
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று இதுபற்றி தெரிவித்த அமைச்சர்; பாலியல் துஷ்பிரயோகம், போதை வஸ்து விவகாரங்கள் தொடர்பில் கடுமையான தண்டனைகளை வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மரண தண்டனையை மீள அமுல் படுத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், இது ஜனாதிபதியால் தனித்து எடுக்கக் கூடிய தீர்மானமல்ல.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் 27 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அக்கட்சிகளின் இணக்கப்பாட்டைப் பெற்றுக் கொண்டே இது விடயத்தில் தீர்மானமொன்று எடுக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல், ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. குற்றச் செயல்கள் தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்; போதை வஸ்து பாவிப்பவர்களன்றி பாரிய அளவில் வைத்திருப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் போக்குவரத்துகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மரண தண்டனையை அமுல்படுத் துவது தொடர்பில் ஜனாதிபதிக்குத் தனித் தீர்மானம் எதனையும் மேற்கொள்ள முடியாது. தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மரண தண்டனைச் சட்டம் தற்போது நீக்கப்பட்டதொன்றல்ல என்ற நிலையில் ஜனாதிபதி அதற்குக் கையொப்பமொன்றை இடுவது மாத்திரமே உள்ளது. அவர் கையொப்பமிடாததற்குக் காரணமென்ன என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர்; ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட முடியாது. அரசாங்கத்தில் 27 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அக்கட்சிகளின் இணக்கப்பாடு பெற வேண்டியுள்ளது. அனைத்துக் கட்சிகளிடம் பெறாவிட்டாலும் பெரும் பாலான கட்சிகளின் இணக்கப்பாடு பெற வேண்டியுள்ளது.
இது தொடர்பில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் உள்ளன. ஜே.ஆர். ஜெயவர்தனவிலிருந்து இதுவரை இந்த நாட்டை ஆட்சி செய்த எந்தத் தலைவரும் இதில் கையொ ப்பமிடவில்லை.
முக்கிய விடயம் என்னவென்றால்;
கட்சி அரசியல் மற்றும் எத்தகைய தராதரம் பார்க்காமல் தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக விரைவாக அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பொதுவாக அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மந்தமாகவே இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதற்கு மாறாக தற்போது 24 மணித்தியாலத்திற்குள் கட்சி, வர்ணம், வேறு எவ்வித தராதரமும் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.
நாம் ஊடகங்களில் பார்க்கும் போது இத்தகைய பல விவகாரங்களில் பொலிஸார் உடனடி நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.
சில சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடக்கின்றன. குற்றவாளிகள் தேடப்படுகின்றனர் என காலம் இழுத்தடிக்கப்படுவதையே நாம் பார்த்துள்ளோம். ஆனால் இப்போது அந்த நிலை மாறி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது மக்களும் சந்தோஷப்படக் கூடிய விடயம்.
எத்தகைய காரணங்கள் இருந்த போதும் வர்ணக் கண்ணாடிகளில் பார்க்காது. எவ்வித பாரபட்சமுமின்றி சமூகத்திற்கு தெளிவான வழிமுறை இதன் மூலம் காட்டப்படுவது முக்கியமானது.
ஊடகங்கள் அதன் பொறுப்பை செயற்படுத்துகிறது. அரசாங்கம் அதன் பொறுப்பை செயற்படுத்துகிறது அதேபோன்று பொலிஸ் துறையும் தமது பகுதியை செவ்வனே நிறை வேற்றுகிறது.
இதன் மூலம் சமூகத்திற்கு சிறந்த செய்தி சொல்லப்படுகிறது என்பது இதில் முக்கியமாகும்.
No comments:
Post a Comment