Monday, January 28

மஹிந்த அரசின் ஆட்சியில் மட்டும் ஏன் புத்த சாசன அமைச்சரின் கீழ் சிறுபான்மை மதங்கள் ?


மஹிந்த அரசின் ஆட்சியில் மட்டும் ஏன் புத்த சாசன அமைச்சரின் கீழ் சிறுபான்மை மதங்கள் ? இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் புத்த சாசனத்துக்குப் பொறுப்பான அமைச்சரே பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் பௌத்த மத விவகாரங்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமூகங்களின் மதங்களான இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய சமயங்களின் விவகாரங்களுக்கும் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார்.

தற்போது நாட்டின் பிரதமரான டி.எம். ஜயரத்னவே புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சராக பதவி வகிக்கின்றார்.

இந்த நிலைமையில், பல்லின சமூகங்களும் வாழ்கின்ற நாட்டில் எல்லா மதங்களையும் உள்ளடக்கும் விதத்திலேயே நாட்டின் மத விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு அமைய வேண்டும் என்று அரசாங்கத்தில் பங்காளிக் கட்சியாக உள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரலாற்றில் 1979ம் ஆண்டிலிருந்து தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரான காலப் பகுதி வரை, சிறுபான்மை சமூகங்களின் மதங்களுக்கு என்று தனியான அமைச்சரோ அல்லது துணை அமைச்சரோ இருந்துள்ளாகவும் ராஜதுரை சுட்டிக்காட்டினார்.

புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் கீழ் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் விவகாரங்களுக்கான தனித்தனியான திணைக்களங்கள் இயங்குகின்ற போதிலும், குறிப்பிட்ட நிறுவனங்களின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுரை கூறினார்.

அதேவேளை, எதிர்காலத்தில் புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் துறைக்கு, கடும்போக்கு நிலைப்பாடு எடுக்கக் கூடிய அமைச்சர் ஒருவர் பொறுப்பாக வந்தால் அதன்மூலம் சிறுபான்மை சமூகங்களின் மதங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்துக்குப் பின்னரான சூழலில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பெருமளவிலான சமய வழிபாட்டுத் தலங்களை புனரமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment