இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிக்கை ஒன்றின் மூலம் நேற்று
நள்ளிரவுடன் அமுலாகும் வகையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,ஒக்டெய்ன் 90 மற்றும் ஒக்டெய்ன் 95 ஆகிய பெற்றோல் லீற்றர்
ஒன்றின் விலை, 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டீசல் ஒரு
லீற்றரின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசல் ஒரு
லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மண்ணெண்ணெயின் விலையும் 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை சீர்த்திருத்ததன் படி, 159 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேய்ன் 90
வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 162 ரூபாவாகவும், ஒக்டேய்ன் 95 பெற்றோல்
விலை 170 ரூபாவாகவும் அதிரிக்கப்படுகிறது.
டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 121 ரூபாவாகும். அத்துடன் சுப்பர் டீசலின் புதிய விலை 145 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெயின் விலை ரூபா 111ல் இருந்து 115 ரூபாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை அதிகரிப்பை
தொடர்ந்து பஸ் மற்றும் முச்சக்கர வண்டி கட்டணங்களிலும் மாற்றம்
ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிகிறது.
அதன் பிரகாரம் தனியார் பஸ்கட்டணங்களை அதிகரிக்கப்போவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில்
கலந்துரையாடப்படுவதாகவும் இது தொடர்பில் கூட்டறிக்கையொன்று வெளியிடப்படும்
என்றும் அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களையும் அதிகரிக்க முச்சக்கரவண்டி
உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை நாளை மறுதினம்
திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வருவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க
தீர்மானிக்கப்பட்டுள்ள அதேவேளை, 50 ரூபா கட்டணத்தை அறவிடும் பிரிவினர் அதனை
60 ரூபாவாக அதிகரிக்கவும் அச்சங்கம் தீர்மானித்துள்ளது.
முதுச்சக்கரவண்டியில் பயணிப்பதற்கு முதல் கிலோமீற்றருக்கு தற்போது 35 ரூபா
முதல் 38 ரூபா வரை அறவிடப்படுவதாகவும் அந்த தொகை திங்களன்று முதல் 40
ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இலங்கை
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக்
தெரிவித்துள்ளார்.
இதனிடையே லங்கா ஐ. ஓ. சி. நிறுவனமும் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 3 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால், டீசலின் விலையை தாம் அதிகரிக்கவில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 90, 95 ஒக்டைன் பெற்றோல்களின் விலை 3
ரூபாவினாலும் சாதாரண டீசலின் விலை 6 ரூபாவினாலும் சுப்பர் டீசலின் விலை 3
ரூபாவினாலும், மண்ணெண்ணெய்யின் விலை 4 ரூபாவினாலும் இன்று முதல்
அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதிகரிக்கப்பட்டுள்ள விலையின் பிரகாரம் - 90 ஒக்டைன் பெற்றோலின் புதிய
விலை ரூபா 162, 95 ஒக்டைன் பெற்றோலின் புதிய விலை ரூபா 170, டீசலின் புதிய
விலை ரூபா 121, சுப்பர் டீசலின் புதிய விலை ரூபா 145 ஆகும். |
No comments:
Post a Comment