Thursday, March 7

நேர்காணல்: அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி










ஜம்இய்யத்துல் உலமா சபை ஹலால் விவகாரத்தில் தெளிவாகவே இருக்கிறது. முஸ்லிம்களின் வாழ்க்கை முறை ஹலாலானதாக இருக்க வேண்டும். ஹலால் உணவை உண்பதும் ஹலால் வாழ்க்கை முறையும் முஸ்லிம்களுக்கு கட்டாயமானதாகும்.
சவால்கள் நிறைந்த இச் சூழலில் நாங்கள் நாட்டின் நன்மைக்காகவும் சமாதானத்திற்காகவும் பொதுபலசேனாவுக்கு நல்ல எண்ணங்களைக் கொடுக்க வேண்டுமெனவும்பிரார்த்திக்கிறோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி 'விடி­வெ ள்ளி'க்கு அளித்த பிரத்­தி­யேக செவ்­வியில் தெரிவித்தார்.
ஹலால் விவகாரம் உட்பட பல்வேறு சவால்களை சமூகம் எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில் இது தொடர்பாக உலமா சபையின் கருத்துக்களை அறிய 'விடிவெள்ளி' உலமா சபையின் ஹலால் பிரிவில் ரிஸ்வி முப்தியைச் சந்தித்தது. அச்சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவருடனான நேர்காணலை இங்கு தருகிறோம்.
நேர்காணல்: ஏ.ஆர்.ஏ.பரீல்
விடிவெள்ளி: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பாராளுமன்றத்தினால் அங்கீக ரிக்கப்பட்ட நிறுவனமா?

 
ரிஸ்வி முப்தி:ஆம். பாராளுமன்றத்தினால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (கூட்டிணைப்பு) சட்டம் 2000 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்கத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தில் உலமா சபையின் நோக்கங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இஸ்லாத்தைப் பாதுகாத்தல் மற்றும் போஷித்தல், இஸ்லாத்தின் வழியில் முஸ்லிம்களின் சமூக, கலாசார, பொருளாதார நலன்களை மேம்படுத்தல், அரபு மொழி கல்வி பயில்தலை மேம்படுத்தல் மற்றும் முஸ்லிம் உட்பட ஏனைய சமயத்தவர்கள் இஸ்லாத்தைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள வழிவகைகள் செய்தல் போன்றன உட்பட பல நோக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
விடிவெள்ளி: ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் சட்டபூர்வமாக உலமா சபைக்கு வழங்கப்பட்டதா?
ரிஸ்வி முப்தி:ஆம். 2002 ஏப்ரல் 3 ஆம் திகதி ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு பாராளுமன்ற செயலாளர் மூலம் உலமா சபைக்கு அனுமதி கிடைத்தது.
இதேவேளை, வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் பாவனையாளர் விவகார அதிகார சட்டம் 2003 ஆம் ஆண்டு 9 ஆம் பிரிவின் கீழ் ஹலால் சான்றிதழ் வழங்கும் ஏகபோக உரிமை உலமா சபைக்கு வழங்கப்பட்டது. இவ் ஏகபோக உரிமை 2007 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டது. இதில் பாவனையாளர் விவகார அதிகார சபைத் தலைவர் சரத் விஜேசிங்க கையொப்பமிட்டிருந்தார். இது 2006.12.13 ஆம் திகதிய விசேட அரசாங்க வர்த்தமானியில் பிசுரிக்கப்பட்டது.
விடிவெள்ளி: ஹலால் சான்றிதழ் வழங்கும் ஏகபோக உரிமை தொடர்ந்தும் உலமா சபையிடம் இருக்கிறதா?
ரிஸ்வி முப்தி:இல்லை. 2007 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்பட்டிருந்த ஏகபோக உரிமை சில காலத்தின் பின்பு நீக்கப்பட்டது. ஹலால் சான்றிதழ் சம்பந்தப்பட்ட துறையில் அனுமதிக்கப்பட்ட எவராலும் வழங்கப்படலாம் என்று குறிப்பிட்ட சட்டத்தில் விசேட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இத்திருத்தம் 2007 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்தது. இதனால் உலமா சபைக்கிருந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் ஏகபோக உரிமை இல்லாமல் செய்யப்பட்டது.
விடிவெள்ளி: ஹலால் சான்றிதழ் நெறிமுறையற்ற குழந்தை. இக்குழந்தைக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ள உலமாக்கள் மகாநாயக்கர்கள் பின்னாலும் ஜனாதிபதியின் பின்னாலும் சுற்றித் திரிவதாக பொதுபலசேனா குற்றம் சாட்டுகிறதே?
ரிஸ்வி முப்தி: இந்த நாட்டில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமையுள்ளது. அனைத்து மக்களும் இன, மத பேதமின்றி வாழ வேண்டும் என்பதே ஜனாதிபதியின் அபிலாஷை. நாட்டில் இனத்துவேசத்தை எவராவது கிளப்ப முயன்றால் நாட்டின் தலைவருடன் தானே பேச வேண்டும்.
நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் ஒருவர் இருக்கும்போது நாம் பொது பலசேனாவுடன் பேச வேண்டிய அவசியமில்லை. எவரும் சட்டத்தைக் கையிலெடுத்துச் செயற்பட முடியாது.
இந்நாட்டில் வாழும் பெளத்த மக்களின் மதத் தலைவர்கள் மகாநாயக்க தேரர்கள் தான். ஒரு குறிப்பிட்ட சிறு மதக் குழுவினரின் வேண்டத்தகாத செயற்பாடுகளை மதத் தலைவர்களிடம் முறையிட்டுத்தானே நியாயம் கேட்க வேண்டும். எங்கள் பக்க நியாயங்களை அவர்களிடமல்லவா தெரிவிக்க வேண்டும். இதில் என்ன தவறு இருக்கிறது.
விடிவெள்ளி: ஹலால் சான்றிதழ் வழ ங்குவதற்காக அதிளவு கட்டணம் வசூ லிக்கப்படுகிறது. இவ்வாறு திரட்டப்படும் நிதி இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளைப் பரப்புவதற்காக செலவழிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உங்கள் விளக்கம் என்ன?
ரிஸ்வி முப்தி:மறுக்கிறேன். ஹலால் சான்றிதழுக்காக நிறுவனங்களிடமிருந்து நியாயமான கட்டணமே அறவிடப்படுகிறது.
ஹலால் சான்றிதழ் பெற்றுக் கொள்வதன் மூலம் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவு ஒரு உற்பத்திப் பொருளுக்கு 10 சதத்தினை விடவும் குறைவாகும். சில நிறுவனங்களுக்கு இது ஒரு சதத்தினை விடக் குறைவாகும்.(அட்டவணையை பார்க்க)
எனவே ஹலால் சான்றிதழுக்கும் பொருளின் விலை நிர்ணயத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
கட்டணம் அறவிடப்படுவது எமது ஸ்தாபன செலவினங்களுக்காகவன்றி வேறு தேவைகளுக்காகவல்ல. பள்ளிவாசல் நிர்மாணம், இஸ்லாமிய பிரசாரம், பயங்கரவாதத்துக்கு செலவிடல் மற்றும் எவ்வித அடிப்படைவாதங்களுக்காகவும் செலவிடப்படவில்லை.
விடிவெள்ளி: இதுவரை ஹலால் சான்றிதழை ஒரே ஒரு நிறுவனம் விலக்கிக் கொண்டுள்ளது என உலமா சபை தெரிவித்திருப்பது முழுப் பொய். உலமாக்கள் பொய் பேசுகிறார்கள். இதுரை 10 நிறுவனங்கள் பொதுபலசேனாவுக்கு ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள எழுத்து மூலம் அறிவித்துள்ளன என பொதுபலசேனா குற்றம் சாட்டுகிறதே?
ரிஸ்வி முப்தி:உலமாக்கள் பொய் பேசத் தேவையில்லை. எப்போதும் எவ்விடத்திலும் எச்சந்தர்ப்பத்திலும் உலமாக்கள் உண்மையே பேசுவார்கள். வர்த்தக நிறுவனங்களும் உற்பத்தியாளர்களும் ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள விரும்பவில்லை. விலக்கிக் கொண்டால் அவர்களே வர்த்தகத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
விடிவெள்ளி: எத்தனை நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது? அவர்களின் நிலைப்பாடு என்ன?
ரிஸ்வி முப்தி:இதுவரை 220 நிறுவனங்களுடன் ஹலால் சான்றிதழ் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு ஹலால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் ஹலால் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. ஹலால் சான்றிதழற்ற உற்பத்திப் பொருட்களை அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. ஹலால் விவகாரம் தொடர்பாக சவால் விடுபவர்கள் நாட்டின் பொருளாதாரத் துறையைப் பற்றிச் சிந்திக்காதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உற்பத்தி நிறுவனங்கள் ஹலாலில் உறுதியாகவே இருக்கின்றன.
விடிவெள்ளி: ஹலால் இறைவனுக்காகப் படைக்கப்பட்டது. அல்லாஹ்வுக்காகப் படைக்கப்பட்டது என பொதுபலசேனா, ஜாதிக ஹெல உறுமய சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு தெளிவுகளை உலமா சபை எவ்வாறு வழங்கியுள்ளது?
ரிஸ்வி முப்தி:ஊடக அறிக்கைகள், பத்திரிகையாளர் மாநாடுகள் மூலம் ஹலால் பற்றிய தெளிவுகள் வழங்கப்பட்டுள்ளன. சந்தேகங்களுக்கு பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான இயக்கங்களும் கட்சிகளும் விளக்கங்களை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. ஹலால் இறைவனுக்காகப் படைக்கப்பட்டதல்ல. அனைத்து மத நம்பிக்கையுடைய வர்களுக்கும் ஹலால் பொருத்தமானதாகும் என்பதை உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.
விடிவெள்ளி: இஸ்லாமிய வங்கி முறையையும் எதிர்க்கும் இலக்கை பொதுபலசேனா கொண்டுள்ளதே?
ரிஸ்வி முப்தி: எமது நாட்டில் சட்டம் உள்ளது. இது ஜனநாயக நாடு. இஸ்லாமிய வங்கி முறைமை பி.எல்.சி. என்ற வங்கிச் சட்டத்தின் கீழே இயங்கி வருகிறது. இதில் என்ன சந்தேகம். இது வட்டியில்லாத வங்கி. இது பெரும்பான்மையி னருக்கும் நன்மையுள்ளதாக இருக்கும்
விடிவெள்ளி: ஜும்ஆ பிரசங்கங்களில் அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை வழங்கப்படுகிறது. இதனை உலமா சபையே மேற்கொள்கிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறதே?
ரிஸ்வி முப்தி: ஜும்ஆ பிரசங்கங்களில் என்ன விடயங்கள் அடங்கியிருக்க வேண்டுமென உலமாசபை ஆலோசனை வழங்குகிறது. ஆனால் எமது ஆலோசனைகள் வன்முறைகளைத் தூண்டி விடுவதாக இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. சமாதானத்திற்கும் சமுதாய நலனுக்கும் அமைவாகவே ஜும்ஆ பிரசங்கங்கள் உள்ளன.
விடிவெள்ளி: முஸ்லிம்களின் காதிக்கோடுகள் மீதும் பொதுபலசேனாவின் கவனம் திரும்பியுள்ளதே?
ரிஸ்வி முப்தி:இஸ்லாம் ஒரு விரிவான பரிபூரண மார்க்கம். இதில் ஒரு பிரிவே காதிக்கோடு. எமது நாட்டில் முஸ்லிம்களுக்கென்று தனியான சட்டம் ஒன்று உள்ளது. இச்சட்டத்தின் மீது எவருக்கும் கை வைக்க முடியாது. நாட்டில் நீதித்துறை, பாதுகாப்புத்துறை என்பனவற்றையும் மீறி சட்டங்களைக் கொச்சைப்படுத்த முடியாது.
விடிவெள்ளி: அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக ஹலால் மட்டுமல்ல மற்றும் பல எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றனவே?
ரிஸ்வி முப்தி:ஆம். பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இல்லை. குறிப்பிட்ட சிறு குழுவினரே இதனை முன்னெடுக்கின்றனர். இக்குழுவினர் குறுகிய நோக்கம் கொண்டவர்கள், நாட்டுப் பற்றற்றவர்கள். நாட்டின் சமாதானத்தை கெடுக்க முயற்சிப்பவர்கள். இவர்களின் பின்னால் வெளிநாட்டுச் சக்திகளும் செயற்படுகின்றன.
விடிவெள்ளி:ஹலால் விவகாரம் தொடர்பில் உலமா சபையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
ரிஸ்வி முப்தி:எமது முடிவில் நாம் தெளிவாக இருக்கிறோம். முஸ்லிம்களுக்கு ஹலால் தேவை. முஸ்லிம்களின் வாழ்க்கை முறை ஹலாலுடன் பின்னிப் பிணைந்தது. உணவு ஹலாலாக இருக்க வேண்டும். ஹலாலான மனைவி தேவை. வர்த்தகத்தில் ஹலால் தேவை.
பொதுபலசேனா ஹலால் விவகாரம் தொடர்பில் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் சுமுகமாக தீர்க்கப்பட்டிருக்கலாம்.
ஹலால் விடயத்தில் நாம் தெளிவாக இருக்கிறோம். அல்லாஹ்விடம் துஆ கேட்கிறோம். நிச்சயம் எமக்கு நன்மை கிடைக்­கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.

No comments:

Post a Comment