Friday, March 29

முஸ்லிம்களுக்கு அநியாயம் நடைபெறும்போது பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் - அமிர்தலிங்கம்





பொது பல சேனாவை அரசு தடைசெய்யாவிடின் இன்னும் பல சேனாக்கள் உருவாகும் எனவும் தெரிவிப்பு


‘முஸ்லிம்களுக்கு அநியாயம் நடைபெறும் போது நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இன்று முஸ்லிம்களின் உணவு, உடை போன்றவைகளை பிரச்சினையாக்கி உள்ள பொதுபலசேனா நாளை முஸ்லிம்களை உள ரீதியான பிரச்சினைக்கும் உட்படுத்தலாம். என கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.


கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஏ.அமிர்தலிங்கம் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பொது பல சேனாவை அரசு தடைசெய்ய வேண்டும் என இச்சபையில் இன்று கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை இலங்கை அரசாங்கத்திற்கும், பெளத்த மதத்திற்கும் எதிரானதல்ல. இனவாதப் போக்கில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படும் பொது பல சேனா என்ற அமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிரானதொரு பிரேரணையாகும்.
இந்த நாட்டில் வாழும் மக்கள் தங்களின் மதங்களைப் பின்பற்றி நடப்பதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும். ஒரு மதத்தினரின் சுதந்திரத்தில் தலையீடு செய்யும் அதிகாரம் எவருக்குமில்லை.

இது பெளத்த நாடல்ல. இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசினரும் இங்கு பெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழுகின்றார்கள். பல்லின மக்கள் வாழும் நாடாகும். இங்குள்ள எல்லா இனங்களுக்கும் உரித்தான நாடாகும்.

மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது. முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நினைத்தது கிடையாது.

முஸ்லிம்களின் உணவு, உடை போன்றவைகளில் தலையீடு செய்யும் பொது பல சேனாவினால் நாளை உள ரீதியான பிரச்சினைகளும் முஸ்லிம்களுக்கு ஏற்படலாம். ஆனால், முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சும்மா பார்வையாளராக இருக்காது. பொதுபலசேனாவை ஜனாதிபதி கட்டுப்படுத்தாது போனால் இன்னும் பல சேனாக்கள் உருவாகலாம் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment