Tuesday, January 31

பூமிக்கடியில் ஈரான் வைத்துள்ள அணுசக்திகளை தாக்க பங்கர் பஸ்டர் வெடிகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா !

 

பூமிக்கடியில் மிக பாதுகாப்பாக ஈரான் துவக்கியுள்ள அணுசக்தி திட்டங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அது குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதுடன் உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தவும்
பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது.



தலைநகர் டெஹ்ரான் அருகில் உள்ள போர்டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில், அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியச் செறிவூட்டலில் ஈடுபட்டிருப்பதாகவும், அதை யாராலும் தாக்க முடியாது எனவும் ஈரான் சமீபத்தில் அறிவித்தது.இதையடுத்துத் தான், ஈரானின் மிக பாதுகாப்பான அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் வகையிலான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம் கொண்டிருப்பதாக, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
மொத்தம் 20 அடி நீளம் கொண்ட இந்த "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டு, 5,300 பவுண்டு வெடிப்பொருட்களை தாங்கி செல்லும் சக்தியும், பூமியில் 200 அடி ஆழத்திற்கு ஊடுருவும் திறனும் கொண்டது.போர்டோவில், ஈரான் நிறுவியுள்ள அணுசக்தி நிலையம், பூமிக்கடியில் 212 அடி ஆழத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.



இதுகுறித்து அப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது:மொத்தம் 20 குண்டுகளைத் தயாரிக்க அமெரிக்கா, 330 மில்லியன் டாலர் செலவழித்துள்ளது. இந்த வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது, ஈரானின் தற்போதைய பாதுகாப்பான அணுசக்தி நிலையங் களை தாக்கும் அளவிற்கு அவற்றின் திறன் இல்லை எனக் கண்டறியப் பட்டது.அதனால் அவற்றின் சக்தியை அதிகரித்து தயாரிப்பதற்காக, கூடுதலாக 82 மில்லியன் டாலர் நிதியை அரசிடம் கோரியுள்ளது பென்டகன். 2009ல், அமெரிக்க விமானப் படையின், பி -2 உளவு விமானத்தில் இந்த ரக குண்டுகளைப் பொருத்தும் ஒப்பந்தத்தை, போயிங் விமான நிறுவனம் வாங்கியிருந்தது.இவ்வாறு அந்த பத்திரிகை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment