Tuesday, March 12

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதம்

 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தமது உறவுகளின் விடுதலை குறித்து அதிவணக்கத்திற்குரிய பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசியல் தைகிகளான எமது உறவுகளின் விடுதலை தொடர்பானவை:

அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச்சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு மிக நீண்டகாலமாக சிறையில் வாழும் எங்களது உறவுகளை மனித நேயத்துடன் நோக்கி அவர்களை பொது மன்னிப்பின் கீழ் அல்லது புனர்வாழ்வின் ஊடாக விடுதலை செய்வதற்கு கருணை குரல் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வேண்டுகின்றோம்.

சிறை இருக்கும் எமது உறவுகளினதும் கண்ணீர் கதறலை வெளிச்சமூகத்திற்கு எடுத்துரைப்பதுடன் எமது நியாயமான இவ் வேண்டுதலின் அவசியத்தை அரச சார்பற்ற மற்றும் சர்வதேச பிரதிநிதிகளுக்கும் எடுத்துக் கூறி எமது உறவுகளின் விடுதலைக்கு வழிசமைக்குமாறு இறை அருளுடன் கோருகின்றோம்.


அதாவது அரசியல் கைதிகளான அனேகமானவர்கள் நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளை சேர்ந்த இளைஞர் யுவதிகள் மற்றும் பெண்கள் வயோதிபர்கள் என பல தரப்பட்டவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் 4 தொடக்கம் 20 வருடங்கள் வரை விளக்கமறியலில் கைதிகளாகவும் இன்னும் சிலர் 5 - 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டும் மற்றும் ஆயுட் கால சிறை தண்டனை வழங்கப்பட்டும் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் உள்ளார்கள்.

இந் நிலையில் எமது உறவுகளின் விடுதலை தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி உட்பட்ட துறைசார் அமைச்சர்கள் அதிகாரிகளிடம் பல தடவைகள் பல்வேறு முறைகளிலும் கோரிக்கை விடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே தங்களின் கவனத்திற்கு நம்பிக்கையுடன் எமது இந்த வேண்டுகோளினை முன் வைக்கின்றோம்.

யுத்தம் முடிவடைந்து நாட்டின் அபிவிருத்தி, புணர்வாழ்வு, மீள் குடியேற்றம் என்பன துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் இலங்கை முழுவதிலும் சுமுக சூழல் ஏற்படுத்தப்பட்டு கடந்த 2009ற்கு பின் எவ்வித பயங்கரவாத செயற்பாடுகளும் நாட்டில் இடம்பெறவில்லை என்றும் அரசாங்கம் கூறி வருகின்றது. அப்படி இருக்கையில் நாமும் எமது உறவுகளும் கண்ணீருடன் கவலையுடனும் நாட்களை நகர்த்தி வருகின்றோம். இத் துன்ப நிலையினை மாற்றி எமது வாழ்விலும் நம்பிக்கை ஒளியினை பெற்றுத் தருமாறு இறைஞ்சுகின்றோம்.

நாம் யுத்த அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு சொத்துக்களை தொலைத்து நிற்கும் அதே வேளை எமது உறவுகளும் எம்முடன் இருந்து பிரிக்கப்பட்டுள்ளதால் இன்று நாங்கள் பலதரப்பட்ட சமூக பொருளாதார கலாசார மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.

எமது உறவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்ற வழக்கு விடயங்களினது சட்டத்தரணி செலவீனங்களை ஈடு செய்ய முடியாது திண்டாடுகின்ற அதே நேரம் சொத்து சுகங்களை இழந்து நிற்கும் நாம் மீதமிருக்கின்ற நிலபுலன்களை விற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

நேரடியாக போரில் பங்கெடுத்த முன்னால் போராளிகளை புனர்வாழ்விற்கூடாக சமூகத்துடன் இணைத்தமை வரவேற்கத்தக்கதே. அதே போல் எமது பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி பொது மன்னிப்பளித்து அல்லது புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டால் நாட்டில் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் மேலோங்கும் என பெரிதும் நம்புகின்றோம்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் வாழ்வை தொலைத்து நிற்கும் எமது சொந்தங்களது நிலையின் நியாயத்தன்மையை சகோதர சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்கின்ற நிலை இன்று தொடங்கியுள்ளதால் கடந்து சென்ற கசப்புணர்வுகளை மறந்து எமது பிள்ளைகளும் இந் நாட்டு அபிவிருத்தியில் பங்கெடுத்து இலங்கை பிரஜைகளாக வாழ ஆசைப்படுகின்றார்கள்.

சூழ்நிலை கைதிகளாக இருக்கும் அவர்கள் கடந்த பட்டறிவுகளை பாடமாகக் கொண்டு இனிவரும் நாட்களை இனிய நாட்களாக எதிர் கொள்ள தயாராக இருக்கின்றார்கள் என்பதை பெற்றோர் பாதுகாவலர் என்ற ரீதியில் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றோம். எனவே நீண்ட நெடுஞ் சிறைவாழ்வில் அடைபட்டு உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க முடியாவிட்டாலும் புணர் வாழ்வின் ஊடான விடுதலையை என்றாலும் பெற்றுத் தருவதற்கு வழிசமைத்து தருமாறு வேண்டுகின்றோம்.

நாட்டின் பொறுப்பு வாய்ந்தவர்கள் என்ற பெருமதிப்புடனும் பேரெதிர்பார்ப்புடனும் இவ் வேண்டுகோளினை தங்களின் முன்வைக்கின்றோம். எமது கோரிக்கைகள் தொடர்பில் முனைப்புடன் செயற்பட்டு விரைவான தீர்வொன்றினை ஈட்டித் தருமாறு அருள் கூர்ந்து வேண்டுகின்றோம்.

இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தமது உறவுகளின் விடுதலை குறித்து அதிவணக்கத்திற்குரிய பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment