Thursday, February 21

நேற்று இடம்பெற்ற நேத் எப்.எம். நிகழ்ச்சி - சாராம்சம்



முதலில் அகில இலங்கை ஜம் இயத்துல் உலமாவிற்கு ஒரு சபாஷ்! ஊடக அழைப்பொன்றை முறைப்படி ஏற்று அங்கு சென்று கேள்விகளுக்குத் தகுந்த பதிலளிக்க அவர்களும் தயார் என “ரொம்ப லேட்டாக” என்றாலும் நேற்றிரவு முன் வந்ததை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும், அதிலும் இப்போது புதிதாக முஸ்லிம் விரோத நிலையை எடுக்க முனையும் நெத் எப்.எம். எனும் வானொலிக்கு சென்றமை பாராட்டப்பட வேண்டிய விடயம்.
இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் முஸ்லிம்கள் என்பதை ஓரிரு தடவையாவது அறிவிப்பாளர் சம்ளி “புதா”  (“மகன்” அன்போடு மன்சூர் தஹ்லான் மெளலவி அவரை அப்படித்தான் அழைக்கிறார்) வுக்கு எடுத்துரைத்தார்கள். வழக்கம் போல ஆப்கானிஸ்தானில் நடப்பவை, சவுதி அரேபியாவில் நடப்பவற்றுக்கெல்லாம் இலங்கை முஸ்லிம்களும் பொறுப்பு எனும் “குருட்டு” வாதத்தினை முன் வைத்த சிறு பிள்ளைத்தனமான கேள்விகளுக்குக் அது வேறு நாடு இது வேறு நாடு நாம் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதைப் புரிய வைப்பதற்குப் படாத பாடு பட்டார்கள். ஆனாலும் சம்ளி புதாவுக்குப் பொறுக்கவில்லை.

சவுதிக்குப் போனால் எங்கள் பெண்களால் இங்கு அணிவது போல் ஆடை அணிய ஏன் உரிமையில்லை என்று அவர் திரும்பத் திரும்ப கேட்கிறார், ஆனாலும் மெளலவி தஹ்லான் கஸ்டப்பட்டு, வேலை வாய்ப்புக்காக அந்நாட்டுக்குச் செல்லும் போது இதற்கெல்லாம் இணங்கித்தான் எங்கள் நாட்டுப் பெண்கள் செல்கிறார்கள் என்றும் எடுத்துச் சொல்லிப் பார்க்கிறார்கள்.
கடாபியைக் கொன்றதை நியாயப்படுத்த முடியுமா? முதல் பிரான்சில் ஹிஜாப் தடை என்று சர்வதேச விவகாரங்களை வைத்து இலங்கை முஸ்லிம்களின் இருப்பையே கேள்விக்குறிக்குள்ளாக்க முனைந்த அறிவிப்பாளர்களோடு அன்போடு உரையாடி “வித்தியாசத்தை” எடுத்துரைக்க முனைந்த முஸ்லிம் பிரதிநிதிகளைப் பாராட்டியே ஆக வேண்டும்.
மூக்குடைபடவில்லையென்றாலும் முகங் கோணிப் போகும் அளவுக்கு இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்திற்கோ, அடிப்படைகளுக்கோ புறம்பானவர்கள் என்ற விசித்திர போர்வையைப் போர்த்த முனைந்து தோற்றுப்போன நெத் எப்.எம். வானொலி அறிவிப்பாளர்கள் பேச ஆரம்பித்த ஹலால் விடயத்தை இறுதி வரை பேசாதது மட்டுமல்ல, அதைப் பேசினால் நாம் பேசத்தான் வந்திருக்கிறோம் என்று பதிலளிக்க தயாராகவே இருந்தார்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முர்ஷித் மெளலவியும் தஹ்லான் மெளலவியும்.
எனினும், இன்னொரு தடவையும் இவர்கள் அழைக்கப்படலாம், அடுத்த தடவை அவர்கள் இன்னும் தயாராகிக் கொண்டு வரலாம், மீண்டும் இதைப் பேசலாம், ஜம் இயத்துல் உலமா இப்போது ஊடகங்களை மதிக்கக் கற்றுக்கொண்டுவிட்டதால் இனி வரும் காலங்களில் அவர்களிடமிருந்தும் சாதகமான அணுகு முறைகளை எதிர்பார்க்கலாம்.
ஆனாலும், இலங்கை முஸ்லிம்கள் வியாபாரிகள் என்ற போர்வை அதிலும் ஏதோ இன்று நேற்றுத்தான் வந்து குடியேறிய வியாபாரிகள் எனும் போர்வையைப் போர்த்திக்கொள்ள இவர்களும் தயங்காததும், சிங்கள மக்கள் பெண் கொடுத்து எங்களை அரவணைத்து சுதந்திரமாக வாழ விட்டார்கள் என்றாவது கூறி அதையும் ஏற்றுக்கொண்டதும் வாதத்திற்கு அவர்களுக்குச் சரியாக இருந்தாலும் நகைப்புக்குரிய விடயமாகும்.
இலங்கை முஸ்லிம்களின் ஆதி வரலாற்றைத் தான் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளாவது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களாக இந்நாட்டில் நாங்கள் வாழ்கிறோம். நாங்கள் ஏன் இரண்டாம் நிலை பிரஜைகளாக வழங்கப்படும் சலுகைகளில் வாழப் பழக வேண்டும்? சமவுரிமையுடனும் சுய மரியாதையுடனும் வாழும் உரிமை எப்படி எங்களுக்கு இல்லாமல் போகும் என்பதையும் இலங்கை பெளத்த நாடு ஆனால் பெளத்தம் மட்டுமே உள்ள நாடாக எப்போதும் இருந்ததில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டிய இடத்தில் தவறத்தான் விட்டு விட்டார்கள்.
முஸ்லிம்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் தாம் தான் எனக் கூறும் ஜம் இயத்துல் உலமா இது போன்ற விடயத்திலும் கவனமெடுக்க வேண்டாமா?

No comments:

Post a Comment