Thursday, January 31

சிறுவர் துஷ்பிரயோகம்: மரண தண்டனை விதிக்க வேண்டும் :அமைச்சர் கரலியத்த







சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவு சம்பவங்களை இல்லாதொழிப்பதற்காக இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு பொது மன்னிப்பு வழங்காது மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை போன்ற கொடிய தண்டனைகளை விதிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரளியத்த தெரிவித்துள்ளார்.


கடந்த வருடத்தில் இலங்கையில் இடம்பெற்றுள்ள 1600 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் 1119 சம்பவங்கள் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளேயாகும். தற்பொழுது நம் நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்கள் கொலை, காயப்படுத்தல் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன.
அண்மையில் குறைந்த வயதையுடைய தாயொருவர் தனது குழந்தையை வீட்டுக்குப் பின்னால் கொண்டு கொலை செய்தமை, தந்தையொருவர் தனது ஒன்றரை வயது குழந்தையை கால் மற்றும் கையால் தாக்கி கொலை செய்தமை ஆகிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த காலங்களில் தூக்கிலிடப்பட்டமையால் நாட்டில் பாரிய குற்றச் செயல்கள் குறைந்தே காணப்பட்டன.
கடந்த வருடம் பாலியல் என்ற சொல்லை இணையத்தளத்தில் தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளது. நம் நாட்டிலுள்ள அதிகளவிலான பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசியூடாக பாலியலுடன் தொடர்புடைய காட்சிகளைத் தேடுவது அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வருடத்தில் இவ்வாறான தீய செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்காக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment