Wednesday, February 20

பொதுபலசேனாவை மட்டும் கண்டிக்கும் பிரேரனைமக்களை ஏமாற்றும் மாமூலான நடவடிக்கையாகும்.;


கிழக்கு மாகாணசபையில் பொதுபலசேனாவுக்கெதிராக கண்டன பிரேரனையை கொண்டு வந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர், அந்த இயக்கத்தை பாலூட்டி வளர்க்கும் அரசாங்கத்துக்கெதிராக கண்டன பிரேரணை முன்வைக்காமை மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகும்



கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுபல சேனா முஸ்லிம்களுக்கெதிரான கருத்துக்களை முன்வைத்த போது அரசின் உயர்மட்டங்களை சேர்ந்தோர், இது சிறியதொரு குழுவின் நடவடிக்கை என்றும் முஸ்லிம்கள் இது பற்றி அச்சப்படத்தேவையில்லை என்றும் கூறி இது விடயத்தை அலட்சியப்படுத்தியதன் மூலம் அவ்வியக்கத்தை வளர விட்டார்கள். அந்த வேளையில் இவ்வாறான வார்த்தை மூலம் முஸ்லிம் சமூகம் திருப்திப்பட முடியாது மாறாக அரசாங்கம் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி இனவாத இயக்கங்களை கட்டுப்படுத்த வேண்டும் என உலமா கட்சி மட்டுமே பகிரங்கமாக அரசைக்கோரியது.


இந்த வேளைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற முஸ்லிம் ஏமாற்றுக்கட்சிகள்; பாராளுமன்றத்தில் இது பற்றிப்பேசாமல் மௌனம் காத்ததனாலும், முஸலிம்களுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை தடுக்க அரசை வலியுறுத்தினால் தமது பதவிகள் பறிபோகும் என்ற அச்சத்தினாலும் பொது பல சேனா வளர்ந்து வெளிப்படையாகவே விசத்தை கக்கி வருகிறது.

இதுவெல்லாம் நடந்து இன்று முஸ்லிம் சமூகத்துக்கெதிராக காலக்கெடு  நிர்ணயித்துள்ள நிலையில் இப்போது கிழக்கு மாகாண  சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் ஜமீல், பொது பலசேனாவை மட்டும்  கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற பிரேரணை முன்வைத்துள்ளார்.   உண்மையில் இந்த உறுப்பினர் மனச்சாட்சி உள்ளவராயின் பொதுபல சேனாவையும் அதனை  பாலூட்டி வளர்க்கும் அரசையும், முஸ்லிம்களின் பிரச்சினை என்றால் பாராளுமன்றத்தில் மௌனவிரதம் இருக்கும் அமைச்சர் ரஊப் ஹக்கீம் உட்பட அனைத்து அரச தரப்பு முஸ்லிம் உறுப்பினர்களையும் கண்டிக்கும் தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும். இதனை விடுத்து பொதுபலசேனாவை மட்டும் கண்டிக்கும் பிரேரனை முன் வைத்தமை இத்தகையோரின் மக்களை ஏமாற்றும் மாமூலான நடவடிக்கையாகும்.

No comments:

Post a Comment