Thursday, June 21

ஷரீஆ சட்டத்தின் கீழ் பணம் வழங்குவதாக கூறி மோசடி செய்த குற்றச்சாட்டுக்குள்ளான நபருக்கு விளக்கமறியல்


இஸ்லாமிய ஷரீ ஆ சட்டத்தின்படி கடன்வழங்குவதாக கூறி முஸ்லிம் மக்களிடமிருந்து பல மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை ஜூலை 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி நேற்று உத்தரவிட்டார்.

தெமட்டகொடையில் வசித்த இந்நபர், வட்டிக்கு பணம் வாங்குவது பெரும் பாவம் எனவும் அதிலிருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகளை அடகுவைத்து வட்டிக்குப் பணம் பெறுவதற்குப் பதிலாக, சிறிய தொகை கமிஷனாக பெற்றுக்கொண்டு நகைகளுக்கு நிதி பெற்றுக்கொடுப்பதற்கு தான் ஏற்பாடு செய்வதாக அவர் மக்களிடம் கூறியுள்ளார்.

இது நகையை அடகுபிடிக்கும் நடவடிக்கை அல்ல எனவும் நகைகளை மீட்பதற்கு கால வரம்பு எதுவும் இல்லை, எப்போது வேண்டுமானாலும் நகைகளை மீள பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, சுமார் 25 பேர் அவரிடம் நகைகளை கொடுத்து பணம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு சொற்ப பணத்தை கொடுத்த சந்தேக நபர், மேற்படி நகைகளை, அதிக பணம் வழங்கும் அடகுபிடிப்பாளர்களிடம் அந்நகைகளை அடகு வைத்துள்ளாதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இவ்விடயம் அம்பலமானபின் அவர் நீர்கொழும்புக்கு சென்றுவிட்டார். இது தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த சந்தேக நபருக்கு உதவிய இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்காக தாம் தேடி வருவதகாவும் மோசடி தடுப்பு பணியக பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மோசடியில் சம்பந்தப்பட்ட உண்மையான தொகை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment