முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்டித்தே
ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் தேசிய சுதந்திர முன்னணியின்
பேச்சாளர் முஸம்மில் பேரினவாதிகளுடன் கைகோர்த்து அதனை தோற்கடிக்க
பாரியளவில் முயற்சிகளை மேற்கொண்டார் என மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி
உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் யாரும் தட்டிக்கேற்பதற்கில்லை என அச்செயற்பாடுகள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்போது அதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு சார்பில் நாடுதழுவிய ஹர்த்தாலுக்காக கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுத்தோம். அதனை முறியடிக்க அரசு பல வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டது.
அரசாங்க பங்காளி கட்சியான தேசிய சுதந்திர முன்னணியும் தமது பங்கிற்கு பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. எனினும் அதனை யாராலும் தடுத்து நிறுத்த இயலவில்லை.
இந்த போராட்டமானது முஸ்லிம்களுக்கெதிராக செயற்படும் பேரினவாதிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டதே. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் இருந்துகொண்டு முஸம்மில் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படுகின்றார். சிறுபாண்மையினரை பேரினவாதிகளின் அடிமைகளாக நடத்த முயற்சிக்கின்றார். பேரினவாதிகளின் வலைக்குள் முஸ்லிம்களை சிக்க வைக்க அவர் துணைபோகின்றார்.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயற்படும் சக்திகள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்வர். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணைபோகின்றவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment