அண்மைக்காலமாக நாட்டில் சிங்கள மற்றும் முஸ்லிம்
இனங்களுக்கிடையில் அதிகரித்து வரும் முரண்பாடுகள் முஸ்லிம்களுக்கெதிரான
நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றினை ஜனாதிபதியிடம்
சமர்ப்பிப்பதற்காக அரசு சகல கட்சிகளையும் உள்ளடக்கியதான பாராளுமன்ற
தெரிவுக்குழுவொன்றினை நியமிக்கவுள்ளது.
இந்தத் தெரிவுக்குழு சமய தீவிரவாதம் மற்றும் அதனுடன் தொடர்பான
நடவடிக்கைகளை ஆராய்ந்து இரு இனங்களுக்குமிடையிலான தப்பபிப்பிராயங்களை
எவ்வாறு களையலாம் எனும் தீர்வுகளைச் சமர்ப்பிக்கவுள்ளது.
முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள், அவர்களுக்கெதிரான குற்றச் சாட்டுகள்
தொடர்பில் பொதுபலசேனா இயக்கத்தின் தலைவர் கிரம விமலஜோதி தேரர், அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்
ஆகியோர் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்த கருத்துக்களை இங்கே
தருகிறோம்.
நாங்கள் சம்பிரதாய முஸ்லிம்களுக்கு எதிரானவர்களல்ல
கிரம விமலஜோதி தேரர்
பொதுபலசேனா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டமைக்கான பிரதான காரணங்கள் என்ன?
நாட்டில் பெளத்தர்களுக்கு சரியான தலைமைத்துவம் ஒன்று தேவை என்பதை உணர்ந்து
அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்காகவே பொதுபலசேனா அமைப்பு
உருவாக்கப்பட்டது. நாட்டில் பெளத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சி னைகள் பற்றி
பேசுவதற்கு எந்தவோர் அமைப்பும் இல்லை. அரசாங்கம் எமக்கு நிதி உதவி
வழங்குவதில்லை. பெளத்தர்கள் வழங்கும் நன்கொடைகளினாலேயே பொதுபலசேனா இயங்கி
வருகிறது. பெளத்த மதத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் வளர்ச்சிக்காகவும்
பொதுபலசேனா பணியாற்றி வருகிறது. பெளத்த மத பிரசுரங்களை நாம் வெளியிட்டு
வருகிறோம். இதன் மூலம் நாட்டு மக்கள் எங்களது சேவையை அறிந்து கொள்ள
முடிகிறது.
சில முஸ்லிம் அமைப்புகள் தீவிரவாத கொள்கைகளை நாட்டில் பரப்பி வருகின்றன என பொதுபலசேனா குற்றம் சுமத்துகிறதா?
எட்டு முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் முஸ்லிம் தீவிரவாத கொள்கைகளை
இந்நாட்டில் பரப்பி வருகின்றன. இதனை உறுதி செய்வதற்கான அத்தாட்சிகள்
எங்களிடமுள்ளன. இந்தக் குழுக்கள் மெதுவாக கிழக்கு மாகாணத்தை தம்
வசப்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் ஒரு
சிங்களவரேனும் அங்கு சென்று காணியொன்றினைக் கொள்வனவு செய்ய முடியாது. அங்கு
முஸ்லிம்களுக்கு மாத்திரமே காணி கொள்வனவு செய்ய முடியும். அவர்கள் பெளத்த
வரலாற்று இடங்களில் பெளத்த பாரம்பரியங்களை அழித்து வருகிறார்கள். இதற்கு
எதிராக நாம் குரல் கொடுத்து சம்பந்தப்பட்ட அதிகரிகளின் கவனத்திற்கு கொண்டு
வந்துள்ளோம். புத்தசாசன மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சினதும் புதை பொருள்
திணைக்களத்தினதும் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்துள்ளோம்.
நாங்கள் பெளத்தத்தையும் பெளத்த கலாசாரத்தையும் இந்நாட்டில் பாதுகாக்க
விரும்புகி றோம். நாங்கள் இந்நாட்டில் வாழும் சம்பிரதாய முஸ்லிம்களுக்கு
எதிராக செயற்படவில்லை. நாம் அவர்களுடன் நீண்ட காலமாக ஒற்றுமையாக
வாழ்கிறோம். சவூதி அரேபியாவில் பயிற்சி பெற்ற முஸ்லிம் ஆயுதக் குழுவொன்று
தற்போது செயலில் இறங்கியுள்ளதாக கேள்விப்படுகிறோம். கிழக்கு மாகாணத்தில்
சில பகுதிகளில் ஷரீஆ சட்டம் அமுல் நடத்தப்படுகிறது. நாம் போதிய
ஆதாரங்களுடனே இக்குற்றச்சாட்டினை முன் வைக்கிறோம்.
சமய தீவிரவாதத்துக்கு எதிராக செயற்படும் நீங்கள் எவ்வாறு பெளத்த சமூகத்துக்கு பாதுகாப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளீர்கள்?
நாங்கள் கலவரங்களின்றி அமைதியான முறையிலேயே எமது திட்டங்களை, செயற்பாடுகளை
முன்னெடுத்து வருகிறோம். கிராமிய மட்டத்தில் நாங்கள் எமது செயற்பாடுகள்
தொடர்பான விழிப்புணர்வுகளை உருவாக்கி வருகிறோம்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தகத்தினை பகிஷ்கரிக்குமாறு ஒரு குழுவினர்
செயற்பட்டு வருகிறார்களே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
பொதுபலசேனா இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. ஏனைய சமயங்களுக்கோ மக்களுக்கோ
எதிராக வன்முறைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது. இனங்களுக்கெதிரான
நடவடிக்கைகள் சமூக ஊடகங்கள் மூலமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால்
பொதுபலசேனா இதன் பின்னணியில் இல்லை. எமது அமைப்பு தனது செயற்பாடுகளை
முன்னெடுப்பதற்கு ஒருபோதும் இவ்வாறான முறைகளைக் கையாளாது.
பொதுபலசேனா உறுப்பினர் ஒருவர் சிங்களவர்களுக்கும் பலதார மணம்
அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளாரே? இதுபற்றிய உங்கள் கருத்து
என்ன?
சிங்களவர்களுக்கும் பலதார மணம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாம்
கூறவில்லை. நாம் சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும், ஒரு ஜனநாயக
நாட்டில் அனைத்து இனங்களுக்கும் சட்டம் சமமானதாக இருக்க வேண்டும் என்றே
கோருகின்றோம். ஏன் ஒரு இனத்துக்கு மாத்திரம் பலதார மணம் அனுமதிக்கப்பட
வேண்டும்?
பிரச்சினைகளை கலந்து பேசி சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கு முஸ்லிம் உலமாக்களுடன் கலந்து பேசியிருக்கிறீர்களா?
200 க்கும் மேற்பட்ட முஸ்லிம் உலமாக்கள் பெளத்த கலாசார மண்டபத்துக்கு
வருகை தந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். சமயத் தீவிரவாதத்தினைப்
பரப்பி வரும் குழுவினரால் நாட்டின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் ஆபத்து
ஏற்பட்டுள்ளது எனும் கருத்தினை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
நீங்கள் ஜனாதிபதியைச் சந்தித்திருக்கிறீர்கள். அதன் பிரதி பலன் என்ன?
ஜனாதிபதி எமது கேள்விகளுக்கு சாதகமான பதில்களைத் தந்திருக்கிறார். பெளத்த
மதம் தொடர்பில் ஜனாதிபதி கொண்டுள்ள ஆர்வம் எமக்கு நம்பிக்கையூட்டுகிறது.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவர் பணித்திருக்கிறார். பொதுபலசேனா ஒரு அரசியல்
இயக்கம் அல்ல. அரசாங்கத்தை கவிழ்ப்பது எமது திட்டமல்ல என்று ஜனாதிபதியிடம்
தெளிவாக விளக்கியிருக்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் ஷரீஆ சட்டம் தேவையென்று நாம் கோரவில்லை
அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்
அண்மைக் காலமாக இரு இனங்களுக்கிடையில் ஒரு பதற்ற நிலை உருவாகியுள்ளமை தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
இவை புதிதாக தோன்றியுள்ள பதற்ற நிலையாகும். கடந்த காலங்களைப் போலன்றி
தற்போது இனங்களுக்கிடையில் பல முரண்பாடுகள் தோன்றியுள்ளன. மொழியும்
இனங்களுக்கிடையில் ஒரு தடையாக இருக்கிறது. சிலர் பொய் வதந்திகளையும்
உண்மைக்குப் புறம்பானவற்றையும் பரப்பி வருகிறார்கள். இதனால் தேவையற்ற
பிரச்சினைகள் எழுகின்றன.
அவ்வாறானவர்கள் யார் என்று கூற முடியுமா?
எனக்குத் தெரியாது. அவ்வாறானவர்கள் யார் என்பதை அதிகாரிகள் கண்டு பிடிக்க
வேண்டும். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேறுபட்ட மதங்களுக்கும்
இனங்களுக்குமிடையில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு தனது பங்களிப்பினைச் செய்து
வருகிறது. நாங்கள் ஜாதிக ஹெல உறுமயவுடன் மாதாந்த கூட்டங்களை நடத்தி
வருகிறோம். நாட்டில் பிரபல பெளத்த குருமாருடன் கலந்துரையாடல்களை
நடத்தியுள்ளோம். பொதுபலசேனாவுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.
குறிப்பாக ஹலால் சான்றிதழ் தொடர்பில் பொதுபலசேனா கொண்டுள்ள
தப்பபிப்பிராயங்களுக்கும் பதில் அளித்திருக்கிறோம், விளக்கமளித்துள்ளோம்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் சந்தித்துள்ளோம்.
பெளத்த குருமாருடன் இணைந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி ஏற்பாடு செய்யும்படி
அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஹலால் சான்றிதழை நாங்கள் நிறுத்தி
விடுவதாக அமைச்சரிடம் தெரிவித்தோம். ஆனால் அவர் ஹலால் சான்றிதழ்
நிறுத்தப்படக்கூடாது என எம்மிடம் தெரிவித்தார்.
அதிகமாக நிதி திரட்டுவதற்காகவே ஹலால் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா?
ஹலால் சான்றிதழ் 2000- 2001 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே
ஆரம்பிக்கப்பட்டது. ஒரு தனியார் நிறுவனம் தனது உற்பத்திப் பொருட்களை
ஏற்றுமதி செய்வதற்கென ஹலால் சான்றிதழ் கோரியதையடுத்தே இத்திட்டம்
ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் எதுவித கட்டணமுமின்றியே இச்சான்றிதழ்
வழங்கப்பட்டது என்றாலும் ஹலால் சான்றிதழ் வழங்கும் திட்டத்தினை
செயற்படுத்துவதற்கு உத்தியோகத்தர்கள் தேவைப்பட்டனர். மருத்துவ அதிகாரிகள்
குறிப்பிட்ட இடத்தினை பரிசோதனை செய்ய வேண்டியேற்பட்டது. இதனையடுத்து
வருடாந்த கட்டணமாக 6000 ரூபாயிலிருந்து 3 இலட்சம் ரூபா வரை கட்டணமாக அறவிட
வேண்டிய நிலை உருவாகியது. ஹலால் சான்றிதழ் திட்டத்தில் வேலை
செய்பவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டி ஏற்பட்டது.
நாங்கள் ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டுமென எந்தவோர் நிறுவனத்தையும்
வற்புறுத்தவில்லை. நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களைப் பல
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஹலால் சான்றிதழ் அத்தியாவசியமாக இருந்தது.
எனவே நாம் ஹலால் சான்றிதழ் வழங்கி ஏற்றுமதிக்கு உதவி புரிகிறோம்.
ரிஸானா நபீக்குக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட
சம்பவத்தில் முஸ்லிம் சமூகம் மெளனமாக இருந்தது என குற்றஞ்சாட்டப்படுகிறதே?
இது தவறு.... முஸ்லிம் சமூகம் இது விடயத்தில் மெளனம் காக்கவில்லை. ரிஸானா
சிறையில் வைக்கப்பட்டபோது அவளது விடுதலைக்காக ஜம்இய்யத்துல் உலமா சபையே
முதன் முதல் சவூதி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியது. எமது உலமா சபை
பிரதிநிதிகளும் சவூதிக்கு சென்று விடுதலைக்கான முயற்சியில் ஈடுபட்டார்கள்.
ஆனால் பலனளிக்கவில்லை.
பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பினைப் பெற்றுச் செல்கிறார்கள், இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
எம்மைப் பொறுத்தவரையில் பெண்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுச் செல்லக்கூடாது.
ஆனால் ஒருவரேனும் இதனைக் கருத்தில் கொள்வதில்லை. பெண்கள் வெளிநாட்டு வேலை
வாய்ப்பு பெற்றுச் செல்வதனாலேயே பல சமூக குடும்ப பிரச்சினைகள் உருவாகின்றன.
அதிகமாக விவாகரத்துகள் நிகழ்கின்றன. அதிகமான குடும்பங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் முஸ்லிம்கள் ஷரீஆ சட்டத்தை அமுல்நடத்தப் போகிறார்கள் என்று ஓர் பீதி ஏற்பட்டுள்ளது . இது உண்மையா?
எங்களுக்கு இலங்கையில் ஷரீஆ சட்டம் தேவையில்லை. இலங்கையில்
நடைமுறையிலிருக்கும் சட்டத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் ஒற்றுமையாக
சமாதானத்துடன் ஏனைய இனங்களுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறோம்.
முஸ்லிம்கள் தற்போது தனித்துவ, தீவிர போக்குடையவர்களாக மாறி வருகிறார்கள்
என்றவோர் மனப்பான்மை முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
உதாரணமாக முஸ்லிம் பெண்களது ஆடைக் கலாசாரத்தில் இதனை அவதானிக்க முடிகிறது.
முஸ்லிம் பெண்கள் தமது விருப்பத்துக்கு ஏற்பவே தமது உடையை தெரிவு செய்து
கொள்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வரும் பெண்கள்
அந்நாட்டு பெண்கள் அணியும் ஆடையை அணிகின்றனர். அவர்கள் அவர்களது
விருப்பத்தின் படியே ஆடை அணிகிறார்கள். இந்த உடைதான் அணிய வேண்டும் என்ற
விதிகள் எம்மால் ஏற்படுத்தப்படவில்லை.
பள்ளிவாசலுக்கு செல்பவர்களின் வீதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் தொழுவதற்காகவே பள்ளிவாசல்களுக்குச் செல்கிறார்கள். ஜிஹாத்
பயிற்சியினைப் பெறுவதற்காக அங்கு செல்லவில்லை. ஆனால் சிலர் பள்ளிவாசலில்
ஜிஹாதுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது என்கிறார்கள். இதில் உண்மையில்லை.
முல்லைத்தீவில் ஒரு புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு வருவதாக
விமர்சிக்கப்படுகிறது. அது உண்மையில் புதிய பள்ளிவாசல் அல்ல. அந்தப்
பள்ளிவாசல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. யுத்தக் காலத்தில் அது
சிதைவுக்குள்ளாக்கப்பட்டது. தற்போது அப்பள்ளிவாசல் புதிதாக புனர்
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment