Friday, February 1

ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை அரசிடம் ஒப்படைக்குக: ரணில்



 
ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கான அதிகாரத்தையும் பொறுப்பையும் அரசாங்க நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பதன் மூலம் இது தொடர்பான தேவையற்ற விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளிவைக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக பௌத்த கடும்போக்கு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் தீவிர பிரசாரங்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
 
ஹலால் சான்றிதழை முஸ்லிம் நிறுவனங்களோ அல்லது வேறு எந்த தனியார் நிறுவனங்களோ வழங்குவதைவிடவும் அரசாங்க நிறுவனம் ஒன்று வழங்குவதே பொருத்தமானது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலமே ஹலால் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளுக்கும் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
 
சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்த முடியும்.
 
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். இப் பிரச்சினைக்குத் தீர்வு காண எங்களால் இயன்ற முயற்சிகள் அனைத்தையும் நாம் மேற்கொள்வோம். சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குகளையும் சந்தித்து பேசவுள்ளோம்.
 
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இது தொடர்பில் பாராளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை எமது கட்சி விடுக்கவுள்ளது. இது தொடர்பில் எமது கட்சியின் எம்.பி.க்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.
 
இச் சந்திப்பில் ஐ.தே.கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், ஹலீம் ஆகியோரும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
முஸ்லிம் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன், அஸ்கர் கான், அஷ்ஷெய்க் இனாமுல்லாஹ், சிராஜ் மஷ்ஹ{ர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment