால் சான்றிதழ் விலக்கப்பட்டதனால்
பொருட்களின் விலை குறையுமா?
வர்த்தக சம்மேளன தலைவர்:
இல்லை குறையாது. ஹலால் சான்றிதழ் கட்டணம் பொருட்களின் விலை நிர்ணயத்தில்
சேர்க்கப்படவில்லை. ஒரு பொருளுக்கு சதக்கணக்கிலே செலவாகிறது.
கேள்வி: ஹலால் சான்றிதழ் வேண்டாம் என்கிறீர்கள். வெஜிடேரியன் சான்றிதழ் எவரும் கோரினால்?
வர்த்தக சம்மேளன தலைவர்: இது திறந்த உலகம் எவரும் எதையும் கோரலாம். அதில் தவறில்லை.
கேள்வி: உலமா சபை ஹலால் சான்றிதழ்
வழங்குவதற்கு செலவுகள் ஏற்படுகின்றன. அதற்காகவே கட்டணம் அறவிடப்படுவதாக
தெரிவித்தது இப்போது எப்படி இலவசமாக வழங்க முடியும்.
ரிஸ்வி முப்தி: நாம் எமது
நிர்வாக செலவுகளுக்கே கட்டணம் அறவிட்டோம். அது நாட்டின் அமைதிக்கு பாதகமாக
இருக்குமென்பதால் இதனை விட்டுக் கொடுத்து இலவசமாக வழங்கத்தயாராக
இருக்கிறோம்.
கேள்வி: ஹலாலுடன் வேறும் பல
பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றனவே.
இவற்றை எவ்வாறு தீர்ப்பீர்கள்?
ரிஸ்வி முப்தி: எதிர் காலத்தில் பிரச்சினைகள் எதும் இடம்பெற்றால் ஒன்று கூடி கலந்துரையாடி தீர்வுகள் மேற்கொள்வோம்.
No comments:
Post a Comment