பொதுபல சேனா அமைப்பினால் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் தமிழ் தேசியப் பேரவை முறைப்பாடு செய்துள்ளது.
அடிப்படைவாத பௌத்த மதத் தேரர்கள் சட்டத்தை
கையில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க
வேண்டியவர்கள் அதனை வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள்
தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த
முஸ்லிம்கள் அர்ப்பணிப்புடன் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மக்களுக்கு எதிரான
அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை
எடுக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை
உறுதிப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களை பின்பற்ற
வேண்டுமென்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்த வேண்டுமென முஸ்லிம்
தமிழ் தேசியப் பேரவையின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
1982ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள்
அமைப்பினால் சிறுபான்மை சமூகம் தொடர்பில் செய்யப்பட்ட பிரகடனத்தை அரசாங்கம்
மீறிச் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நாடும் சிறுபான்மை மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தக் கூடாது என இந்தப் பிரகடனத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சகல இனங்களும், சகல மதங்களும்
மதிக்கப்பட வேண்டுமென்பதனை அரசாங்கத்திற்கு வலியுறுத்துமாறு அசாத் சாலி,
ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment