கிழக்கு மாகாணத்தில் வகாபிச இயக்கம் உள்ளதாகவும் அவ்வியக்கத்திற்கு அரபு நாடுகள் உதவி வழங்குவதாகவும் ஆயுதப்பயிற்சி வழங்குவதாகவும் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்தமைக்கு காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ. சுபையிர், செயலாளர் அஸ்ஷேய்க் ஏ.எம். அன்சார் நவமி ஆகியோர் கையெழுத்திட்டு இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
'ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்நாட்டில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் சம்பந்தமாக அவர்களுடைய இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் பல்வேறு சிங்கள மற்றும் தமிழ் கடும்போக்காளர்கள் அவ்வப்போது முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பல்வேறு அறிக்கைகளை விடுவதை நாம் அண்மைக்காலமாக அவதானித்து வருகின்றோம். குறிப்பாக கிழக்கு வாழ் முஸ்லிம்களை மையப்படுத்தியதாக பல்வேறு பொய்யான, அபாண்டமான, ஆதாரமற்ற கருத்துக்களைத் வெளியிட்டு முஸ்லிம்களின் இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் விடுப்பதை நாம் அவதானிக்கின்றோம்.
அரசியலை வயிற்றுப்பிழைப்புக்காக பயன்படுத்தும் சில அரசியல்வாதிகள் தங்களது எஜமானார்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதால் பாரிய சிக்கல்களை இந்த முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்றது. அரபு நாடுகளில் இருக்கின்ற போராட்டக்குழுக்களோடு கிழக்கு வாழ் முஸ்லிம்களைத் தொடர்புபடுத்தி அவர்கள் அடிப்படைவாதிகள் என்றும் வஹாபிகள் என்றும் கூறி அவர்களது தூய இஸ்லாமிய வாழ்வை கொச்சைப்படுத்துகின்ற நடவடிக்கைகளை எமது சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
எமது நாட்டின் கிழக்கு மாகாணத்தில் வகாபிச இயக்கம் உள்ளதாகவும் அவ்வியக்கத்திற்கு அரபு நாடுகள் உதவி வழங்குவதாகவும் ஆயுதப்பயிற்சி வழங்குவதாகவும் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா அறிக்கை விட்டுள்ளார்.
வகாபிச இயக்கம் என்ற ஓர் இயக்கம் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல உலகில் எங்குமே இல்லை. அரபு நாடுகளோடு எமது நாடு சிநேகபூர்வமான உறவினைப் பேணிவரும் இக்கால கட்டத்தில் அலவி மௌலானா இவ்வறிக்கையை விட்டிருப்பதானது இலங்கையின் அரபு நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
1991 - 10 - 27ஆம் திகதி கொழும்பு கோட்டைப் பள்ளியில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மத்திய குழு கூட்டத்தில் 'இலங்கையில் இஸ்லாமியப் பிரசாரப் பணியில் ஈடுபட்டுவரும் தஃவா இயக்கங்களான (மார்க்கப் பிரசார அமைப்புகள்) தப்லீக் ஜமா-அத், தௌஹீத் ஜமா-அத், ஜமா-அதே இஸ்லாமி ஆகிய மூன்று இயக்கங்களின் இறுதி இலட்சியம் ஒன்றாக இருப்பினும் அவை கையாளும் பிரசார முறைகளைப் பொறுத்தே வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே, இந்த ஜமா-அத்துகளில் எதுவும் வழிகெட்டது என்றோ சுன்னத் வல் ஜமா-அத் அகீதாவுக்கு மாற்றமானவை என்றோ கூறமுடியாது. மூன்று ஜமா-அத்துகளும் நேர்வழியில் உள்ளவைதான் என்பது ஜம்இய்யாவின் நிலைப்பாடாகும்' என தெளிவாக பத்வா வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இம்மூன்று தஃவா இயக்கங்களினதும் செல்வாக்குகள் கூடிக்குறைந்த அளவுகளில் மக்களால் பின்பற்றப்படுகின்றன. சில பிரதேசங்களில் தப்லீக் ஜமா-அத்தின் செல்வாக்கு கூடுதலாகவும் சில பிரதேசங்களில் தௌஹீத் ஜமா-அத்தின் செல்வாக்கு கூடுதலாகவும் இன்னும் சில பிரதேசங்களில் ஜமா-அத்தே இஸ்லாமியின் செல்வாக்கு கூடுதலாகவும் காணப்படுகின்றது. இதுதான் இன்றுள்ள யதார்த்தம்.
இந்த இயக்கங்களின் வருகையின் பின்னால் இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள், மௌட்டீக கலாசாரம் என்பன குறைந்து கொண்டே வருகின்றன. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலரே இவ்வாறான உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை விட்டு, பொய்க்கருத்துக்களைத் தெரிவித்தும் வருகின்றனர்.
No comments:
Post a Comment