விரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்தை
தோற்கடிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என சிறு கைத்தொழில் ஏற்றுமதி
ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.’இதன் ஒரு அங்கமாகவே
முஸ்லிம்கள் மத்தியில் அரசாங்கத்தைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களைத் தோற்றுவிக்கின்றனர். இதன் மூலம் அரசாங்கத்துக்குக்கு எதிராக முஸ்லிம்களை திசை திருப்பி முயற்சிக்கின்றனர்.
இதன் மூலம் அடுத்த மாகாண சபை தேர்தலில்
அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு சில தீய சக்திகள் மேற்கொண்டு வருகின்றனர்’
எனவும் அவர் குறிப்பிட்டார்.திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தை
மேற்கொண்டிருந்த அமைச்சர் ரெஜினோல்ட் குரே கிண்ணியா பிரதேச சபையில்
இடம்பெற்ற ஊடகவியவியலாளர் மாநாட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
மேற்கண்வாறு கூறினார்.
அத்துடன், ‘மூதூர் – 64ஆம் கட்டை பிரதேசம்
தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு உரிய பகுதியாகும். குறித்த
பகுதியில் எந்தவொரு மதத்தினரும் வழிபாட்டுத் தளங்களை அமைப்பதற்கு அரசாங்கம்
அனுமதியளிக்காது’ என அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது, திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள்
தற்போது எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரிடம்
கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர் வழங்கிய பதில்கள்,கேள்வி:
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தம்புள்ள, மாத்தறை, காலி, களுத்துறை என்று
தொடர்கதையாகவே செல்கின்றன. இதற்கு அரசாங்கத்தால் உரிய தீர்வினைக் காண
முடியாதா?
பதில்: இஸ்லாமியர்களுக்குள்ளும் சாதுலியா
என்றும் தரிக்கா என்றும் தவ்ஹீத் என்றும் பல்வேறு பிரிவினர் உண்டு தானே.
இதனை உங்களினால் தடுக்க முடியவில்லையே.
கேள்வி : இலங்கை பலஸ்தீன நட்புறவு
சங்கத்தின் தலைவராக இருந்தவர் ஜனாதிபதியாகவுள்ளார். இஸ்ரேலுடனான உறவை
அரசாங்கம் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த
சந்தர்ப்பத்தில் இங்கு முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கி வருகின்ற
பிரச்சினைகளுக்கு இஸ்ரேலின் சூழ்ச்சியே காரணமா?
பதில்: அரபுலகின் உயர்ந்த தலைவராகக்
கொள்ளப்பட்ட சதாம் ஹுசைன் கொல்லப்பட்டார். கேணல் கடாபி கொல்லப்பட்டார்.
அமெரிக்கா இந்த அநியாயத்தை செய்த போது முஸ்லிம் உலகம் கைகட்டி பார்த்து
கொண்டிருக்கவில்லையா? ஏன் அப்போது அவர்கள் உணர்ச்சிவசப்படவில்லை?
கேள்வி: இந்த நாட்டில் தற்போது பௌத்த மத
தீவிரவாதபோக்கு மேலோங்குவதற்கு ஹெல உறுமயவே காரணமாக இருப்பதாக
தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் அரசாங்கத்தால் அவர்களைக் கட்டுப்படுத்த
முடியாதா?
பதில்: இஸ்லாமியர்களுக்குள்ளும் தீவிரவாத போக்குடைய ஜிஹாத் அமைப்பு இருக்கிறதே. அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லையே.
கேள்வி: இரண்டு முஸ்லிம் கிராமங்களுக்கும்
இரண்டு தமிழ் கிராமங்களுக்கு மத்தியில் மூதூர் 64ஆம் கட்டை பிரதேசத்தில்
பௌத்த சிலை வைக்கப்பட்டு பௌத்த மத குரு ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்
என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இது உண்மையா?
இதற்கு பதிலளித்த ஜனாதிபதியின்
இணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான நஜீப் அப்துல் மஜீத், ‘பௌத்த மத குரு
நியமிக்கப்படவில்லை. அவருக்கு அங்கு எந்த வேலையுமில்லை. குறித்த இடத்தில்
எந்த சந்தர்ப்பத்திலும் புத்தர் சிலை வைப்பதை அனுமதிக்கமாட்டேன்’
என்றார்.-தமிழ் மிரர்