Monday, June 18

ஜபல் நகர் மலையில் பௌத்த விஹாரைக்கோ, புத்தர் சிலைக்கோ அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை


ஜபல் நகர் மலையில் பௌத்த விஹாரை அமைப்பதற்கோ அல்லது புத்தர் சிலை வைப்பதற்கோ அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையென சிறுகைத்தொழில் ஏற்றுமதி ஊக்கவிப்பு  அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான நஜீப் ஏ.மஜீத்தின் அழைப்பின் பேரில்  மூதூருக்கு இன்று  வருகை தந்த அமைச்சர் நத்துவதுல் உலமா அரபுக் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலில்  பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும்  அங்கு கூறியதாவது :  குறித்த மலைப்பகுதியில் தொல்பொருள் தடயங்கள் இருக்குமெனில் அதனை பாதுகாப்பதற்கு மாத்திரமே இலங்கை தொல்பொருள்  திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாறாக அம்மலைப்பகுதியில் புதிதாக பௌத்த விஹாரை அமைப்பதற்கோ அல்லது , புத்தர் சிலை வைப்பதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை.   அப்பகுதி புனித பிரதேசமாகவும்  பிரகடனப்படுத்தப்படமாட்டாது.

எனவே, இப்பிதேச வாழ் மக்கள் தமது நிலபுலன்கள் பாதிக்கப்படுமென்றோ, கல் உடைக்கும் தொழில் நிறுத்தப்படுமென்றோ அச்சங்கொள்ளத் தேவையில்லையெனவும்  அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மூதூர் மஜ்லிஸ் அஸ்ஸுறா தலைவர் மௌலவி எம்..எம். கரீம் ,உலமா சபையின் தலைவர்  மௌலவி கே.எம். ஹாரிஸ், மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் கே.எம். காலிதீன், பிரதேச சபை உறுப்பினர் எம். நஸீர், அதிபர் எஸ்.உவைஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment